இந்து டாக்கீஸ்

திருமணம் தந்த திருப்பம்! - ஷிவதா பேட்டி

சி.காவேரி மாணிக்கம்

லையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து கவனிக்கத்தக்க நடிப்பைத் தந்தவர் ஷிவதா நாயர். ‘பேசி ரொம்ப நாளேச்சே...’ என்று போன் போட்டால், ‘நீங்கள் விளிக்கின்ன நம்பர் தற்போது பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருக்கிறார்’ என்று மலையாளத்தில் வாய்ஸ் கேட்டதும் யோசித்தபடியே போனை கட் செய்தேன். அடுத்த நிமிடமே லைனுக்கு வந்தவர், “நான் தான் உங்களை அப்படி கலாய்ச்சேன். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி மூலம் எம்.ஏ. பரதநாட்டியம் படிக்கிறேன். இப்போ எனக்கு எக்ஸாம் டைம். ஷூட்டிங்கில் பிஸியா இருந்ததால், இதுவரைக்கும் ஒழுங்காகப் படிக்கவில்லை. அதனால், இரண்டு மாதங்களுக்கு ஷூட்டிங்கிற்கு பிரேக் விட்டு விழுந்து விழுந்து படிச்சிக்கிட்டு இருக்கேன்” என்றவரிடம் ஒரு ‘ரிலாக்ஸ்’ பேட்டி.

என்னென்ன படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

பாபி சிம்ஹா ஜோடியாக நடித்த ‘வல்லவனுக்கு வல்லவன்’ படம் மே மாதம் ரிலீஸாக இருக்கிறது. ‘முரண்’ ராஜன் மாதவ் இயக்கத்தில், நந்தன், நிவாஸ் ஆதித்தனுடன் ‘கட்டம்’ படத்தில் நடித்திருக்கிறேன். இதுவும் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக ‘இறவாக்காலம்’ படத்தில் நடித்திருக்கிறேன். இன்னொரு ஹீரோயினாக வாமிகா நடித்திருக்கிறார். இவை தவிர, மலையாளத்தில் ‘சாணக்ய தந்திரம்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறேன். இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸாக இருக்கிறது.

‘இறவாக்காலம்’ படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் என்ன?

மதுமிதா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன். இதுவரை நான் நடித்த எல்லாப் படங்களிலுமே வித்தியாசமான கேரக்டர்களில் தான் நடித்திருக்கிறேன். ஆனால், இந்தப் படம் எல்லா கேரக்டரையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இருக்கும். அந்த அளவுக்கு நிறைய எமோஷன்ஸுக்குப் படத்தில் வேலை இருந்தது. த்ரில்லர் படமாக இருந்தாலும், உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள எமோஷனல் டிராமா தான் இந்தப் படம்.
 

30chrcj_sshivada 1எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்த அனுபவம் எப்படி?

அவருடைய படங்களைச் சின்ன வயதில் இருந்தே பார்த்து வளர்ந்திருக்கிறேன். ‘குஷி’ படம் என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட். ‘இறைவி’ படத்தில் அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்தேன். அவருடைய ஸ்பெஷல் என்னன்னா, ஒவ்வொரு டேக்கிலும் சில விஷயங்களை மெருகேற்றிக்கொண்டே இருப்பார். ‘போன டேக்ல இந்த விஷயம் இல்லையே...’னு நமக்கே சர்ப்ரைஸா இருக்கும்.

நீங்கள் ஏற்ற வசுந்தரா கதாபாத்திரம் இன்னும் மறக்கப்படவில்லை, கவனித்தீர்களா?

எனக்கும் அது ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனைக்கும் ‘அதே கண்கள்’ படம் ரிலீஸாகி ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. ஆனால், இன்னும் ரசிகர்கள் அந்த கேரக்டரைக் கொண்டாடி வருகிறார்கள். நல்ல நல்ல படங்களாக, கேரக்டர்களாகத் தேர்ந்தெடுத்து நடித்தால் ரசிகர்கள் மனதில் எப்போதும் இருக்கலாம் என்பதற்கு வசுந்தரா கேரக்டர் ஓர் உதாரணம்.

நான் ஒரு படம் முடித்ததும், தொடர்ந்து அதே மாதிரியான கேரக்டர்கள் நிறைய வரும். அப்படித்தான் ‘அதே கண்கள்’ ரிலீஸுக்குப் பிறகு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிப்பது எனக்குப் பிடிக்காது. அதனால், மறுத்துவிட்டேன். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு நல்ல நெகட்டிவ் கேரக்டர் அமைந்தால் நிச்சயமாக நடிப்பேன்.

குறைவான படங்களில் மட்டுமே நடிப்பது ஏன்?

நான் தமிழ், மலையாளம் இரண்டிலுமே நடிக்கிறேன். கடந்த வருடம் மலையாளத்தில் இரண்டு படங்கள், தமிழில் ஒரு படம் ரிலீஸானது. எனக்கு அதுவே போதுமானது என நினைக்கிறேன். என்னுடைய படிப்பு, குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றையும் மெயிண்டெய்ன் செய்ய இதுதான் வசதியாக இருக்கிறது. அதையும் மீறி நல்ல நல்ல கேரக்டர்களாக வந்தால், ‘நோ’ சொல்லாமல் நடிக்கிறேன். அதனால்தான் இந்த வருடம் ஐந்தாறு படங்களாவது ரிலீஸாகும் என நினைக்கிறேன்.

திருமணம் ஆகிவிட்டது என்பதால் திரையுலகம் உங்களிடம் பாரபட்சம் காட்டுவதாக உணர்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை. அப்படிப் பாரபட்சம் காட்டுவது தற்போது குறைந்து வருகிறது என்றே நினைக்கிறேன். ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘கட்டம்’, ‘அதே கண்கள்’, ‘இறவாக்காலம்’ ஆகிய படங்கள் எல்லாமே நான் திருமணமான பின்பு கமிட்டானவை தான். பாலிவுட்டில் வித்யா பாலன், ராணி முகர்ஜி, மலையாளத்தில் மஞ்சு வாரியர் போன்றவர்கள் திருமணமான பின்பும் ஹீரோயின்களாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன்... தமிழில் ஜோதிகா இப்போதும் ஹீரோயினாகக் கலக்கி வருகிறார். இளம் நடிகைகளில் நான் அதைத் தொடங்கி வைத்திருப்பதில் மகிழ்ச்சி.

SCROLL FOR NEXT