இ
யக்குநரோ நடிகரோ தேசிய அளவில் கவனிக்கத்தக்க ஒரு படத்தைக் கொடுத்துவிட்டால் அந்த இடத்தைத் தக்கவைக்க வேண்டும் என்று விருதுப் படங்களை நோக்கிக் கவனம் செலுத்துவார்கள். ‘ஜோக்கர்’ படத்தின் நாயகி ரம்யா பாண்டியன் ஏற்ற கதாபாத்திரம் அப்படத்தில் பேசப்பட்டது. “ கிடைத்த வாய்ப்புகளில் நடிக்காமல் நல்ல கதைகளுக்காக காத்திருந்தேன். காத்திருந்ததற்கு பலன் கிடைத்தது. தற்போது ‘ஆண் தேவதை’ படத்தில் நடித்து முடித்துவிட்டேன்” என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்...
‘ஜோக்கர்’ மல்லிகா கதாபாத்திரம் பெற்றுத் தந்த பெயரை அடுத்த படத்திலேயே இழந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். அந்தக் கதாபாத்திரம் பெரிய பொறுப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. ஏதோ ஒரு கதை என்று தேர்வு செய்து அதை நாமே கெடுத்துக்கொள்ளக் கூடாது இல்லையா?
‘ஜோக்கர்’ படத்தில் நான் நடித்த மல்லிகா கதாபாத்திரம் பாரட்டப்பட்டாலும் அதில் நடித்தவர் யார் என்பது பெரிய அளவில் பதிவாகவில்லை. நானே சொன்னாலும், “ஓ அது நீங்கதானா, பெங்காலி நடிகைன்னே நினைத்துக்கொண்டேன்” என்று இயக்குநர்களே சொன்னார்கள். படத்தில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் நம்மை வெளிப்படுத்திக்கொள்வது, அடையாளப்படுத்திக்கொள்வது மிக முக்கியம் என்பது அதன் பிறகுதான் தெரிய ஆரம்பித்தது. பலரும் இப்படிக் கேட்கும்போதுதான் அதைக் கற்றுக்கொண்டேன். இனி என்னை அடையாளப்படுத்திக்கொள்வதிலும் கவனம் செலுத்துவேன்.
90 சதவீத பேர் வேலைக்குப் போகும் சூழ்நிலையில் வாழ்பவர்கள். இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால்தான் வாழ்க்கை நகர்கிறது. அப்படி வேலைக்குச் செல்பவர்களின் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, அந்தக் குழந்தைகளுக்கு என்ன தேவை, அவர்களது வயதான பெற்றோர்களின் நிலை ஆகியவற்றைப் பேசும் படம்தான் ‘ஆண் தேவதை’ அதில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்திருக்கிறேன். இரண்டு குழந்தைகளுக்குத் தாய் என்றதும் ஏதோ வயதான பெண்ணாக நடிக்கிறேன் என்று இல்லை. சேலன்ச் அதிகம் உள்ள கதாபாத்திரம் என்று மனம் சொன்னது. கேட்கும்போதும் வித்தியாசமாக இருந்தது. உடனே ஏற்றுக்கொண்டேன்.எத்தனை சவாலான கதாபாத்திரம் என்றாலும் ஏற்கத் தயார்.
இப்போதும் கதை கேட்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். நடிப்புக்கு வருவதற்கு முன்பு பயோ மெடிக்கல் பொறியியல் துறை படித்துவிட்டு ஒரு ஆண்டு அந்தத் துறையில் பணிபுரிந்துவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறேன். இங்கே வந்த பிறகு நடிப்பு பிடித்துப் போய்விட்டட்து. அதற்காகத் தேடி வரும் படங்களை எல்லாம் ஏற்க முடியாது. கமர்ஷியல் படங்கள் தொட்டாலும் அதிலும் எனக்கான கதாபாத்திரத்துக்கு வேலை வேண்டும். எனக்கான கதாபாத்திரங்கள் என்னைத் தேடி வரும் என்று நம்புகிறேன்.
இந்திப் படங்கள் நிறைய விரும்பிப் பார்க்கிறேன். பாலிவுட்டில் நுழைய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.