போர்கள் குதறிப்போடும் மனித வாழ்க்கையின் மிச்சம் எப்படி இருக்கும்? இரண்டாம் உலகப் போரின்போது, யூதர்கள் மீதான ஹிட்லரின் இன வெறுப்பு லட்சக் கணக்கானோரைக் கொன்றழித்தது. பல குடும்பங்கள் சிதறுண்டன.
பல ஆண்டுகள் கழித்தும் அந்தக் கொடூரத்தின் பயங்கர நிழல் பலர்மீது ஒரு இருள் போர்வை போல் கவிந்திருக்கிறது.
செர்பியத் தலைநகர் பெல்கிரேடின் இசைக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெறுகிறார் மிஷா பிராங்கோவ். பெரும்பாலான தருணங்களை இசையுடனேயே கழித்த மிஷா, ஏழை மாணவர்களுக்கு, குறிப்பாக ஜிப்ஸி இனத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு இசைப் பயிற்சி அளிப்பவர்.
ஓய்வு பெற்ற நாளில் அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து வரும் கடிதம் அவரது வாழ்க்கையைப் பற்றிய ரகசியம் ஒன்றைச் சுமந்திருக்கிறது.
அருங்காட்சியகத்துக்குச் செல்லும் மிஷா அதன் இயக்குநரைச் சந்தித்து, கடிதம் குறித்து விளக்கம் கேட்கிறார். அந்தப் பெண் சொல்லும் தகவல் அதுவரையிலான அவரது வாழ்வைப் புரட்டிப் போடுகிறது. ‘பெல்கிரேடு பேர்கிரவுண்ட்ஸ்’ என்ற 1937-ல் பெருமையுடன் தொடங்கப்பட்ட வணிக வளாகக் கட்டிடம், இரண்டாம் உலகப் போரின் போது யூதர்கள், ஜிப்ஸிகள் உள்ளிட்டோரைச் சித்திரவதை செய்யும் வதை முகாமாக, நாஜிக்களால் பயன்படுத்தப்பட்டது.
பழுதான குடிநீர்க் குழாயைச் சரிசெய்ய அந்த இடத்தில் தோண்டும்போது ஒரு சிறிய பெட்டி கிடைக்கிறது. அந்தப் பெட்டி, அருங்காட்சியகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. அது மிஷாவுக்குச் சேர வேண்டியது என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக அந்தப் பெண் கூறுகிறார். அதாவது மிஷா வெய்ஸுக்கு. ‘நான் மிஷா பிராங்கோவ்… வெய்ஸ் அல்ல’ என்று மறுக்கிறார் பெரியவர்.
ஆனால், மிஷா ஒரு யூதர் என்றும் அவரது பெற்றோர் விஷவாயு நிரப்பப்பட்ட வேனில் அடைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் அந்தப் பெண் சொல்கிறார். அதை நம்ப முடியாமல் தவிக்கிறார் மிஷா. கிட்டத்தட்ட 70 வயதான ஒருவர் தன் உண்மையான அடையாளம் வேறு என்று தெரிந்துகொள்ளும் துயரம் சொல்லில் அடங்கக் கூடியதா?
அவருடைய பெற்றோரின் புகைப்படமும் அவரது தந்தை இசாக் வெய்ஸ் எழுதிய ஒரு கடிதமும் இசைக்குறிப்புகள் அடங்கிய சில தாள்களும் அந்தச் சிறு பெட்டியில் கிடைக்கின்றன. அவருடைய தந்தையும் ஓர் இசைக் கலைஞர்தான்.
முற்றுப்பெறாத தனது ஒரு இசைக்குறிப்பைத் தன் மகனுக்காக விட்டுச் சென்றிருக்கிறார். அவற்றைப் படித்த பின்னரும் நம்ப முடியாமல் தன் குடும்ப நண்பர் ஒருவரைச் சந்தித்து விளக்கம் கேட்கிறார்.
மிஷா குழந்தையாக இருந்தபோது அவரை பிராங்கோவ் குடும்பத்தினரிடம் அவரது பெற்றோர் ஒப்படைத்துவிட்டதாகச் சொல்கிறார் அந்தப் பெரியவர். தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், தனது வேரை நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறார் மிஷா.
தன் அண்ணனைச் சந்தித்து அவரிடமும் இது குறித்து விசாரிக்கிறார். அவரும் மிஷாவின் பெற்றோருக்கு நேர்ந்த கதியை அவரிடம் தெரிவிக்கிறார். பின்னர், ‘பெல்கிரேடு பேர்கிரவுண்ட்ஸ்’ வதை முகாம் இருந்த இடத்துக்குச் செல்கிறார் மிஷா. அங்கு ஜிப்ஸி குடும்பங்கள் வசித்துவருகின்றன. தனது பெற்றோர் கொல்லப்பட்ட அந்த இடத்தில் மலர்க்கொத்தை வைத்து வணங்குகிறார்.
அங்குள்ள யூதக் கோயில் ஒன்றின் மதகுருவைச் சந்தித்துப் பேசும் அவர் நாஜிக்களால் கொல்லப்பட்டவர்களின் நினைவாக, தன் தந்தை எழுதிய இசைக் குறிப்பை நிறைவு செய்து அந்த இடத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதாக வாக்களிக்கிறார்.
தந்தையின் இசைக் குறிப்பை நிறைவுசெய்கிறார். எனினும், இசை நிகழ்ச்சி நடத்தும் முயற்சியில் அவருக்கு உதவ, அவர் பணிபுரிந்த இசைக் கல்லூரியின் இசைக் கலைஞர்கள் மறுக்கின்றனர். வெற்றிகரமான இசை கண்டக்டராக இருக்கும் அவருடைய மகனும் அவருக்கு உதவ மறுக்கிறான். இறுதியில் அவரது தோழர்களான ஜிப்ஸி இசைக் கலைஞர்கள் அந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிஷாவும் அவருடைய தந்தையும் உருவாக்கிய இசையை உணர்வுடன் இசைக்கின்றனர்.
அந்த இசையைக் கேட்கும் மிஷாவின் மனதில் பரந்த வெள்ளைப் பனிப் பிரதேசம் விரிகிறது. அதில் மிஷாவின் தந்தையும் தாயும் தோன்றுகின்றனர். வயதான மகன், இளமையான தனது பெற்றோரைக் கட்டியணைத்து கண்ணீர் விடுகிறான். உயிரைப் பிசையும் அந்த இசை வழிய, நிறைவடைகிறது படம்.
இரண்டாம் உலகப் போரின் கொடூரங்களைக் காட்டாமலேயே அதன் அதிர்வை உணரச் செய்யும் இந்தப் படம், கடந்த 2012-ம் ஆண்டு வெளிநாட்டு மொழிகளுக்கான படப்பிரிவில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. புகழ்பெற்ற செர்பிய இயக்குநர் கோரான் பாஸ்கல் ஜெவிக், சாகசங்களற்ற எளிய திரைக்கதையை, நுட்பமான மனித உணர்வுகளைக் கொண்டு நெய்திருக்கிறார்.
இன வெறுப்பாளர்களால் ஜிப்ஸிகள் இன்றும் அனுபவிக்கும் வேதனையையும் படம் பதிவுசெய்கிறது. ஒரு காட்சியில் மிஷா கலந்துகொள்ளும் ஜிப்ஸி குடும்ப திருமண நிகழ்ச்சியின்போது வெளியிலிருந்து சிலர் அந்த வீட்டுக்குத் தீ வைக்கின்றனர். அந்த மக்களின் நிலையைக் கண்டு கலங்குகிறார் மிஷா.
நாஜிக்களால் ஒடுக்கப்பட்ட யூதர்களும், ஜிப்ஸிகளும் வரலாற்றின் ஏதோ ஒரு புள்ளியில் மீண்டும் இணைவது போல் படத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. வலி நிறைந்த இந்தக் கதையைத் தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் மிஷாவாக நடித்திருக்கும் முஸ்தபா நாடாரெவிக்.
ஒரு காட்சியில் தனது சகோதரரிடம் “நாம் உண்மையான சகோதரர்கள் இல்லை என்பதை ஏன் சொல்லவில்லை?” என்று பரிதவிப்புடன் மிஷா கேட்கும்போது, “அதனால் என்ன?” என்று அந்த மனிதர் அவரை அணைத்துக்கொள்வார். மனிதர்களில் உன்னதமானவர்களும் உண்டு என்று சொல்லும் காட்சி அது.