கா
மிக்ஸ் வரலாற்றின் மிகப் பெரும் சூப்பர் ஹீரோ திரைப்படமாகவும், அவெஞ்சர்ஸ் வரிசையின் மூன்றாவதாகவும், ஏப்ரல் 27 அன்று வெளியாக உள்ளது ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம். மார்வல் சூப்பர் ஹீரோக்கள் திரைப் பிரவேசத்தின் பத்தாவது ஆண்டுக் கொண்டாட்டமாக வெளியாகும் இப்படத்தில், வழக்கமான அவெஞ்சர்ஸ் ஹீரோக்களுடன் மார்வல் யுனிவர்ஸின் இதர ஹீரோக்களுமாக திரை கொள்ளாத காமிக்ஸ் நாயகர்கள் அதகளம் செய்திருக்கிறார்கள்.
அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, தோர், ஹல்க், ஸ்பைடர் மேன் தொடங்கி இருபதுக்கும் மேற்பட்ட சூப்பர் ஹீரோக்களுக்கு ஈடுகொடுக்கும் சூப்பர் வில்லன் ‘தானோஸ்’. டைட்டன் கோளின் இளவரசனாகப் பிறந்து பெற்றோரையே கொல்லும் கொடூர தானோஸுக்கு பிரபஞ்சத்தின் மரணக் கடவுள் மீது காதல் வருகிறது. அவளுக்காக ‘இன்ஃபினிட்டி ஸ்டோன்ஸ்’ தேடலில் பூமிக்கும் வருகிறான் தானோஸ். அவனுக்கு எதிராகக் கூட்டணி அமைக்கும் சூப்பர் ஹீரோக்களின் முயற்சி என்னாகிறது, இரு தரப்பு போரில் தானோஸால் கொல்லப்படும் சூப்பர் ஹீரோ யார் என்பதான ரசிகர்களின் கேள்விகளுக்குத் திரைப்படம் பதில் சொல்கிறது.
சவாலான திரைக்கதையில் அத்தனை ஹீரோக்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறதா, வழக்கமான நகைச்சுவைக் காட்சிகள் உண்டா, படத்தில் இறந்து போகும் சூப்பர் ஹீரோ அயர்ன் மேனா அல்லது வேறொருவரா என்பது போன்றவை ரசிகர்களைக் குடையும் கேள்விகளாக உள்ளன.
இந்தியாவிலும் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் சூப்பர் கதாபாத்திரங்களுக்குப் பின்னணிக் குரல் வழங்கும் உள்ளூர் கதாநாயக நடிகர்கள் குறித்து சமூக ஊடகங்களில் ஓட்டெடுப்பு நடத்தினார்கள். தெலுங்கு ரசிகர்களின் பேராதரவுடன் வில்லன் தானோஸூக்கு ராணா டகுபதி தெலுங்கு பதிப்பில் குரல் கொடுத்திருக்கிறார்.
ராபர்ட் டௌனி ஜூனியர், க்ரிஸ் ஹெம்ஸ்வர்த், ஸ்கார்லட் ஜோஹன்ஸன் உள்ளிட்டோர் நடிக்க, சகோதர்களான ஆண்டனி ருஸோ, ஜோ ருஸோ திரைப்படத்தை இயக்கி உள்ளனர். மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸின் மோஷன் பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது.