மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதென்றால் விஜய்சேதுபதிக்குச் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது மாதிரி. முன்னணிக் கதாநாயகனாக இருந்துகொண்டே ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஒரு திருநங்கையின் கதாபாத்திரத்தைத் துணிவுடன் ஏற்று நடித்தார்.
வயது முதிர்ந்த வேடங்களில் நடிப்பதற்கும் தயங்காத அவர், ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களில் அதிரவைத்தார். எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடிக்கவும் அவர் தயங்கியதில்லை.
தமிழில் தனது சோதனைப் பயணத்தை அவர் தொடர்ந்துவரும் அதேநேரம் தெலுங்கு, மலையாளத்தில் அபூர்வமாகப் படங்களை ஒப்புக்கொள்ளும் அவர், அங்கேயும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத உறுதியுடன் இருப்பதுதான் ஆச்சரியம்!
மலையாளத்தில் நடிகர் ஜெயராமுடன் இணைந்து ‘மார்கோனி மத்தாய்' என்ற படத்தில் நடித்திருக்கும் அவர் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'சைரா நரசிம்ம ரெட்டி' என்ற வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கில், நடிகர் சாய் தரம் தேஜ்ஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் நடிகராக அறிமுகமாகும் படம் ‘உப்பெனா'. அதில் கதாநாயகி கீர்த்தி ஷெட்டியின் அப்பாவாக அதேநேரம் வில்லனாக நடிக்கிறார் விஜய்சேதுபதி. அதில் காதலை எதிர்க்கும் கதாபாத்திரம் அவருக்கு. சாய் தரம் தேஜ், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.