இந்து டாக்கீஸ்

முகம் புதிது: காதலி திட்டினால் கசக்குமா? - சு.செந்தில்குமரன்

திரை பாரதி

பத்திரிகையாளர்களில் பலர் சினிமா எழுத்தாளர்களாகவும் இயக்குநர்களாகவும் பரிமாணம் காட்டுவது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. ஆனால், நடிகராக மாறுவது அபூர்வம். விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அண்ணாதுரை’ படத்தில் நம்பிக்கைக்குரிய குணச்சித்திரமாக ‘பளிச்’சென்று முகம் காட்டியிருக்கிறார் சு.செந்தில்குமரன். அவருடன் ஒரு சிறு உரையாடல்...

உங்கள் பயணம் எங்கிருந்து தொடங்கியது?

கிராமத்துக் கீத்துக் கொட்டாயில் கல்கோனா மென்றபடி எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி படங்களைப் பார்த்து வளர்ந்த எனக்கு விவரம் புரியாத வயதில் சினிமாவின் மேல் வந்த ஆசை நடிப்பு ஆசைதான். விவரம் புரிந்த பிறகு பார்த்த பாரதிராஜா, பாலசந்தர் படங்கள்தான் திரை இயக்கத்தின் அருமையை உணர்த்தின.

சென்னை மாநகரில் வந்துவிழுந்தபின் ‘ஆனந்த விகடனி’ல் மாணவ நிருபர் திட்டத்தில் தேர்வானபோது கூட சினிமா முயற்சிக்கு அது உதவும் என்பதே என் எண்ணம். என்றாலும் செய்கிற வேலையைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற சிரத்தை காரணமாக சுமாரான பத்திரிகையாளராகவும் ஊடக உலகம் என்னை வளர்த்துக் கொடுத்தது.

பின்னர் பத்திரிகைப் பணியிலிருந்து வெளியேறி ஆர்.வி.உதயகுமார் சாரிடம் உதவி இயக்குநராக முதன்முதலில் . பணியாற்றினேன். அதன் பின்னர் ‘அடாவடி’ என்ற படத்துக்கு இசையமைத்த தேவா சார் இசையில் ‘திசை எட்டும் சதிராட’ என்று தொடங்கும் பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனேன். இளையராஜாவின் இசையில் ‘அஜந்தா’ என்ற படத்தில் ‘வந்தது யார்’ என்ற பாடலை எழுதினேன்.

இளையராஜா சார் “செந்தில்... ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க” என்றபோது எனக்கு சந்தோஷத்தில் மூச்சு முட்டியது. அதே படத்தில் முழு நீள கதாபாத்திரம் ஒன்றில் நடித்தேன். அதற்கும் சற்று முன்பு ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ படத்தில் சிம்பு தேவன் கொடுத்த வாய்ப்பில் நடித்திருந்தேன்.

அதற்கும் சற்றுமுன்பு ‘நந்தவனத் தேரு’ படத்திலும் உதயகுமார் சார் என்னை நடிக்க வைத்திருந்தார். உண்மையில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்திருந்தாலும் ‘அண்ணாதுரை’தான் என்னை அடையாளம் காட்டியிருக்கிறது. ஆனால், என்னோட டைரக்‌ஷன் அனுபவம், நடிப்புக்கும் திரைக்கதை எழுதவும் கைகொடுக்குது.

திரையுலக அனுபவங்கள் கசப்பா, இனிப்பா?

நாக்குக்கு இனிப்பான விஷயம் உடலுக்கு கசப்பு. அதாவது ஆரோக்கியத்துக்குப் பகை. நாக்குக்குக் கசப்பான விஷயம் உடலுக்கு இனிப்பு அதாவது ஆரோக்கியம்னு சொல்றாங்க. என்ன ஒண்ணு. திரை உலகில் கசப்பு, இனிப்பு ரெண்டுமே டோசேஜ் அதிகமா இருக்கும் முன்னேற்றத்துக்குத் துணையா இருக்கும்னா கசப்பை ரசிச்சு ருசிப்போம். நமக்குப் புடிச்ச காதலி திட்டினா, அடிச்சாகூடக் கசக்குமா என்ன, அது கூட ஒரு ருசிதானே..?

‘கற்பகம்’ படத்தின் எஸ் வி ரங்காராவ் போல இவ்வளவு இனிமையான ஒரு மாமனார் கதாபாத்திரத்தை இப்போதுதான் பார்க்கிறோம் என்று ஒரு பத்திரிகையில் பாராட்டி இருந்தார்களே?

பணபலம், ஆள் பலம், தலைக்குப் பின்னாடி ஒளிவட்டம் எதுவுமே இல்லாத என்னைப் போன்ற ஒரு சாதாரண ஆளுக்கு இந்தக் காலத்தில் இதைவிடப் பெரிய பாராட்டு என்ன வேணும் சொல்லுங்க.

பொதுவா பத்திரிகைக்காரங்க நடிச்சா பத்திரிகை உலகம் அதைக் கண்டுக்காது என்று இங்க ஒரு தப்பான கருத்து இருக்கு. அதைத் தமிழ் பத்திரிகை மற்றும் ஊடக சகாக்கள் என் விஷயத்துல தூக்கிப் போட்டு உடைச்சாங்க. ஏதோ அவங்களே ஜெயிச்ச மாதிரி கொண்டாடித் தீர்த்தாங்க.

இன்னும் அவங்க பாராட்டி முடியல அவ்வளவு ஏன் நம்ம தமிழ் இந்து இணையதளம் ‘தொய்ந்து கிடக்கும் திரைக்கதையை தன் நடிப்பால் தூக்கி நிறுத்துகிறார் செந்தில் குமரன்’ என்று ‘அண்ணாதுரை’ படத்துக்கு விமர்சனம் எழுதி இருந்தது. அந்த ஸ்கிரீன் ஷாட்டையும் இணைய இணைப்பையும் மயிலறகைப் பாதுகாக்கும் குழந்தைமாதிரி பத்திரப்படுத்தியிருக்கிறேன்.

ஷூட்டிங் ஆரம்பிச்ச முதல் நாள்ல இருந்தே சீன் பேப்பரைக் கையில் கொடுத்துட்டு எனக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காம சுதந்திரமா நடிக்க வைத்த விஜய் ஆண்டனி சாரும் இயக்குநர் தம்பி சீனிவாசனும்தான் இதுபோன்ற மனம்திறந்த பாராட்டுகளுக்கு முழுக் காரணம்.

விஜய் ஆண்டனியின் தேர்வாக எப்படி மாறினீர்கள்?

பேட்டிகள் கொடுக்கும்போது அவர் ரொம்ப இயல்பா பேசுவார். அதனால படங்களைப் பற்றி அவர்கிட்ட இயல்பா பேசலாம். நான் அவர்கிட்ட அப்படிப் பேசறது அவருக்கு ரொம்ப புடிச்சது. ஒரு நிலையில் “உங்களுக்கு ஏதாவது செய்யணும். என்ன பண்ணணும் சொல்லுங்கன்னு” கேட்டார் நடிப்பு, பாட்டு,வசனம்னு நான் சொல்லி முடிக்கறதுக்குள்ள, “எதாவது ஒண்ணுல கவனம் செலுத்துங்க . அதுல பேரு வாங்கிட்டு அப்புறம் அடுத்ததுக்குப் போங்க” என்றார். நான் சொன்னது நடிப்பு. அந்த தயாளன் என் தட்டில் போட்டதுதான் இந்த மாமனார் கதாபாத்திரம்.

அடுத்து?

முதல் படம் இயக்கும் முயற்சியில் இருக்கும் பலரும் என்னிடம் கதை சொல்ல வருகிறார்கள். இதை நான் பெரிய கவுரவமா நினைக்கிறேன். விஜய் ஆண்டனி சாரோட அடுத்த படத்தில் இன்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஒரு படத்தில் கலகல காமெடி. இன்னொரு படத்தில் பக்கா வில்லன் என்று என் 28 வருடப் போராட்டத்தில் அடுத்துவரும் நாட்கள் அர்த்தமுள்ளவையாக மாறிக்கொண்டிருக்கின்றன.

SCROLL FOR NEXT