புதிய சூழ்நிலை
கீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, சாந்தினி நடித்திருக்கும் படம் ‘பற’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டில் பா.இரஞ்சித் உட்படப் பல முன்னணி இயக்குநர்கள் கலந்துகொண்டனர். இரஞ்சித் பேசும்போது “ சாதிய ஒடுக்குமுறையைத் தீவிரமாகப் பேசியிருக்கும் படங்களில் ஒன்றாக இது உருவாகியிருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சமுத்திரக்கனி அண்ணன் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கு வைத்திருக்கிறார்கள்.
சமீபத்திய எல்லா வணிகத் திரைப்படங்களிலும் சாதி பற்றிய விவாதத்தை உருவாக்கும் ஒரு காட்சியையாவது வைக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. சினிமாவில் பாலியல்ரீதியாகப் பெண்கள் சுரண்டப்படுவது உண்மைதான். பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைப்பதாலேயே அவர்களைக் குற்றம் சாட்டக் கூடாது” என்று பேசினார்.
ராய்லட்சுமி செண்டிமெண்ட்!
கடந்த 2005-ல் வெளியான ‘கற்க கசடற’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான லட்சுமி ராய் பின்னர் ராய்லட்சுமி என பெயர் மாற்றிக்கொண்டார். தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்துவந்தாலும் அவர் தோன்றும் பெரும்பாலான படங்கள் ஓடுவதில்லை. ஆனால், அவர் நடித்த பேய், அமானுஷ்யம், க்ரைம் த்ரில்லர் படங்கள் ஓடியிருக்கின்றன.
தற்போது ‘நீயா 2’ படத்தில் நடிகர் ஜெய்யின் ஜோடியாக மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கேத்தரின் தெரசா, வரலட்சுமி என இரண்டு பெண்களைத் தாண்டி ஜெய்யை அடையப் போராடும் மாறுபட்ட மறுஜென்மக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் தனது செண்டிமெண்ட் கைகொடுக்கும் என்று நம்புகிறாராம் ராய்லட்சுமி.
புரட்சி விவசாயி!
விவசாயிகளின் அழுகுரலையும் கூக்குரலையும் கண்டுகொள்ளாத அதிகார வர்க்கத்தின் மீது மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைக்க இருக்கிறதாம் அமீர் புரட்சி விவசாயியாக நடித்து, தயாரித்திருக்கும் ‘அச்சமில்லை அச்சமில்லை’ திரைப்படம்.
படத்தின் கதையைக் கேட்ட கவிதாலயா நிறுவனத்தின் புஷ்பா கந்தசாமி, “இந்தப் படத்துக்காக எங்களது படத் தலைப்பை விட்டுத் தருவதில் மிகுந்த மனநிறைவு” என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீஸர் இணையத்தில் அதிரடியான வரவேற்பைப் பெற்று வருகிறது.
தீவிர நீச்சல் பயிற்சி!
‘சதுரம் 2’ படத்தின் மூலம் கவனிக்கவைத்த இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன். இவரது இயக்கத்தில் ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜயராகவேந்திரா தயாரித்துவரும் புதிய படத்துக்காக த்ரிஷா தற்போது தீவிர நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம். தமிழில் இதுவரை ஆழ்கடல் சாகசத்தைக் கதைக் களமாகக் கொண்ட படம் எதுவும் தயாரிக்கப்பட்டதில்லை.
அந்தக் குறையைப் போக்க இருக்கிறதாம் இந்தப் படம். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்துக்கான நீருக்கு அடியிலான படப்பிடிப்பை சென்னை, பிச்சாவரம், கேரளா, தாய்லாந்து ஆகிய நான்கு இடங்களில் நடத்துகிறார்கள். இதற்காக த்ரிஷாவுடன் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்ரனும் நீச்சல் பயிற்சி எடுத்து வருகிறார் என்கிறது படக்குழு.
புதுவகை த்ரில்லர்!
அருள்நிதி, ‘யூ-டேர்ன்’ புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘K13’ படத்துக்குத் தமிழகத் தணிக்கைக் குழு ‘யூஏ’ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. தொடர்ந்து த்ரில்லர் படங்களில் நடித்துவரும் அருள்நிதி “இந்தப் படமும் எனக்கு இன்னொரு வெற்றியாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.
ஏற்கெனவே வெளியான இந்தப் படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. உளவியல் த்ரில்லரா, கடத்தல் நாடகமா அல்லது ஃபாண்டஸி த்ரில்லரா எனக் கண்டறிய முடியாத வகையில் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறாராம் அறிமுக இயக்குநர் பரத் நீலகண்டன். கோடை விடுமுறையில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். விரைவில் இசையை வெளியிட இருக்கிறார்கள்.