நாற்பது ஆண்டுக் கால நடிப்பு அனுபவம் கொண்டவர் மோகன்லால். அவர் எப்போது இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. அதற்கான நேரம் கனிந்துவிட்டதுபோல, தனது இணையப் பக்கத்தில் மோகன்லால் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
தான் இயக்குநராகக் காரணமான சூழலையும் மோகன்லால் அதில் விவரித்திருக்கிறார். மலையாள இயக்குநர் டி.கே.ராஜீவ்குமாரும் மோகன்லாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு 3டி மேடை நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டனர். அதன் பட்ஜெட் குறித்து விவாதிப்பதற்காக அவர்கள் மலையாள இயக்குநர் ஜிஜோவை அணுகியுள்ளனர். இந்தியாவின்
முதல் 3டி படமான ‘மை டியர் குட்டிச்சாத்தா’னின்
இயக்குநர்தான் ஜிஜோ. அவர் சொன்ன தொகைக்கு மேடை நிகழ்ச்சி நடத்த முடியாது என்பதால் அதை மோகன்லால் கைவிட்டுள்ளார். ஆனால் அந்தச் சந்திப்பின்போது,
ஜிஜோ ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ள ‘பரோஸ் –கார்டியன் ஆஃப் டி-காமாஸ் ட்ரெஷர்’ (Barroz – Guardian of D' Gama's Treasure) என்னும் போர்த்துகீசியர்கள் குறித்த கதையை மோகன்லால் கேட்டுள்ளார். பரோஸ் என்னும் வீரன் வாஸ்கோடகாமாவின் சொத்துகளை 400 ஆண்டுகளாகப் பராமரித்துவருகிறான் என்னும் தொன்மத்தின் அடிப்படையிலான கதை இது. இந்தக் கதையைதான் இயக்குவதாக மோகன்லால் அந்தச் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஜிஜோவும் அதை உற்சாகப்படுத்தியுள்ளார்.
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘மரக்கார்: அரபிக்கடலிண்ட சிம்ஹம்’ முடிவடைந்துள்ளது. அதற்குப் பிறகு 3டி படமாக உருவாகவிருக்கும் ‘பரோ’ஸின் முதல்கட்டப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பரோஸ் என்னும் முதன்மைக் கதாபாத்திரமாக மோகன்லால் நடிக்கவுள்ளார். சமீபத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ ரூ.150 கோடி வசூலைத் தாண்டிவிட்டதாகத் தெரிகிறது.