கம்ப்யூட்டர் அனைத்துத் துறைகளிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியபோது திரைத் துறையும் அதில் சிலிர்த்து எழுந்தது. ஒளிப்பதிவுத் துறையில் படச்சுருள் கம்பீரமான தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் இலக்கத் தொழில்நுட்பம் என்னும் ‘டிஜிட்டல் டெக்னாலஜி’ அறிமுகமானது.
அதன் வருகையால் நூறாண்டுகளைக் கடந்து ரசிகர்களை மகிழ்வித்துவந்த படச்சுருள் உலகம் முழுவதும் விடைபெற்றுக் கொண்டது.தமிழ் சினிமாவும் படச்சுருளைக் கடந்து சென்று, டிஜிட்டல் ஊடகமாக தன்னைத் தகவமைத்துக்கொண்டபின் அதன் முக்கிய கேந்திரங்களாகச் செயல்பட்டுவந்த ‘பிலிம் லேப்’கள் மூடப்பட்டன.
படச்சுருளுடன் பழகி வந்த ஒளிப்பதிவாளர்கள் டிஜிட்டல் கேமராக்களை பயன்படுத்தும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள். தொடக்கத்தில் ‘படச்சுருள்போல வருமா?’ என்று பேசிய அனைவரையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வாய் மூட வைத்தது.
இன்று டிஜிட்டல் கேமராக்கள் விலை மலிவாகக் கிடைக்கின்றன. அதிலிருந்து ஒருபடி மேலே போய் ஸ்மார்ட் கைபேசி என்ற உருவத்தில் இன்று அனைவரது கையிலும் 4கே தரத்தில் வீடியோக்களை எடுக்கும் வசதி வசப்பட்டுவிட்டது.
டிஜிட்டல் தொழில்நுட்பம் எத்தனை பக்கத்தில் வந்துவிட்டாலும் ‘ஒளிப்பதிவு’ என்பது ரசனையும் தேடலும் சார்ந்த கலை என்பதையும் அதனைக் கைக்கொள்ள விரும்பும் யாரும் முதலில் அதனைக் காதலிக்க வேண்டும் என்று சொல்லித் தருகிறது எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியன் எழுதியிருக்கும் ‘ஒளியில் எழுதுதல்’ எனும் 144 பக்க புத்தகம்.
இரு உரையாடல்களும் நான்கு நீண்ட கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கும் இப்புத்தகத்தில் ‘அப்ஸ்க்யூரா முதல் அலெக்ஸா வரை’ என்ற தலைப்பிட்ட கட்டுரை காலவோட்டத்தில் ஒளியுடன் தொடர்புடைய பதிவுக் கருவிகள் கண்டறியப்பட்ட வரலாற்றை கூர்மையான ஆய்வுடன் முன்வைக்கிறது.
புத்தகத்தின் தலைப்பைத் தாங்கி இடம்பெற்றிருக்கும் இரண்டாம் கட்டுரை திரைப்பட ஒளிப்பதிவில் கவனிக்க வேண்டிய தொழில்நுட்ப அம்சங்களை விரல்பிடித்துச் சொல்லித்தருகிறது. சினிமாவை பயிற்றுவிக்கும் பேராசிரியர் சொர்ணவேல் – ஒளிப்பதிவாளர் செழியன் இடையிலான நீண்ட, செறிவான உரையாடல் ‘ஒளிப்பதிவின் அழகியல்’ குறித்து விவாதிக்கிறது.
இரண்டாம் உரையாடல் ‘படச்சுருளின் மறுபக்கம்’ பற்றி விவாதிக்கிறது. இந்த இரு உரையாடல்களிலுமே ஒளிப்பதிவாளர் செழியனின் திரையுலக அனுபவங்கள் வெளிப்பட்டு நிற்கின்றன.
ஒளிப்பதிவை மேலும் ஆழமாகவும் ரசனை சார்ந்தும் புரிந்துகொள்ள வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது கடைசிக் கட்டுரை. ஒளிப்பதிவைக் கற்றுக்கொள்ளவும் அதைப் புரிந்துகொண்டு ரசிக்கவும் சொல்லித்தரும் இந்தப் புத்தகத்தை ஓர் இனிய ஒளிப்பதிவு ஆசிரியர் எனலாம்.
ஒளியில் எழுதுதல் (திரைப்பட ஒளிப்பதிவு சார்ந்த கட்டுரைகள்) நூலாசிரியர்: செழியன் விலை: ரூ.150 வெளியீடு: பரிசல் புத்தக நிலையம் 216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை–5 தொடர்புக்கு: 9382853646 |