24-வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இயன் ப்ளெமிங் எழுதிய புத்தகங்களின் பிரதான பாத்திரமான ஜேம்ஸ் பாண்ட்-ஐ மையமாக வைத்து 1962-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தந்த காலகட்டங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த நடிகர்கள் உலகளவில் பிரபலமடைந்தனர். போகப் போக, ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்திற்கு தேர்வாவது, பெரிய கௌரவமாகவே கருத்தப்பட்டது.
தற்போது, டேனியல் க்ரெய்க், ஜேம்ஸ் பாண்டாக வலம் வருகிறார். இவர் இதுவரை, கேஸினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைஃபால் ஆகிய மூன்று படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளார். இதில், 2012-ல் வெளியான ஸ்கைஃபால் திரைப்படம் 1 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூல் செய்தது. இது, இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அதிக வசூலாகும்.
இதுவரை 23 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், 24-வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம், டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி, லண்டனில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படம், பிரிட்டனில் அடுத்த வருடம் அக்டோபர் 23-ஆம் தேதி அன்றும், அமெரிக்காவில் நவம்பர் 6-ஆம் தேதி அன்றும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனங்களான எம்ஜிஎம் மற்றும் சோனி அறிவித்துள்ளன.
ஸ்கைஃபால் திரைப்படத்தை இயக்கிய சாம் மெண்டேஸ், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தையும் இயக்கவுள்ளார். இதே போல, ஸ்கைஃபால் படத்திற்கு திரைக்கதை எழுதிய ஜான் லோகன், நீல் பர்விஸ், ராபர்ட் வேட் ஆகியோரே இதற்கும் திரைக்கதை எழுதவுள்ளனர்.