இந்து டாக்கீஸ்

அனைவரையும் முந்திய மகேஷ்பாபு

ஆர்.சி.ஜெயந்தன்

கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியான தெலுங்குத் திரைப்படமான ‘ஆகடு' வசூல், இணையப் பரபரப்பு இரண்டிலுமே ரகளையான சாதனைகளைச் செய்து வருகிறது. மகேஷ் பாபு - தமன்னா நடித்திருக்கும் இந்தப் படம் வெளியான இரண்டு நாட்கள் கழித்துப் படத்தில் இடம்பெற்ற ‘ஜங்ஷன் லூ’ என்ற பாடலின் விளம்பர டீஸர் வெளியானது.

நட்புக்காக மகேஷ் பாபுவுடன் இந்தப் பாடலில் குத்தாட்டம் ஆடியிருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இந்த டீஸர் இன்று இந்திய அளவிலான யூடியூப் டிரெண்டில் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் வெளியான விஜயின் ‘கத்தி', ஷங்கரின் ‘ஐ', ஷாரூக் கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ ஆகிய படங்களையும் யூ டியூபில் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

உண்மையான வசூலை மறைத்தே பழக்கப்பட்டுவிட்ட பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள், ஆகடு படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 14 கோடி என்று ஒயிட் ரிப்போர்ட் காட்டுகிறார்களாம்.

ராஜமௌலி ரெடி

தெலுங்குத் திரையுலகின் ஷங்கர் என வர்ணிக்கப்படும் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டப் படமாக உருவாகிவரும் இருமொழிப் படமான ‘பாகுபாலி' படப்பிடிப்பில் 80 சதவீதம் முடிந்துவிட்டது. தற்போது படத்துக்கான பின்னணி குரல் சேர்க்கும் பணி விறுவிறுப்பாக நடந்துவருவதால் தனது மொத்தக் கவனத்தையும் அதில் திருப்பியிருப்பதாகக் கூறியிருக்கிறார் இயக்குநர்.

தமிழ்ப் பதிப்புக்கு ‘மஹாபலி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். வரலாற்றையும், நிகழ்காலத்தையும் இணைக்கும் இந்தப் படத்தில் செந்தமிழில் பேச சரியான குரல் நடிப்புக் கலைஞர்களைத் தேர்வு செய்ய இருக்கிறாராம் ராஜமௌலி.

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ் ணன், நாசர் என்று பலர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கும் இந்தப் படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். தீபாவளி முடிந்ததும் படத்தின் டிரைலரை வெளியிட முடிவு செய்திருப்பதாகக் கூறியிருக்கிறார் இயக்குநர்.

SCROLL FOR NEXT