ம
லையாளப் படவுலகில் கதாசிரியர்கள் - இயக்குநர்கள் கூட்டணி இரு தலைமுறைகளாகத் தொடர்கிறது. ஆனால் தமிழில் பாரதிராஜா-ஆர்.செல்வராஜ், பாலசந்தர்-அனந்து போன்ற கூட்டணி தொடரவில்லை. ஆனாலும் எப்போதாவது கவனம் ஈர்க்கும் கதாசிரியர்கள் ஓரிருவர் இங்கே தென்படவே செய்கிறார்கள். தற்போது பாக்கியம் சங்கர். ‘கோ 2’, ‘ வீரா’படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கவனிக்க வைத்திருக்கிறார். அவரைச் சந்திந்து உரையாடியதிலிருந்து…
அதுமாதிரியான எழுத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய இயக்குநரும் தயாரிப்பாளரும் கிடைத்ததால்தான் இது சாத்தியமானது. முதலில் இந்தப் படத்தின் மையக் கதாபாத்திரத்துக்கான பெயரே குஸ்மி என்றுதான் வைத்திருந்தேன். சவுண்ட் இஞ்ஜினீயர்கூட, “என்ன இது புது வார்த்தையா இருக்கு” என ஆச்சரியமாகக் கேட்டார். மன்றத்தில் முறைவாசல் வேலை பார்க்கிற மாதிரியான பையன்களை, நாங்கள் ‘குஸ்மி’ன்னு கூப்பிடுவோம். ‘டபார்’என்றால் போட்டுக்கொடுப்பவன். அதிலும் ‘டபுள் டபார்’ என்றால் அவன் எவ்வளவு பெரிய ஆளா, இருக்கணும்?
இதில் பயன்படுத்திய சில சொற்களுக்காக படம் பாதகமாகவும் சாதகமாகவும் விமர்சிக்கப்பட்டது.இல்லையா?
மதுரையை மையமாகக் கொண்ட சில படங்களில் சில வசைச் சொற்களைச் சாதாரணமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது எப்படி அங்கு கலாச்சாரமாக மாறிவிட்டதோ அதுபோல்தான் சென்னையிலும். இந்த வசைச் சொற்கள், வசைக்கு மட்டும் பயன்படுவது அல்ல. சும்மா பேச்சுக்கு இடையில் பயன்படுத்தப்படுகிறது. சென்னையை பாஷையைப் பொறுத்தவரை தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, உருது எனப் பல மொழிச் சொற்கள் கொண்டுதான் உருவாகியிருக்கிறது. இது தனித்துவமான அம்சம். இதற்கு ஒரு முழுமையான அகராதி இல்லை. அதை உருவாக்க வேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறது.
வடசென்னை அரசியலில் மன்றங்களுக்கு முக்கியப் பங்குண்டு. சிங்காரவேலர் உள்ளிட்ட தலைவர்களின் பெயரில் பல மன்றங்கள் இருக்கும். இந்தப் படத்தில் அங்கு என்ன நடக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறோம். கம்யூனிஸ்ட் இயக்க மன்றங்கள், திராவிட இயக்க மன்றங்கள் போன்று அரசியல் பாடம் எடுப்பவையும் இருந்தன.
அதில் அரசியல் ஒன்றும் இல்லை. அவர்களுக்கு இவை எல்லாம் வெறும் பெயர்கள். அரசியல்செய்பவர்களைப் பொறுத்தவரை தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரு இடம்தான் மன்றம். அவ்வளவுதான். இதெல்லாம் தெரியாமல் அறியாமையால் அதற்குப் பலியாகும் வடசென்னை இளைஞர்கள் இருவரின் கதைதான் இது.
அவர்கள் இயல்பிலே வன்முறையாளர்கள் அல்ல. மன்றத் தலைவர் ஆகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என முட்டாள்தனமாக நினைக்கிறார்கள். ஒருவிதத்தில் அவர்கள் அப்பாவிகள். அதைத்தான் அதில் சொல்லியிருக்கிறேன். அதில் ஒரு சுவாரசியம் வந்துள்ளது படத்துக்குப் பலம்தான்.
யுகபாரதி பாடல் எழுதுவதற்கு முன்பே எனக்கு நண்பன். சிநேகனும் எங்கள் கூட்டத்தில் உண்டு. நா.முத்துக்குமாரும் வந்துபோவார். அவர்கள் சங்க இலக்கியம், பாடல்கள் எனத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். பார்ப்பதற்கே வியப்பாக இருக்கும். நான், ராஜீமுருகன், அவனது அண்ணன் சரவணன் என நாங்கள் கதைகள் பற்றித்தான் பேசுவோம். தமிழ்த் திரையிசைப் பாடல்களுக்கு நாமும் ஏதாவது நன்மைசெய்ய வேண்டும் என நினைத்தேன். அதனால் பாட்டு எழுதக் கூடாது என்று முடிவெடுத்தேன்.
கதையோ கட்டுரையோ நம்முடைய விருப்பத்தில் சுதந்திரமாக எழுதலாம். ஆனால், சினிமா எழுத்தாளனுக்குக் காட்சி அறிவு அவசியம். அதை எழுத்தாளன் தெரிந்துகொள்ள வேண்டும்.
பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன். எழுத்தாளர் பாலகுமாரனோடு பணியாற்றியுள்ளேன். சினிமாவில் ‘உப்புமா கம்பனி’ எனச் சொல்வார்கள். முழுப் படத்துக்கும் வேலை பார்ப்போம். ஆனால் படமே வெளிவராது. அதுமாதிரி ‘உப்புமாப் பட’ங்கள்கூட எனக்குச் சினிமாவைச் சொல்லிக்கொடுத்துள்ளன.
சினிமா என்பது வர்த்தகத்தை மையமாகக் கொண்டது. நாம் சொல்லும் ஒரு காட்சி ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்குச் சுவாரசியம் தராது எனும்போது அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சினிமாவில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். மக்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வார்கள். தவறாக இருந்தால்கூட மன்னித்துவிடுவார்கள். ஆனால் அதில் சுவாரசியம் இருக்க வேண்டும். அதை மட்டும் தவறவிடக் கூடாது.
இயக்குநர் பாரதிராஜா, சூட்டிங் போவதற்கு முன்னால் எழுத்தாளர்களுக்கு முத்தம் தருவார் எனச் சொல்வார்கள். இயக்குநர் பாலசந்தரும் கதையாசிரியர் அனந்துவும் அவ்வளவு இணக்கமாக வேலை பார்த்துள்ளனர். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்றால், எழுத்தாளர்களே இயக்குநர்களாக ஆனார்கள். உதாரணமாக கே.பாக்யராஜைச் சொல்லலாம். அதனால் அவர்களே தங்கள் சினிமாவுக்குக் கதை எழுதிக்கொண்டார்கள். இன்றைக்கு அது மாறியிருக்கிறது. இளம் இயக்குநர்கள் பலர் புதிய களத்தில் வேலை பார்க்க விரும்புகிறார்கள். எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பாஸ்கர் சக்தி உள்ளிட்ட பலரும் இன்றைக்கு வேலை பார்க்கக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. இந்தக் கட்டத்தில் என்னைப் போன்ற புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
எனக்கு பிரியாணியே போடுகிறது. என் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறது. எனக்கு நிறைய நண்பர்களைக் கொடுத்திருக்கிறது.
இப்போதே அதற்கான வாய்ப்புகள் கனிந்து வரத்தான் செய்கின்றன. ஆனால், எழுத்தாளனாக ‘இவன் கொஞ்சம் எழுதுவான்’எனப் பெயர் எடுக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் இயக்கம். இப்போது இயக்குநர் அனீஸின் ‘பகைவனுக்கருள்வாய்’ படத்துக்கு இணைந்து வசனம் எழுதியிருக்கிறேன். இயக்குநர் அகமதுவின் அடுத்த படத்திலும் பங்காற்றியுள்ளேன்.