கொரியப் படத்தில் சல்மான்!
இந்திய அளவில் முதல் நூறு கோடி வசூல் படத்தைத் தந்தவர் சல்மான் கான். முந்நூறு கோடி வரை தனது வசூல் சாம்ராஜ்ஜியத்தை விரித்துக்கொண்ட சல்மான், இந்த ஆண்டு தொடங்கியிருக்கும் படம் ‘பாரத்’.
அந்தப் படத்தின் ‘முதல் பார்வை’யைச் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் சற்று வயதானவராகக் காணப்படும் சல்மான், பாரத் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறியிருக்கிறார். "எனது தாடியும், தலைமுடியும் மட்டுமே கறுப்பு வெள்ளை. ஆனால், எனது வாழ்க்கை வண்ணமயமானது" என்று பகிர்வில் குறிப்பிட்டிருக்கிறார்.
‘ஆன் ஓட் டு மை ஃபாதர்' (An Ode To My Father) என்ற கொரியப் படத்தின் அதிகாரபூர்வ மறு ஆக்கம் இது. சல்மானின் தந்தையாக ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார். இந்திய வரலாற்றை ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் விரித்துக்காட்டவிருக்கும் இந்தப் படத்தில் சல்மானுக்கு ஜோடி கேத்ரீனா கைஃப். ‘டைகர் ஜிந்தா ஹை' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சல்மானை இந்தப் படத்தில் இயக்கி வருகிறார் அலி அப்பாஸ் ஜாஃபர்.
வசூல் சூறாவளி!
சீனாவில் வெளியாகும் ஆமீர் கான், சல்மான் கான் நடித்த படங்கள், பெரும் பொருட்செலவில் தயாரான ‘பாகுபலி’, ‘2.0’ போன்ற படங்கள் அங்கே வசூலைக் குவித்திருக்கின்றன. இந்தப் போக்குக்கு முற்றிலும் மாறாகச் சிறு முதலீட்டில் உருவான இந்திப் படம் ஒன்று சீனத் திரைப்படச் சந்தையில் வசூல் சூறாவளியாகச் சுழன்று பணத்தை அள்ளியிருக்கிறது. அந்தப் படம் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான ‘அந்தாதுன்' .
சீன மொழிமாற்றுப் படமாக ‘பியானோ பிளேயர்' என்ற தலைப்பில் வெளியாகி இரண்டுவார முடிவில் இருநூறு கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறதாம். ‘தங்கல்', ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்', ‘பஜ்ரங்கி பைஜான்' வரிசையில் ‘அந்தாதுன்’ படமும் வசூல் சூறாவளிப் பட்டியலில் இணைந்திருப்பதன் மூலம் கதைதான் நாயகன் என்பதை சீன ரசிகர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
தொகுப்பு: ரசிகா