இந்து டாக்கீஸ்

விஜயை இயக்குவேன்!: விஷால் பேட்டி

கா.இசக்கி முத்து

தீபாவளிக்கு யார் முந்திக்கப் போறாங்க!? கோலிவுட்ல இதான் இப்போ ஹாட் டாபிக். நான் முந்திக்கிட்டேன். ‘பூஜை’ படம் என்னோட தீபாவளி ட்ரீட். ஒரே ஒரு பாட்டு மட்டும்தான் பாக்கி. சுவிட்சர்லாந்துல ஷூட்டிங் என்ற உற்சாகம் கொப்பளிக்கிறது விஷாலிடம். இன்னொரு பக்கம் நடிகர் விஷ்ணுவை வைத்து ‘ஜீவா’ படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அதிலிருந்தே பேட்டியைத் தொடங்கினோம்.

நீங்களே நடிச்சு தயாரிக்கிறது ஓகே! இப்போ விஷ்ணு நடிக்கிற படத்தைத் தயாரிக்க நினைச்சது ஏன்?

‘பாண்டிய நாடு’ படம் ரிலீஸான உடனே, என்னோட அடுத்த படம் இதுதான்னு சுசீந்திரன் சொல்லியிருந்தார். எல்லாருக்கும் பிடிச்ச கிரிக்கெட்டை வெச்சுதான் கதை. என்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்குக் கண்டிப்பாகப் பெருமை தேடித் தரும் படமாக இது அமையும்னு நம்பினேன்.

சுசீந்திரன் மேல உள்ள நம்பிக்கையில் படம் பார்க்கிறதுக்கு முன்னாலேயே வாங்கிட்டேன். என்னுடைய நிறுவனம் வெளிப் படங்களை வாங்குவதற்கு நல்ல ஒரு தொடக்கமா ‘ஜீவா’ இருக்கும். மற்ற ஹீரோக்களை வெச்சு படம் பண்ணு ஒரு ஆரம்பம். விஷ்ணு, விக்ராந்த் இருவருக்கும் படங்கள் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. ‘அவன் இவன்’ படத்தில் எப்படி எல்லோருடைய பார்வையும் என் மீது விழுந்துதோ, அதே மாதிரி விஷ்ணுவிற்கு ‘ஜீவா’ இருக்கும்.

சிறு பட்ஜெட் படங்களைத் தொடர்ந்து வாங்கி வெளியிடும் திட்டம் இருக்கா?

அதிகமான லாபம் கொடுக்கிற படங்களை வாங்கி வெளியிடுவது என் நோக்கமில்லை. ஆனால் வெளியிடுற படங்கள் நஷ்டம் ஆகாம இருக்கணும். புது நாயகன், புது இயக்குநர் இணைந்து வித்தியாசமான படங்கள் எல்லாம் பண்ணியிருப்பாங்க. என்னைப் பொறுத்தவரை படத்தோட கதையைத்தான் பார்க்கிறேன்.

சுந்தர்.சி இயக்கத்தில் நீங்க நடிச்ச ‘மதகஜராஜா’ படத்தை நீங்களே வாங்கினீங்க. அப்படியும் அது ஏன் வெளியாகவில்லை?

படத்தோட தயாரிப்பாளர்கிட்டதான் கேட்கணும். எப்படிச் சொல்றதுன்னு தெரியவில்லை. மனுஷங்க ஏதாவது பண்ணினால் அதற்கு ஒரு பலன் கிடைக்கணும். ஆனால் எதுவுமே கிடைக்காமல் முட்டு சந்துல நிக்கறதுன்னு சொல்லுவாங்க இல்லயா? அது மாதிரிதான் அந்தப் படம். அந்தப் படம் நல்லா வரும்னு நெனச்சிதான் மொத்தமா வாங்கினேன். எனக்கு நஷ்டமானது உண்மைதான். நஷ்டத்தைப் பற்றிக் கவலையில்லை. படம் வெளிவர முடியாமல் இருக்கேன்ற ஆதங்கம் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. அந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் ஒரு பிடியே வர மாட்டேங்குது.

மறுபடியும் சுந்தர்.சி.யுடன் கூட்டணி சேர்ந்துட்டீங்களே?

ஆமா! ‘ஆம்பள’ங்கிற டைட்டிலே எவ்வளவு ஹாட்டா இருக்கு பாருங்க.

எங்க ரெண்டு பேருக்குமே ‘சகலகலா வல்லவன்’, ‘ராஜாதி ராஜா’ பாணியில் கமர்ஷியல் படம் பண்ணணும்னு ஆசை. ‘மதகஜராஜா’ படம் அந்தப் பாணியில்தான் இருக்கும். ‘ஆம்பள’ கலர்ஃபுல்லா, பிரம்மாண்டமா தயாராகிட்டு இருக்கு. பொங்கலுக்கு ரிலீஸ் பண்றோம்.

‘அவன் இவன்’ படத்துக்கு அப்புறம் கெட்டப் மாற்றி நடிக்கப் பயமா?

அதுக்கான பதில் இயக்குநர்கள்கிட்டதான் இருக்கு. ‘பாண்டிய நாடு’ படத்துல இந்தக் கேரக்டர் உனக்கு சூட்டே ஆகாதுன்னு சொன்னாங்க. பயந்த கேரக்டர்ல விஷாலான்னு என் வீட்டுலயே கேட்டாங்க. என்னுடைய முந்தைய படங்கள்ல பண்ணாத கேரக்டர் பண்ணணும்னு நினைக்கிறேன். விஷால் எல்லாத்துக்கும் ரெடிதான். பாலா சாரும் சசிகுமார் படம் முடிஞ்ச உடனே பண்ணலாம்னு சொல்லிருக்கார். அவர் எப்போ கூப்பிடுவார்னு காத்துட்டு இருக்கேன்.

திருட்டு வி.சி.டிக்கு எதிரான உங்கள் போராட்டம் எந்த அளவில் இருக்கிறது?

திருட்டு வி.சி.டிக்கு எதிரா மத்தவங்கள எதிர்பார்க்கிறதை விட நாமளே களத்துல இறங்கினா என்னன்னு தோணுச்சு. நான் போய்த் தட்டி கேட்ட அப்புறம் பார்த்திபன் சார் போய்ப் பிடிச்சது மூலமா மக்கள்கிட்ட ஒரு விழிப்புணர்வு வந்துருக்கு. இது க்ரைம் என்பது பலருக்குத் தெரியலங்கிறதுதான் வருத்தமா இருக்கு.

சினிமாத் துறையினர் காவிரி நீர் பிரச்சினைக்கும், சர்வீஸ் டாக்ஸுக்கும் இணைந்து போராடிய மாதிரித் திருட்டு வி.சி.டி.க்கும் களம் இறங்கணும். அப்படிப் பண்ணினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். திருட்டி வி.சி.டி.யை ஒழிப்பது என்பது சாதாரணமான விஷயம்தான். யார் வேண்டுமானாலும் தட்டிக் கேட்கலாம். கேபிள் டி.வி.யில் புதுப்படம் போட்டால் யார் புகார் கொடுத்தாலும் போலீஸ் ஆக் ஷன் எடுப்பார்கள்.

உங்களோட படப்பிடிப்போ, பார்ட்டியோ எல்லா இடத்திலும் வரலட்சுமி இருக்காங்களே...?!

மூடி மறைக்க ஒன்றுமில்ல. அதுக்கான நேரம் வரும்போது கண்டிப்பாகச் சொல்றேன். எனக்குச் சின்ன வயசில் இருந்து வரலட்சுமியைத் தெரியும். என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான நபர் அவர். இப்போதைக்கு இவ்வளவுதான்.

இயக்குவேன் என்று சொல்லிட்டே இருக்கீங்க. ஆனா எதுவும் நடக்கலையே?

இயக்கம் என்பது பெரிய பொறுப்பு. இயக்குநர் ஹரி, சுசீந்திரன் இவங்க கிட்டேயிருந்து இயக்கத்தைக் கத்துக்கிட்டு இருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு ‘பாண்டிய நாடு’ மூலமா சக்சஸ் கிடைச்சுருக்கு. அதற்குப் பிறகு நல்ல நல்ல படங்கள் அமைஞ்சிருக்கு. தயாரிப்பு தொடங்கிருக்கேன். எனக்கு ஒரு நிதானம் வந்த பிறகு கண்டிப்பாக இயக்கம்தான். கண்டிப்பாக நான் இயக்கும் படத்தில் நான் நடிக்க மாட்டேன். இயக்கும் நேரத்தில் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் இயக்குவதை மட்டுமே பார்ப்பேன். அது இப்போதைக்கு இல்லை.

முதல் படத்தில் யாரை இயக்க ஆசை?

விஜய். எனக்குத் தோணுற விஷயம், நினைக்கிற விஷயம் எல்லாமே விஜய் அப்படிங்கிற வார்த்தையில் நிற்குது.

SCROLL FOR NEXT