எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் செழியன் முதன்முறையாக இயக்கியிருக்கும் படம் ‘டூலெட்’. கொல்கத்தா சர்வதேசப் பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படத்துக்கான விருதை பெற்ற இப்படம் நடந்து முடிந்த பெங்களூரு சர்வதேசப் பட விழாவில் விமர்சகர்கள் விருதை வென்றுள்ளது. இதுவரை 20 சர்வதேசப் பட விழாக்களில் கலந்துகொண்டு 10 சர்வதேச விருதுகளை வென்றுள்ள நிலையில் ‘டூலெட்’ உலகப்பட விழா பயணம் தொடந்து வருகிறது.
சந்தோஷ் நம்பிராஜன், ஷீலா, சிறுவன் தருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படம், ஐடி துறையின் வளர்ச்சிக்குப் பிறகான சென்னையில் எளிய குடும்பம் ஒன்றின் அன்றாடப் போராட்டங்களை நியோ ரியலிச முறையில் பதிவுசெய்திருக்கிறது. நிஜ வாழ்வில் நாம் கேட்கும் சத்தங்கள் மட்டுமே இந்தப் படத்தில் ஒலிக்கின்றன. பின்னணி இசை இல்லாத தமிழ்ப் படம் இது.
பளிச் புதுமுகம்
சின்ன திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் புதிய தொகுப்பாளர் ‘கலக்கப்போவது யாரு?” நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றிருக்கும் வி.ஜே.ரக்க்ஷன். துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துவரும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் அவருடைய நண்பராக, சுவாரசியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் ரக்க்ஷன்.
“ஒரு நல்ல கதையில் தரமான நகைச்சுவையைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் பிரபலமான நட்சத்திரத்துடன் என்னை அறிமுகப்படுத்தும் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி” எனும் ரக்ஷன் களத்தில் நிற்கும் பிஸியான நகைச்சுவை நடிகர்களுக்குப் போட்டியாளராக ஆவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மீண்டும் தேவயானி
சின்ன திரைக்குப் பின் விளம்பரங்களில் தலைகாட்டிக்கொண்டிருந்த தேவயானி, ‘எழுமின்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வந்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான ‘உரு’ த்ரில்லர் படத்தைத் தயாரித்த வி.பி.விஜி இயக்கும் படம் இது. தற்காப்புக் கலையில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் கதை. “தற்காப்புக் கலை மனதுக்குள் வன்முறையை வளர்க்கும் என்று சிறுவர்களின் பெற்றோர்கள் தடுக்கிறார்கள். ஆனால், தேவயானியும் அவருடைய கணவரும் சிறுவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.. சிறுவர்கள் தற்காப்புக் கலையில் என்ன சாதித்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்” என்கிறார் இயக்குநர் விஜி. தேவயானியின் கணவர் விஸ்வநாதனாக நடித்துவருபவர் விவேக்.
விறுவிறு ‘ஜூங்கா’
‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களின் இயக்குநரான கோகுல் புதிதாக இயக்கிவரும் படம் ‘ஜூங்கா’. விஜய் சேதுபதி, சாயிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் கதைப்படி பாரீஸ் நகரில் படமாக்கப்பட்டிருக்கிறது. படத்துக்குப் படம் புதிய தோற்றங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி இதிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார். இதுவொரு காதல் நகைச்சுவைக் கதை என்று கூறும் இயக்குநர் படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் விறுவிறுப்பாக முடித்து தற்போது குரல் சேர்ப்புப் பணிகளைக் கவனித்து வருகிறார். கோகுல் - விஜய் சேதுபதி கூட்டணியின் இரண்டாவது வெற்றியாக இருக்கும் என்கிறது படக்குழு.
தணிக்கையின் பாராட்டு!
இயக்குநர் ஹரியின் உதவியாளர் சஜோசுந்தர் இயக்கத்தில் தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளில் உருவாகியிருக்கும் படம் ‘எக்ஸ் வீடியோஸ்’. இந்தப் படத்தைப் பார்த்த நடிகை கௌதமி உள்ளிட்ட தணிக்கைக்குழு உறுப்பினர்கள் பராட்டியிருக்கிறார்கள்.
படத்தின் தலைப்பு பகீர் என்று இருக்கிறதே என்று இயக்குநரைக் கேட்டால், “ பாலியல் குற்றங்களுக்கு ரிஷிமூலமாக இருக்கும் ஆபாச இணையதளங்கள் பற்றிப் பேசுகிற படம். அப்படிப்பட்ட இணையதளங்களின் பெயரில் உலக அளவில் செயல்படும் நிழலுலகக் கும்பலின் முகமூடியைக் கிழிக்கும் படம். இன்றைய செல்பி மோகம் எந்த அளவுக்கு விபரீதமானது என்று தெளிவுபடுத்துகிறது கதை.
ஒரு ரகசியம் கேமராவில் பதிவுசெய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் அல்ல. அதை எவ்வளவுதான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் சைபர் நிழலுகம் அதைத் திருடிவிடும். ஆபாச இணையதளங்களுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டதுபோல இந்தியாவிலும் விதிக்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் படம்” என்கிறார். அஜய்ராஜ், நிஜய், ஷான் உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் படத்தின் நாயகியாக ஆக்ருதி சிங் நடித்துள்ளார்.