நான் என்றென்றும் மானசீகமாய்க் காதலிப்பதும் வழிபடுவதும் தூக்கணாங் குருவிக் கூட்டைத்தான். ஒற்றை அலகால், தனி ஒரு பறவையாக, மிக நிதானத்துடன், பொறுமை பிசகாமல், கவனம் சிதறாமல், வியப்புக்குரிய திட்டத்துடன் அந்தப் பறவை கட்டி முடிக்கும் அற்புதமான கூட்டின் செய்நேர்த்தியும் பயன்பாடும் ஆறறிவு கொண்ட மனிதனைக் காலம் காலமாய் அதிசயப்பட வைக்கிறது. தூக்கணாங்குருவியின் திறனிலும் உழைப்பிலும் மதிநுட்பத்திலும் துளியாவது எனக்கு இருக்கக் கூடாதா என ஏங்குவது என் சுபாவம்.
இன்றைய காலகட்டம் ‘வேகம்’ நிறைந்ததாக மாறிவிட்டது என்கிறார்கள். ‘வேகம்’ என்பது ‘விவேகம்’ இல்லாமல் இருக்கும்வரை அபாயம்தான். நமது நிதானமற்ற, எதற்கும் அவசரப்படும் வாழ்க்கைக்கு ‘வேகம்’ என்ற பட்டம் சூட்டியபடி நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
அழகாகச் சிரிக்கத் தெரிந்தவர்களால் பிறரை அழவைக்க முடியாது.
அளவுக்கு மீறிய செல்வமோ அளவுக்கு மீறிய வறுமையோ, மனிதர்களை ஒழுக்கம் கெட்டவர்களாகவும் திறமை அற்றவர்களாகவும் ஆக்கிவிடுகிறது.
வறுமையில் வாழ்வதைவிடக் கொடுமையானது சந்தேகங்களுடன் அறியாமையில் வாழ்வதே!
புல்லாங்குழலில் எத்தனை துவாரங்கள் என்று தெரியாமல், வீணையில் எத்தனை தந்திகள் என்று தெரியாமல் அவற்றின் இசையை மட்டும் ரசித்து மகிழ்வதுபோல், மற்றவர்களின் தகுதி, வயது பற்றிக் கவலைப் படாமல் அனைவரிடமும் உள்ள உயர்ந்த குணங்களையும் திறமைகளையும் மனம் திறந்து பாராட்ட வேண்டும்.
நாம் செய்கிற எதற்கும் உடனடியாக ‘இன்றே’ பலன் கிடைக்க வேண்டும் என்று அவரசப்படுகிறவர்களுக்கு, எதுவுமே கிடைக்காது. விதை விதைத்த அன்றே செடியாகி மரமாகிக் காய்த்துக் கொட்ட வேண்டும் என எதிர்பார்க்கும் அனுபவப் போதாமை அது.
காலியாக இருந்த குடங்களே நிறைகுடங்களாக மாறுகின்றன. ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்று நினைப்பவனால் மட்டுமே நிறையத் தெரிந்துகொள்ள இயலும்.
‘சந்தர்ப்பம் வந்து கதவைத் தட்டும்போது, கதவைத் திறப்பதற்குக் கவனமாய்க் காத்திருக்கிறேன்’ என்பான் ஒருவன்.
‘சந்தர்ப்பம் வரும் என்று கதவை எப்போதும் திறந்து வைத்துக் காத்திருக்கிறேன்’ என்பான் இன்னொருவன்.
‘சந்தர்ப்பம் தேடிவரும்வரை காத்திருப்பதா? நானே வெளியே இறங்கிப்போய் வரப்போகும் சந்தர்ப்பத்தை எதிர்கொண்டு சந்திப்பேன்’ என்பான் மற்றொருவன்.
‘தேடிவரும் சந்தர்ப்பம் எப்போது எவரைச் சந்திக்கும்
என்பது தெரியாது; அந்தச் சந்தர்ப்பங்களை நானே உருவாக்கிக்கொள்வேன்” என்று செயலாற்றத் தொடங்கும் ஒருவனே வெற்றியாளன்.
நமது தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும்; நாம் உயர்வதற்கு அதுதான் சிறப்பான அணுகுமுறை.
இயக்குநர் மகேந்திரன் எழுதிய ‘வாழ்க்கையைக் காதலிப்போம்’ நூலிலிருந்து... வெளியீடு கற்பகம் புத்தகாலயம். விலை ரூ. 30. தொடர்புக்கு: 044-24314347