‘புறம்போக்கு’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் எஸ்.பி.ஜனநாதன். ‘பேராண்மை’ படத்தைப் போல இதையும் பிரம்மாண்ட பின்னணியில் உருவாக்க இருக்கிறார். இதுவரை விஜய்சேதுபதி ஏற்று நடிக்காத மாறுபட்ட ஆக்ஷன் கதைப் பின்னணி, எஸ்.பி.ஜனநாதனுக்கே உரிய சமூக அக்கறை என இந்தப் படத்தில் இரண்டுக்கும் இடம் உண்டு. தற்போது இறுதிக்கட்ட திரைக்கதை வேலைகளில் இருக்கும் இயக்குநர், ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு பணிகளைத் தொடங்க இருக்கிறார்.
இந்தியாவில் பிளாக் பஸ்டராக வெற்றி பெற்றபின் உலகின் பல்வேறு நாடுகளில் வெளியாகி வசூலைக் குவித்த படம் ‘பாகுபலி’. தற்போது பாகிஸ்தானில் நடைபெறும் காராச்சி சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இதுபற்றி ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாகுபலி’ எனக்குப் பல வெளிநாடுகளில் பயணிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது பாகிஸ்தானின் புகழ்பெற்ற கராச்சி பட விழாவிலும் திரையிடத் தேர்வாகியிருப்பதுடன் எனக்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கிறது.
நான் பாகிஸ்தான் செல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ராஜமௌலி அடுத்து இயக்கும் படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்.டி.அர்., ராம் சரண் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது.
‘காதலில் விழுந்தேன்’, ‘வம்சம்’ படங்களில் கவர்ந்த சுனைனா, விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகவிருக்கும்‘காளி’ படத்தில் நடித்திருக்கிறார். அதைத்தவிர கௌதம் மேனன் இயக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சுனைனா திரையிலிருந்து வலைக் காணொலி உலகத்தில் அடியெடுத்து வைக்கிறார். ‘திரு திரு துறு துறு’ என்ற படத்தை இயக்கிய ஜே.எஸ்.நந்தினி வலைத்தொடர் ஒன்றை இயக்குகிறார். இதில் சுனைனா முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்துவருகிறார்.