பரஸ்பரம் பகைமையும் பழிவாங்கலும் அவற்றின் பின்னணியில் புதைந்திருக்கும் ரகசியங்களுமாக ஓர் ஆண்-பெண் இடையிலான ஆடுபுலி ஆட்டமே ‘10x10’ த்ரில்லர் திரைப்படம்.
தனது வர்த்தகக் கிளையின் திறப்பு விழா மகிழ்ச்சியுடன் வளையவந்த பெண் தொழிலதிபருக்கு அன்றைய தினம் அந்த விபரீதம் நேரிடுகிறது. முன்பின் தெரியாத நபரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கடத்தப்படுகிறார். நகரச் சந்தடியற்ற வீடு ஒன்றில் அதற்கெனத் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட அறையில் அவர் சிறை வைக்கப்படுகிறார். ஒலி புகாத பத்துக்குப் பத்தடி கான்கிரீட் அறையின் ஏற்பாடுகளும் அவனது செயல்பாடுகளும் பணத்துக்காகத் தொழிலதிபர் கடத்தப்படவில்லை என்பதைக் காட்டுகின்றன. வெளியுலகில் நல்லபடியாக நடமாடும் அவன், தான் சிறைபிடித்த பெண்ணிடம் வேறு முகம் காட்டுகிறான். அவனது தேவை அவளது இறந்த காலத்தில் ஒளிந்திருக்கும் சில கறுப்பு ரகசியங்கள் மட்டுமே.
அப்படி அப்பெண்ணே அறியாத உண்மைகள் பலவற்றை அவன் தோண்டி எடுக்கும்போது, இருவருக்குமே எதிர்பார்த்திராத அதிர்ச்சிகள் கிடைக்கின்றன. அங்கே இருவருக்கும் இடையிலான ஆடுபுலி ஆட்டம் வேகம் பிடிக்கிறது. ஒரு கட்டத்தில் அப்பெண் அவனைத் தாக்கிவிட்டு தப்பிக்கவும் முயல்கிறார். அவரது முயற்சி அசந்தர்ப்பமாய் எங்கே முடிகிறது, இருவருக்கும் இடையிலிருந்து அவ்வப்போது வெடித்துக் கிளம்பும் ரகசியங்கள் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பான காட்சி நகர்த்தல்களில் பதில் சொல்ல முயல்கிறார்கள்.
படத்தின் பிரதான தயாரிப்பாளரான நோயல் கிளர்க், பட இயக்குநரான சூஸி இவிங்குடன் சேர்ந்து ஒன்றேகால் மணி நேரத் திரைக்கதையை அமைத்ததுடன் முக்கியப் பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். லூக் எவன்ஸ், கெல்லி ரெய்லி உள்ளிட்டோர் உடன் நடித்திருக்கும் ‘10x10’திரைப்படம், ஏப்ரல் 13 அன்று வெளியாகிறது.