‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய படம் ‘ஹீரோ’. இந்தப் படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. இதில் நடன இயக்குநர் சதீஷ் கோரியோகிராஃபியில் சிவகார்த்திகேயனும் கதாநாயகி கல்யாணி பிரியதர்சன் இருவரும் இணைந்து நடிக்கும் பாடல் காட்சியைப் படமாக்கிவருகிறார்கள். இந்தப் படத்தில் மேலும் ஒரு கதாநாயகியாக நடிக்க ‘நாச்சியார்’ படப் புகழ் இவானாவைத் தேர்வு செய்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் படம் இது.
ஜீவனின் மறுவரவு
தனித்துவமான நடிப்பால் கவரும் ஜீவன், சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் நடித்த ‘அதிபர்’ படம் ஜெயிக்காமல் போனது. அதனால் மீண்டும் சிறு இடைவெளி எடுத்துக்கொண்டு தற்போது ‘அசரீரி’ என்ற படத்தின் மூலம் ‘ரீ எண்ட்ரி’ கொடுக்கவிருக்கிறார். அறிமுக இயக்குநர் ஜி.கே.இயக்கத்தில் ‘பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்’ சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கும் அறிவியல் புனைவுக் கதையான இது, அதே பெயரில் எடுக்கப்பட்ட குறும்படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது. இதற்கிடையில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஜெயிக்கிற குதிர’ படத்திலும் ஜீவன்தான் நாயகன்.
மீண்டும் ‘பாண்டவர் அணி’
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குப் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதில் தற்போது பதவி வகித்து வரும் ‘பாண்டவர் அணி’யின் சார்பில், நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் கார்த்தியும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். அதேபோல் துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு பூச்சி முருகன், நடிகர், சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். செயற்குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கும் தற்போது பொறுப்பு வகிக்கும் பலரும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். “நடிகர் சங்கக் கட்டிடத்தை முடிக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்” என்கிறது பாண்டவர் அணி.
ரெஜினாவின் ‘வஞ்சகம்’
கடைசியாக ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் நகைச்சுவைக் கதாநாயகி வேடத்தில் கவர்ந்தார் ரெஜினா கஸாண்ட்ரா. அதன்பிறகு பாலிவுட்டிலும் நுழைந்தார். பல தமிழ்ப்படங்களில் நடித்துவந்தாலும் ‘செவன்’ படத்தில் தனக்குச் சவாலான வேடம் அமைத்துவிட்டது என்று குதூகலிக்கிறார். “கதாநாயகியை முன்னிறுத்தும் படங்கள் இனி என்னையும் தேடிவரும். அந்த அளவுக்கு ‘செவன்’ படத்தில் நான் ஏற்றிருக்கும் ‘சரஸ்வதி’ கதாபாத்திரத்தில் நயவஞ்கத்தையும் வில்லத்தனத்தையும் கொட்டியிருக்கிறேன்” என்கிறார்!
கல்விக்கான போராட்டம்!
தரமான கல்வியை குழந்தைகளுக்குப் பெற்றுதர வேண்டிய பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான மனம் மற்றும் பணப் போராட்டத்தைப் பேச வருகிறது அறிமுக இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பிழை’ திரைப்படம். ‘காக்கா முட்டை’ புகழ் ரமேஷ், ‘அப்பா’ படப் புகழ் நாசத் ஆகிய இளம் நட்சத்திரங்கள் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க, மைம் கோபி, ஜார்ஜ், சார்லி எனப் பலரும் இணைந்திருக்கிறார்கள்.