இந்து டாக்கீஸ்

டிஜிட்டல் மேடை 24: இதுவும் சட்ட போராட்டமே!

எஸ்.எஸ்.லெனின்

திரைப்படம்,  தொலைக்காட்சி ஊடகங்களால் பூர்த்தி செய்யப் படாத படைப்பு வெளியை இணைய மேடை ஈடுகட்டி வருகிறது. நிறைய குப்பைகள் இங்கே குவிந்துகிடந்தாலும் படைப்புச் சுதந்திரம் காரணமாகவே அதன் இருப்பும் நாளுக்கு நாள் ஸ்திரமாகிக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் பாலினச் சிறுபான்மையினர் தங்கள் மீதான பாகுபாட்டையும் சமூகக் களங்கத்தையும் துடைத்து நீதி வென்ற நிஜக் கதையைச் சொல்லும் ‘377 அப் நார்மல்’ இணையமேடையின் சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மற்றொரு படைப்பு.

இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 377-ன் கீழ், தன்பாலின உறவைக் குற்றமாக வரையறுத்தது. இந்தச் சட்டப் பிரிவுக்கு எதிராக, பாலினச் சிறுபான்மையினர் 150 ஆண்டுகளுக்கும் மேலாகப் புழுங்கி வந்தனர். அந்த நிலைமை மாறி 90-களில் தொடங்கிய பல்வேறு விழிப்புணர்வுப் போராட்டங்கள், கடந்த 10 வருடங்களாகத் தீவிரமெடுத்த நீதிமன்ற முறையிடல் கள் ஆகியவற்றுக்குப் பின்னர் கடந்த செப்டம்பரில் ‘தன்பாலின உறவு குற்றமல்ல’ என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு  தீர்ப்பு வழங்கியது.

‘ஜீ5’ ஒரிஜினல் வரிசையில் இந்தியில் வெளியாகி இருக்கும் ‘377 அப் நார்மல்’ வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தச் சட்டப் போராட்டத்தையும், அதனை முன்னெடுத்தவர்களின் பின்புலக் கதையையும் விவரிக்கிறது. தலைப்பிலுள்ள ‘அப்’ என்பது ‘இப்போது’ எனப் பொருள்படும் இந்தி பதத்தில் இடம்பெற்றுள்ளது.

பெரும்பாலான திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படைப்புகளில் கேவலமான நகைச்சுவைக்கும் வில்லத்தனத்துக்கும் மட்டுமே கையாளப்பட்ட பாலினச் சிறுபான்மையினருக்கு, இணைய மேடை அலாதியான அங்கீகாரம் தந்து வருகிறது. நெட்ஃபிளிக்ஸின் பிரபல ‘சேக்ரெட் கேம்ஸ்’ இணையத் தொடரில் நவாஸுதீன் சித்திக்கி ஜோடியான குப்ரா சயித் தொடங்கி, அமேசான் பிரைம் வீடியோ இணையத் தொடர்களாக அண்மையில் வெளியான ‘மேட் இன் ஹெவன்’ அர்ஜூன் மாதுர் மற்றும் ‘ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்!’ உமாங் வரை இதற்கான உதாரணங்களைச் சொல்லலாம்.

தங்களது பாலீர்ப்பைத் தவிப்புடன் அடையாளம் காண்பது, குற்ற உணர்வு கொள்வது, குடும்பத்தார் முதல் நேசிக்கும் நபர்வரை தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பில்லாது மருகுவது எனப் பாலினச் சிறுபான்மையினரின் கொந்தளிப்பான உணர்வுகளுக்கு இணைய மேடை அவ்வப்போது வாய்ப்பளித்தது. தற்போது முழுக்கவும் பாலினச் சிறுபான்மையினரை மையமாக்கி ஒன்றரை மணி நேர ஆவணமாக வெளியாகி உள்ளது ‘377 அப் நார்மல்’.

லக்னோவில் எய்ட்ஸ் விழிப் புணர்வுக்கான என்.ஜி.ஓ. ஒன்றை நடத்திவரும் ஆரிஃப் ஸபார் என்ற தன்பாலீர்ப்பு கொண்ட இளைஞரை போலீஸார் கைது செய்வதில் விவரணை தொடங்குகிறது. நாட்டின் சிறப்புமிக்க கலாச்சாரத்துக்குக் களங்கம் சேர்த்ததுடன் இயற்கைக்கு மாறான தனது பால் உந்துதலால் இளைஞர்களைத் தவறான பாதைக்குத் தள்ளியதாக ஆரிஃப் மீது குற்றஞ் சாட்டி, சட்டப் பிரிவு 377-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சிறைவாசத்தில் கடும் சித்ரவதைகள், பாலியல் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் அவர், ஒரு கட்டத்தில் தன்னைப் பணயமாக்கி முழு சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்கிறார். ஆரிஃப் போலவே வெவ்வேறு திசைகளில் இருந்து நீதிமன்றத்தை நாடும் வேறு சில பாலினச் சிறுபான்மையினரின் தனிக் கதைகளும் விவரிக்கப்படுகின்றன.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பைப் பெற்றாலும், பின்னர் உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் அது ரத்து செய்யப்படுகிறது. தொடர்ந்து மறுசீராய்வு மனுவின் மூலம் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வாயிலாகத் தங்களுக்கான நீதியை உறுதிசெய்கிறார்கள். தவிப்பும் நெகிழ்ச்சியுமாக நீளும் சட்டப் போராட்டத்தை அலுக்காது பதிவு செய்திருக்கிறார்கள்.

தங்களின் வயது வந்த குழந்தைகளின் பாலீர்ப்பைப் புரிந்துகொண்ட பெற்றோர்கள் ஒன்றாக அணி திரள்வதும் பாலினச் சிறுபான்மையினர் பொதுவெளியில் மௌனம் கலைப்பதுமான காட்சிகளுடன் உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் முத்திரை வாசகங்களைத் தெளிவாகப் பதிவு செய்திருப்பதும் நிறைவு.

ஒரே கருத்தில் உழலும் வசனங்கள், காட்சியாக்கத்தில் தென்படும் தடுமாற்றங்கள் எனச் சில குறைகள் தென்பட்டாலும் பாலினச் சிறுபான்மையினருக்கு எதிராகப் பொதுப்புத்தியில் ஊறிய களங்கங்கள் மறைய ‘377 அப் நார்மல்’ போன்ற பதிவுகள் வழிசெய்யும். ஆனால் ‘377 அப் நார்ம’லுக்கு தமிழ் டப்பிங்கைச் செய்ய ‘ஜி 5’ தவறிவிட்டது.

முன்னோட்டத்தைக் காண:

SCROLL FOR NEXT