பிரபாஸின் ‘சஹோ’.
வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் ஐந்து ஆண்டுகள் ‘பாகுபலி’ படத்துக்காக ஒதுக்கினார் பிரபாஸ். அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் சீனா, ஐரோப்பா என பிரபாஸுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கிடைத்தார்கள். ‘பாகுபலி’யைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் ‘சாஹோ’ படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சுஜீத் எழுதி இயக்கிவரும் இந்தப் படத்தில் பிரபாஸுடன் ஷ்ரத்தா கபூர் ஜோடியாக நடிக்க, இவர்களுடன் அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், நீல் நித்தின் முகேஷ், மந்திரா பேடி, ஈவிலின் ஷர்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ‘சஹோ’ படத்தின் இரண்டு புரமோ வீடியோக்கள் ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பிரபாஸ், இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்ற தகவலையும் பகிர்ந்திருக்கிறார்.
ஒரு இயக்குநர், ஒரு நாயகி
தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ மொழிமாற்றம் செய்யப்படாமலேயே தமிழ்நாட்டிலும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகம் செய்து பாலா இந்தப் படத்தை மறு ஆக்கம் செய்தார்.
ஆனால், படத்தைத் தயாரிப்பாளர்கள் கைவிடுவதாக அறிவித்தனர். தற்போது மீண்டும் துருவ் நாயகனாக நடிக்க ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தைத் தமிழில் மறு ஆக்கம் செய்து முடித்துவிட்டார் ஒரு தெலுங்கு இயக்குநர்.
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டியின் உதவியாளர் கிரிசாயாதான் அந்த இயக்குநர். ஆதித்யா வர்மா மூலம் ஒரு புதிய கதாநாயகியும் தமிழுக்கு வருகிறார். லண்டனில் பிறந்து வளர்ந்த பஞ்சாபிப் பெண்ணான பனிதா சந்து பாலிவுட்டில் பிரபலமாகிவரும் நடிகை.
துருவ் ஜோடியாக பனிதா சந்து நடிக்க, ப்ரியா ஆனந்த் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்துக்கு இசை அமைத்த ரதனே இப்படத்துக்கும் இசை அமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தை ஜூலை மாதம் வெளியிட இருக்கிறார்கள்.