இன்றைய சமூகம் அழகு குறித்துப் பல போலியான கருத்துகளை உருவாக்கிவைத்திருக்கிறது. ஒருவரின் தோற்றம்தான் அவரது வாழ்க்கையின் முக்கிய அம்சங்களான தன்னம்பிக்கை, வெற்றி, காதல் போன்றவற்றைத் தீர்மானிப்பதாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, தலைமுடியை இழந்ததால் தன்னம்பிக்கையைத் தொலைத்துத் தவிப்பவர்கள் பலர். அறிமுக இயக்குநர் காசிம் கல்லோ, சமூகம் எதிர்கொள்ளும் இந்த ‘தலை’யாயப் பிரச்சினையை ‘கான் கேஷ்’ (Gone Kesh) படத்தில் கையாண்டிருக்கிறார்.
மேற்கு வங்கத்தின் சிலிகுரி நகரத்தில் வசிக்கும் இனாக்ஷி தாஸ்குப்தா (ஸ்வேதா த்ரிபாதி) 15 வயதில் அலோபீசியாவால் பாதிக்கப்படுகிறார். இந்தப் பிரச்சினையால் அவரது தலைமுடியை முற்றிலும் இழக்க நேரிடுவதால், வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையையும் இழக்கத் தொடங்குகிறார்.
அவருடைய பெற்றோர் தேவஸ்ரீ (தீபிகா அமின்), அனுப் (விபின் ஷர்மா) இருவரும் மகளின் தலைமுடியை மீண்டும் வளரவைப்பதற்காகத் தங்கள் சக்திக்கு மீறி எல்லா முயற்சிகளையும் செய்துபார்க்கின்றனர்.
அலோபீசியாவோடு போராடியபடியே பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து ஒரு மாலில் பணியாற்றத் தொடங்குகிறார் இனாக்ஷி. ஆனால், இந்தப் பிரச்சினை, அவருக்குத் திருமணமாவதையும் தடுக்கிறது. சிறுவயதிலிருந்தே நடனமாடுவதில் ஆர்வம்கொண்ட அவர், நடனத்தின் மூலம் தனக்கான ஆறுதலைக் கண்டடைய முயல்கிறார். அவரது தன்னம்பிக்கைப் பயணம்தான் ‘கான் கேஷ்’.
எளிமையான கதைக்களத்தைக் கொண்ட இந்தப் படம், சில அழகான தருணங்களோடு ஒரே நேர்க்கோட்டில் செல்கிறது. ஒரு தீர்க்க முடியாத மருத்துவ நிலையை எதிர்கொள்ளும் ஒருவர், தனக்குள் எந்த மாதிரியான உணர்வுநிலைகளை எதிர்கொள்வார் என்பதை இந்தப் படம் யதார்த்தமாகப் பதிவுசெய்கிறது.
சமூகம் அழகு சார்ந்து கட்டமைத்துவைத்திருக்கும் கற்பிதங்களை உடைத்து, நம்மை நாமாக ஏற்றுக்கொள்வது என்பது உண்மையில் எவ்வளவு சவாலான விஷயமாக இருக்கிறது என்பதை எந்தவிதமான மிகைப்படுத்தலும் இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஸ்வேதா த்ரிபாதி, இனாக்ஷி கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். “நான் யாருக்கும் என் மனத்தில்கூடக் கெடுதல் நினைத்தது கிடைத்தது. அப்படியிருக்கும்போது, கடவுள் ஏன் எனக்கு இப்படி ஒரு தண்டனையைக் கொடுக்க வேண்டும்” என்று அழும் காட்சியில் தீராத நோயை எதிர்கொள்ளும் ஒருவரின் மனநிலையை அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார் ஸ்வேதா.
சிலிகுரியின் சந்தையில் ஓர் எளிய வாட்ச் கடை வைத்திருக்கும் வியபாரியாக, 25 ஆண்டுகளுக்குப் பிறகு, மனைவியின் தாஜ்மஹால் செல்லும் கனவை நிறைவேற்ற முயலும் கணவராக, மகள் வாழ்க்கையின்மீது தன்னம்பிக்கை இழந்துவிடக் கூடாது எனத் தவிக்கும் தந்தையாக விபின் ஷர்மா தன் கதாபாத்திரத்துக்கு நிறைவாகவே நியாயம் செய்திருக்கிறார். இனாக்ஷியின் காதலராக வரும் ஜிதேந்திர குமாரின் கதாபாத்திரமும் நம்பகத்தன்மையுடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், நடனத்தில் ஆர்வம்கொண்ட இனாக்ஷி, நடனம் ஆடும் காட்சிகள் படத்தில் பெரிதாக இடம்பெறவில்லை. ஒரேயொரு பாடலில் மட்டும்தான் அவர் நடனமாடுவதைப் பார்க்க முடிகிறது. அவர் சிறந்த நடனக் கலைஞர் என்பதை நிறுவுவதற்கு சில காட்சிகளை அமைத்திருக்கலாம். படம் முடிவுக்கு வந்தபின்னும் நீட்டிக்கப்பட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
எனிலும் அழகு பற்றி, சமூகம் கட்டமைத்திருக்கும் போலியான அம்சங்களை உடைப்பதன் அவசியத்தை ‘கான் கேஷ்’ திரைப்படம் எளிமையாக ஆனால் பிடிமானத்துடன் பதிவுசெய்திருக்கிறது.