இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: மீண்டும் நிகிஷா!

செய்திப்பிரிவு

மீண்டும் நிகிஷா!

எஸ்,ஜே.சூர்யா இயக்கத்தில் பவன்கல்யாண் நடித்த ‘புலி’ தெலுங்குப் படத்தில் அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழில் கௌதம் கார்த்திக் நடித்த ‘என்னமோ ஏதோ’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு பல படங்களில் நடித்துவிட்டாலும் நிகிஷாவுக்கு அதிர்ஷ்டம் இதுவரை கைகொடுக்கவில்லை.

தற்போது சரண் இயக்கத்தில் ‘பிக் பாஸ்’ புகழ் ஆரவ் ஜோடியாக நடித்து வருகிறார் நிகிஷா படேல். ‘மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தனது தோற்றத்துக்கு ஏற்ப மாடர்ன் பெண்ணாக நடித்திருக்கிறாராம். இந்தப் படத்தைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகியிருக்கிறார்.

எகிரும் எதிர்பார்ப்பு

அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனியும் அர்ஜுனும் இணைந்து நடித்திருக்கும் படம் ‘கொலைகாரன்’. தியா மூவீஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் தயாரித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி, பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

இதற்கிடையில் இந்தப் படத்தின் விநியோக உரிமையைத் தயாரிப்பாளர் தனஞ்செயன் வாங்கியுள்ளார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படத்தை ஜூன் 5-ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

படமும் தணிக்கைக் குழுவின் தேர்வில் தேறி ‘யூ/ஏ’ சான்றிதழைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுனுடன் ஆஷிமா நர்வால், நாசர், சீதா, குருசோமசுந்தரம், மயில்சாமி உட்படப் பலர் நடித்துள்ளனர். சைமன் கே.கிங் இசை அமைத்துள்ளார்.

மூன்று படங்களில் விஷால்!

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ தோல்விப் படமாகியிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி. இயக்கத்தில் ஒரு படம், மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகியவற்றில் நடிக்கிறார்.

இந்த இரு படங்களுடன் அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்கும் படத்தில் ராணுவ வீரராக விஷால் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இதில் விஷாலுக்கு ஜோடி ஸ்ரத்தா ஸ்ரீநாத். அவர் ஏற்க இருப்பது காவல் ஆய்வாளர் கதாபாத்திரம். ‘இரும்புத்திரை’ படத்தைத் தொடர்ந்து இதற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயனின் நிபந்தனை!

குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் விருப்பத்துக்குரிய நாயகனாக மாறியிருக்கும்  சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘Mr. லோக்கல்’.

கோடைவிடுமுறைப் படமாக இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படம் பற்றி இயக்குநர் ராஜேஷிடம் கேட்டபோது, ‘‘சிவகார்த்திகேயனை நான் இயக்குவதென முடிவானதும், ‘இந்தப் படத்தில் குடிக்கிற காட்சிகள், குடித்து விட்டுப் பாடுவது மாதிரியான பாடல் காட்சிகள், பெண்களைத் திட்டி பாடுகிற பாடல் எதுவும் வேண்டாம் சார்’ என்று எனக்கு அன்பாக நிபந்தனை போட்டார் சிவகார்த்திகேயன்.

அதனால் எனது முந்தைய படங்களில் இடம்பெற்றது மாதிரியான காட்சிகளை இப்படத்தில் முற்றாகத் தவிர்த்திருக்கிறேன். இது ஒரு க்ளீன் எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும்.

இந்தப் படத்தில் நயன்தாரா, ராதிகா சரத்குமார், ரோபோ சங்கர், தம்பி ராமையா, சதீஷ் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடிக்க காரணமே சிவகார்த்திகேயன்தான். இவர்களை எல்லாம் தயாரிப்பாளர் ஒருங்கிணைத்துக் கொடுத்தார்.

இதில் சிவகார்த்திகேயனுக்குச் சமமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. அதைப் போல ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையும் இப்படத்துக்குப் பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்தக் கோடை விடுமுறைக்குக் குடும்பத்துடன் வந்து பார்க்கக்கூடிய ஒரு படமாக ‘Mr. லோக்கல்’ இருக்கும்’’ என்கிறார் இயக்குநர் ராஜேஷ்.எம்

SCROLL FOR NEXT