‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’, ‘டூரிங் டாக்கீஸ்’, ‘பட்டதாரி’ படங்களின் நாயகனாகக் கவனம் பெற்றவர் அபிசரவணன். மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கும் முன்பே மதுரை பாலமேட்டில் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு செய்திகளில் அடிபட்டவர். டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் அவர்களோடு கடைசிவரை இருந்தவர். மக்கள் எங்கே போராடினாலும் அங்கே இவரைத் தவறாமல் பார்க்கலாம்… உண்மையில் இவர் நடிகரா, போராளியா? அவரிடமே கேட்டபொழுது…
வளரும் நடிகராக இருக்கிறீர்கள் ஆனால், தொடர்ந்து சமூக நிகழ்வுகளில், போராட்டங்களில் நேரடியாகப் பங்கெடுக்கிறீர்கள். இது சினிமாவில் உங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளும் உத்தியா, உண்மையான சமூக அக்கறையா?
சிறுவயது முதலே எனக்குப் போராடும் குணம் உண்டு. நாம் உடுத்துகிற உடை, அணியும் காலணி, உண்ணும் உணவு, வாழும் வீடு, பயணிக்கும் சாலை, பார்க்கும் வேலை என எல்லாவற்றிலுமே சக மனிதர்களின் பங்களிப்பு இல்லாமல் நான் என்பதும் நாம் என்பதும் சாத்தியமல்ல. அவ்வளவு ஏன், நம் மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற மனதின் ஆரோக்கியத்துக்கும் நாம் மட்டுமே காரணம் அல்ல.
அதில் சக மனிதர்களின் தாக்கமும் சமூகத்தின் தாக்கமும் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது நம் கண்முன்னால் நம் கலாச்சார அடையாளம் காணாமல்போகும்போது, நமக்குச் சோறு தரும் விவசாயி அரைஆடையில் சுட்டெரிக்கும் சாலையில் அமர்ந்து, அதுவும் நாட்டின் தலைநகரில் திருவோடு ஏந்திப் போராடும்போது பார்த்துக்கொண்டு எப்படிச் சும்மா இருக்க முடியும்? சினிமாவில் சில படங்களில் நடித்தால் போதும், மக்களுக்கு நம்மை அடையாளம் தெரிந்துவிடும். நான் பத்துப் படங்களில் நடித்துவிட்டேன். அவற்றில் ஆறு படங்கள் வெளிவந்துவிட்டன. அப்படியிருக்கும்போது நான் விளம்பரத்துக்காக ஏன் போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்?
சினிமாவுக்குள் எப்படி வந்தீர்கள்?
சினிமாவுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் அப்தும் கலாம் ஐயாவின் ரசிகன். அவரது அக்னிச் சிறகுகள் புத்தகத்தைப் படித்து வளர்ந்தவன். சொந்த ஊர் மதுரை. சாதாரண நடுத்தரக் குடும்பம். ஐ.டி.ஐயில் மோட்டார் மெக்கானிக், பிறகு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ, அதன் பிறகு நான்கு ஆண்டுகள் பி.இ, அதன் பிறகும் தாகம் அடங்காததால் எம்.பி.ஏ முடித்தேன். முதலில் டி.வி.எஸ் கம்பெனியில் பணியாற்றினேன். எம்.பி.ஏ முடித்தபின் பெங்களூருவில் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் மனிதவளத் துறையில் பணியாற்றினேன்.
மேடையில் நன்றாகப் பேசுவேன். அதைப் பார்த்து, ஊழியர்களுக்கான தன்னாற்றல் பயிலரங்கில் வகுப்பு எடுக்கும் வாய்ப்பை எனது உயரதிகாரி எனக்கு வழங்கினார். அந்த வகுப்பில் ஒரு எதிர்பாராத திருப்பம். வகுப்பில் அடிக்கடி போன் பேசிக்கொண்டிருந்த ஒரு இளம் ஊழியர் மீது சாக்பீஸ் துண்டை வீசி அவரது கவனத்தைத் திசைதிருப்ப முயன்றேன். கோபப்பட்ட அவர் “உன் ஹீரோயிசத்தை சினிமாவில் போய்க் காட்டு” என்றார். ஒரு லட்சத்துக்குச் சில ஆயிரங்கள் குறைவான ஊதியம். வேலையிலிருந்து வெளியேறி கையிலிருந்த சேமிப்புடன் சாலிகிராமத்தில் வந்து தங்கி திரைப்படங்களில் வாய்ப்புத் தேட ஆரம்பித்துவிட்டேன். அப்படித்தான் ‘அட்டகத்தி’, ‘குட்டிபுலி’ படங்களில் கதாநாயகர்களின் நண்பனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு எனக்கு நாயகன் வாய்ப்பு வழங்கியவர் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன்.
போராட்டக் களங்களில் நேரடியாகப் பங்கேற்றபோது எப்படி உணர்ந்தீர்கள்?
போராட்டம் என்றாலும் மக்கள்படும் கஷ்டம் என்றாலும் நேரடியாகக் களத்துக்குச் சென்று பார்க்கும்போதுதான் அவர்களது போராட்டத்தின் ஆழம் புரியும். அவர்களுக்கு என்ன தேவை என்பது தெரியும். 2004-ல் சுனாமியின்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். கையில் இருந்த சேமிப்பில் தேவையற்ற பொருட்களை வாங்காமல் நேரடியாக நாகப்பட்டினம் போய் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு அவற்றை வாங்கி அவர்கள் கையிலேயே நேரடியாகக் கொடுத்தபோது அவர்களின் கண்களில் வழிந்த அன்பை நீங்கள் காண வேண்டுமே!
ஒக்கி புயல் அடித்து ஓய்ந்ததும் நண்பர்கள் செய்த உதவிகளோடு நாப்கின் உட்படப் பல பொருட்களை வாங்கி ஒரு கார் நிறைய அடைத்துக்கொண்டேன். கன்னியாகுமரிக்குச் சென்று போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்ட ஒருபகுதியின் ஒரு தெருவில் விநியோகித்துக்கொண்டிருந்தேன். 20 வயது மதிக்கத்தக்க ஒரு தங்கை ஓடிவந்தாள், “அண்ணே … இந்தச் சூழ்நிலையில் அம்மாகிட்டபோய் இதெல்லாம் கேட்டா என்ன சொல்வாங்களோன்னு பயந்துபோய் கிடந்தேன். கடவுள் மாதிரி நீங்க வந்தீங்க, இன்னொரு பாக்கெட் நாப்கின் கொடுங்க” என்று கண்கள் கலங்க வாங்கிப்போனாள்.
இதுபோன்ற நெகிழ்ச்சியான அனுபவங்கள் ஒருபக்கம் என்றால் பாலமேட்டில் போலீஸிடம் தடியடி வாங்கிக் கைதானது, டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளுடன் சாலையிலேயே தங்கியிருந்து, சாலையிலேயே குளித்து, அவர்கள் சாப்பிட்டதையே சாப்பிட்டு அவர்களோடு கைதானதையும் என்னால் மறக்க முடியாது. தமிழ் மக்களின் உணர்வுகளை மற்ற தென்னிந்திய மக்கள் கண்டுகொள்வதில்லை என்ற பேச்சு இருக்கிறது. அவர்களிடம் நாம் அதை எதிர்பார்ப்பதைவிட நாம் அவர்களிடம் நீங்கள் எனது சொந்தங்கள் எங்களுக்காகப் போராடுங்கள் எனக் கேட்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். தற்போது ‘பிரிட்டீஷ் பங்களா’ என்ற மலையாளப் படத்திலும் நடித்துவருகிறேன். மே 17 அன்று எனது படக்குழுவில் இருந்த அனைத்து மலையாளச் சகோதரர்களையும் ஈழத்தில் இறந்த நம் மக்களுக்காக மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்த வைத்தேன்.
ஜல்லிக்கட்டில் மாடுமுட்டி இறந்த திண்டுக்கல் இளைஞனின் தங்கையைத் தத்தெடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களது ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்துக்கு இது முரணாக இருக்கிறதே?
ஜல்லிக்கட்டுதான் எனது உயிர். முதல்வரும் துணைமுதல்வரும் கலந்துகொண்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தங்கக்காசுகள், கார் உட்படக் கோடி ரூபாய்மேல் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால் முதல்நாள் பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாரிமுத்து என்ற இளைஞனின் உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்துச்செல்லக்கூடப் பணமில்லாத அவல நிலையில் அவரது குடும்பம் இருப்பதைக் கேள்விப்பட்டுப் பதறிப்போனேன்.
அவரது உடலை வாங்கிச் சென்று அடக்கம் செய்யச்செல்லும்போதுதான் தெரிந்தது, அவன் ஈட்டிவந்த 4,500 ரூபாய் மாத ஊதியத்தில்தான் அவனது குடும்பம் வாழ்கிறது என்று. மாட்டினால் உயிரிழந்த அந்தக் குடும்பம் மாட்டாலேயே பிழைக்கட்டும் என்று நாட்டுக் கறவை மாடு வாங்கிகொடுத்ததுடன் மாரிமுத்துவின் தங்கை அன்னக்காமுவையும் ஒரு அண்ணனாகத் தத்தெடுத்துகொண்டேன். ஒரு வைப்புத்தொகை அன்னக்காமுவின் பெயரில் போட்டு அதன் மூலம் வரும் வட்டியை அந்தக் குடும்பத்துக்கு கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.
இப்போது நீங்கள் நடிகரா, போராளியா?
நடினாக இருப்பது, போராளியாக இருப்பது இரண்டுமே எளிதானது அல்ல, தவறானதும் அல்ல. மக்களை மகிழ்விப்பவனாக மட்டும் நடிகன் இருந்தால் போதாது, அவர்களில் ஒருவனாக இருப்பதும் முக்கியம் எனும் அபிசரவணன் ‘சாயம்’ ‘சூரபத்மன்’, ‘திரு வாக்காளர்’ உட்பட மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் ‘வெற்றிமாறன்’ என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது.