இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: பயணம் போகும் பொம்மைகள்

எஸ்.சுமன்

டிஸ்னியின் ’டாய் ஸ்டோரி’ வரிசையின் நிறைவுப் பாகமாக வெளியாகிறது ‘டாய் ஸ்டோரி 4’ திரைப்படம்.

மனிதர்கள் மத்தியில் அவர்கள் அறியாது உயிர்பெற்று உலவுகின்றன விளையாட்டுப் பொம்மைகள். அதன்பொருட்டு அவை எதிர்கொள்ளும் சவால்களும் தப்பிப் பிழைப்பதுமே டாய் ஸ்டோரி படங்களின் கதையாக இருக்கும். சிஜிஐ தொழில்நுட்பத்திலான முதல் முழுநீளத் திரைப்படமாக முதல் டாய் ஸ்டோரி

1995-ல் உருவானது. அடுத்த பாகங்கள் 1999 மற்றும் 2010-ல் வெளியாயின. குழந்தைகள் மட்டுமன்றிப் பெரியவர்களும் சேர்ந்து ரசித்ததில் டாய் ஸ்டோரி வரிசையின் 3 படங்களுமே வசூலில் சாதனை படைத்தன.

முதல் மற்றும் மூன்றாம் படங்களுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. தற்போது நான்காவது மற்றும் நிறைவுப் படமாக ’டாய் ஸ்டோரி 4’ ஜூன் 21 அன்று வெளியாக உள்ளது.

இதில் ’ஃபோர்கி’ உள்ளிட்ட புதிய பொம்மைகளுடன் அனைவரும் சாலைப் பயணம் செல்கின்றனர். இடையில் வழிதவறும் பொம்மைகள், ’போ பீப்’ போன்ற பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பதும், அவர்களின் புதிய சிக்கல்களை விடுவிக்கவும் முயல்கின்றனர். அதையொட்டிய பொம்மைகளின் சாகசங்களும் இழையும் புதுக் காதலுமாக நான்காவது டாய் ஸ்டோரி விரிய இருக்கிறது.

கௌபாயாக வரும் ’ஷெரிஃப் வூடி’ மற்றும் ஸ்பேஸ்மேனாக வரும் ’பஸ்’ ஆகியோருக்கு டாம் ஹாங்க்ஸ், டிம் ஆலன் போன்ற ஹாலிவுட் பிரபலங்கள் குரல் தந்திருப்பார்கள். இவர்களுடன் நான்காவது பாகத்தில் இடம்பெறும் புதிய பொம்மைகளுக்கு கேனு ரீவ்ஸ், கிறிஸ்டினா ஹென்ட்ரிக்ஸ் உள்ளிட்டோர் தங்கள் குரல் மூலம் உயிர் கொடுத்துள்ளனர்.

முந்தைய 3 படங்களுக்கும் பாடல் எழுதி இசையமைத்த ரான்டி நியூமேன் இதிலும் தொடர்கிறார். முதலிரு டாய் ஸ்டோரி திரைப்படங்களையும் இயக்கியதுடன், நான்காவதின் பாதியை இயக்கிய ஜான் லாஸடர் தயாரிப்பு நிர்வாகத்துடனான பூசலில் வெளியேற, ஜோஸ் கூலி நிறைவு செய்துள்ளார்.

‘டாய் ஸ்டோரி 4’ முன்னோட்டத்தைக் காண இணையச் சுட்டி:

பயணம் போகும் பொம்மைகள் 

SCROLL FOR NEXT