இந்து டாக்கீஸ்

பார்த்திபன் நேர்காணல்: நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை!

கா.இசக்கி முத்து

“ரஜினி சாரின் வாழ்த்தைப் பார்த்தவுடன் உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. திடீரென்று ஒரு முனிவர் நம் கண்முன் தோன்றி வரம் அளித்துவிட்டு மறைந்தால் எப்படியிருக்குமோ, அப்படி இருந்தது” என்று உற்சாகம் கொப்பளிக்கப் பேசத் தொடங்குகிறார் பார்த்திபன். 'ஒத்த செருப்பு ' படத்தில் நடித்து, தயாரித்து, இயக்கி, முடித்து, அதன் பின்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தவரிடம் உரையாடியதிலிருந்து...

‘ஒத்த செருப்பு’ படத்தில் உங்கள் பாணி நகைச்சுவை கிடையாதா?

யாருங்க சொன்னது... இதில் காமெடி இருக்கிறது. இது சீரியஸ் படம் கிடையாது. ஆனால், காமெடியை கொஞ்சம் குறைத்திருக்கிறேன். கதாநாயகனின் மனத்தில் இருக்கும் கோபத்தில் அவன் செய்யும் பகடியும் இருக்கிறது.

இந்தக் கதையைப் பொறுத்தவரை காமெடி கூடிவிட்டது என்றால், நாம் சொல்ல வந்தது  பார்வையாளர்கள் மனத்தில் பதியாமல் போய்விட வாய்ப்பிருக்கிறது.

ஏன் இப்படியொரு தலைப்பு?

மாசிலாமணி என்ற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டும்தான் படத்தில். அவனுடைய வாழ்க்கையில் உள்காயம்போல் ஒரு வலி. 'நீ கொலை செஞ்சியா.. இல்லையா..?' என்ற கேள்விக்கு, அவன் 'ஆமா சொல்றானா... இல்லை சொல்றானா' என்பதுதான் படம். அந்தக் கொலைக்கு ஆதாரமாக இருப்பது ஒரு செருப்பு.

அதன் அளவு 7. ஆனால், கதாநாயகன் மாசிலாமணியின் கால் அளவோ 11. இந்தக் கொலைக்குள் ஏன் இவனைச் சம்பந்தப்படுத்துகிறார்கள், இவன் யார் என்பதுதான் திரைக்கதை. அதற்காகத்தான் 'ஒத்த செருப்பு - சைஸ் 7' எனத் தலைப்பு வைத்தேன்.

ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் வைத்து, படம் பண்ணலாம் என்று எப்போது தோன்றியது?

15 வருடங்களுக்கு முன்பு தோன்றிய விஷயம். இப்போதுதான் கைகூடியது. ரசூல் பூக்குட்டி, ராம்ஜி, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட கலைஞர்களை வைத்துத் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட படமாகப் பண்ணியிருக்கிறேன்.

வேறு தயாரிப்பாளர்கள் யாரும் இக்கதையைத் தயாரிக்க முன்வரவில்லையா?

கிடைக்க மாட்டார்கள். ரொம்ப சாதாரண ஒரு படத்தைத் தொழில்நுட்பரீதியாக நல்ல தரத்துடன் எடுத்துவிட்டால், திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவிடலாம்.

இந்தப் படம் இங்கேயும் திரைப்பட விழாக்களிலும் ரசிக்கப்பட வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வேண்டும் என்பதுதான் என் இலக்கு. அதற்கு இயக்குநர் பார்த்திபனுக்குச் சுதந்திரம் தேவை.

முன்னணி ஹீரோக்களை வைத்து நீங்கள் ஏன் படம் இயக்க முடியவில்லை?

ஏதாவது ஒரு விழாவில் பார்க்கும்போது, 'நம்ம ஒரு படம் பண்ணலாமா சார்' என்று கேட்பேன். 'பண்ணலாம் சார்' எனச் சொல்வார்கள். ஒரு கலைஞனுக்கு அவனுடைய சுயமரியாதை ரொம்ப முக்கியம்.

அவர்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள் என்றால், அதை என் கதையில் காட்டுவேன். மீண்டும், மீண்டும் கதவைத் தட்டி 'ஒரு காலத்தில் நான் ஒரு பெரிய இயக்குநர் சார். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்' எனக் கேட்பதை, எனக்கு நானே அவமரியாதை செய்துகொள்வதாக நினைக்கிறேன்.

எனது திறமை அவர்களுக்கும் அவர்களுடைய திறமை எனக்கும் தேவைப்படுவதாக இருக்க வேண்டும். இங்கே திறமைசாலிகளை யாரும் மதிக்க மாட்டார்கள். பார்த்தால் இவர் திறமையானவர் என்று சொல்வார்களே தவிர, இவன் கமர்ஷியலாக வெற்றி கொடுத்தானா என்றுதான் யோசிப்பார்கள். அதனால் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

தயாரிப்பாளர் சங்கம் நடத்திய 'இளையராஜா 75' இசை நிகழ்ச்சி குழுவிலிருந்து ஏன் வெளியே வந்தீர்கள்?

இளையராஜா நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நந்தா - ரமணா இருவருமே நான் கலந்துகொள்வதை விரும்பாமல் அவமரியாதையாக நடத்தினார்கள். அவர்களோடு போட்டியிட விரும்பாமல், என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்துவிட்டு வந்துவிட்டேன்.

அவர்கள் அப்படி நடந்துகொண்டதன் பின்னணியில் விஷாலும் சம்பந்தப்பட்டிருக்கார் என்று தெரிந்தவுடன் கோபம் வந்துவிட்டது. உனக்காகத்தானே உள்ளே வந்தேன், இனிமேல் நான் ஏன் இருக்கணும் என்று வெளியே வந்துவிட்டேன்.

நான் சின்ன வயதில் நடித்த படம் என்று ‘துருவ நட்சத்திரம்’ படம் தொடர்பாக நீங்கள் கூறிய கருத்து சர்ச்சையானதே...

யாரையும் வருத்தப்பட வைக்க வேண்டும் என்று அந்தக் கருத்தை நான் சொல்லவில்லை. கிண்டலாகத்தான் சொன்னேன். சம்பளம் வாங்கவில்லையா, நடிக்க வில்லையா என்று கேட்கிறார்கள். ஆனால், எனது கிண்டலை யாரும் புரிந்துகொள்ளவில்லை.

‘துருவ நட்சத்திரம்’ படத்தைப் பொறுத்தவரை நான் சொன்னது வெறும் கிண்டல்தான். பல வருடங்களாக அந்தப் படம் தயாரிப்பில் இருக்கிறது.

மம்மூட்டி சாரைப் பார்த்து 500 வருஷமா அழகாகவே இருக்கீங்களே என்று சொன்னால், அவருக்கு 500 வயது என்று அர்த்தமில்லை. இன்னும் இளமையாகவே இருக்கீங்களே என்ற கிண்டல்தான் அது.

இளையராஜா நிகழ்ச்சிக்குப் பிறகு பலரும் கேட்கும் கேள்வி, மீண்டும் 'ஏலேலோ' படம் தொடங்கப்படுமா என்பதுதான்....

இளையராஜா நிகழ்ச்சி முடிந்தவுடன், ரஹ்மான் சார் எனக்கொரு மெயில் அனுப்பினார். ’ஏலேலோ’ கதையை அனுப்பி வையுங்கள் என்றார். அது பெரிய பட்ஜெட் படம். நான் கொஞ்சம் மெருகேற்றி அனுப்பி வைத்த கதையில், முன்பு ரசித்த விஷயங்கள் இல்லையே, மறுபடியும் அனுப்புங்கள் என்று தெரிவித்துள்ளார். 20 வருடங்கள் கடந்தாலும் அக்கதையை அந்த அளவுக்கு ரசித்துள்ளார். நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்.

உங்களது முக்கியப் படங்களுக்கு இரண்டாம் பாகம் பண்ணும் எண்ணமில்லையா?

’புதிய பாதை 2’ ஏன் பண்ணக் கூடாது என்று தயாரிப்பாளர் ஒருவர் கேட்டார். ’கதை தயாராக இருக்கிறது, பணம் இருக்கா சொல்லுங்க’ என்றேன். ‘உள்ளே வெளியே 2’ திரைக்கதை தயாராக இருக்கிறது.

இப்படம் முடிந்தவுடன் அதைப் பண்ணலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ தொடங்கப்பட்டால் அதில் நான் இருப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.

SCROLL FOR NEXT