எந்தத் தொழிலை எடுத்துக்கொண்டாலும், அதில் போட்டிகள் பயமுறுத்தவே செய்யும். ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற நிர்வாகவியல் பேராசிரியர் மைக்கேல் ஈ போர்டர் 40 வருடங்களுக்கு முன், தொழில் போட்டியில் வெற்றியடைவதற்கான செயல்திட்டம் (Strategy) ஒன்றை ஒரு சட்டத்துக்குள் (Framework) வைத்து எளிமையாக விவரித்தார்.
தொழிலில் புதிதுபுதிதாக எதிர்கொள்ளும் சவால்களை உருவாக்கும் ஐந்து சக்திகளை இணைத்து அவர் உருவாக்கிய அந்த வடிவம், அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும். அதை, சினிமாவுக்குப் பிரயோகித்தால், இப்படித்தான் இருக்கும்.
பார்வையாளர்கள் எதிர்பார்ப்பு
இது “பார்க்க வேண்டிய படம்” என்று பார்வையாளர்கள் சொன்னால்தான், அதைப் பார்க்கலாமா வேண்டாமா என்று மீதமுள்ள பார்வையாளர்கள் முடிவுசெய்வார்கள். ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ்அப்வந்தபின், ஒவ்வொரு பார்வையாளரும் விமர்சகராகி, படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்தவராக உருமாறியுள்ளார்.
பிற மொழி, உலகப் படங்களைத் தொடர்ந்து பார்க்கும் அவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. நமது படம் அவர்களது எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யாவிட்டால், படத்தைத் தாழ்த்திப் பேசுவார்கள்.
அவர்களின் எதிர்பார்ப்புக்கு மேலிருந்தால் படத்தை உயர்த்திப் பேசிக் கொண்டாடுவார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு கூடக்கூட, இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் அதைப் பூர்த்திசெய்யும் சவாலும் அதிகமாகிறது.
புதுப் படங்களின் எண்ணிக்கை
சுதந்திர நாட்டில் எவரும் திரைப்படம் எடுக்கலாம். எனவே வாரா வாரம் வரும் புதுப் படங்களை யாரும் தடுக்க முடியாது. சினிமா டிஜிட்டல்மயமான பின், டிஜிட்டல் கேமரா வைத்திருக்கும் யாரும் திரைப்படம் எடுக்கலாம்.
ஆனால், ஒரு படம், தரமானதாக, மக்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால், அது எப்படியாவது, அவர்களைச் சென்றடையும். எனவே, மக்களைத் திருப்திப்படுத்தும் படத்தைத் தர வேண்டும் என்று மட்டும் சினிமா எடுப்பவர்கள் ஆலோசித்தால், மற்றதை மக்களே பார்த்துக்கொள்வார்கள்.
அதிகப் படங்கள் வருவது, ஒரு வகையில் மட்டும் தயாரிப்பாளர்களைப் பாதிக்கிறது. ஒவ்வொரு வாரமும் போட்டி இருக்கும்போது, எந்தப் படத்தைத் தங்களின் அரங்கங்களில் திரையிட வேண்டும் என்று பேரம் பேசும் பலம், விநியோகஸ்தர்களுக்குச் சென்றுவிடுகிறது.
பேரம் பேசும் பலம்
விநியோகஸ்தர்களிடம் பேரம் பேசும் முன், படத்துக்குத் தகுதிகள் அதிகம் இருந்தால் (நடிகர்/இயக்குநர் சக்தி /பட முன்னோட்டத்தின் பலம்), தயாரிப்பாளரின் பலம் பெரிதாகிறது. தயாரிப்பாளரின் பலம் குறைந்தால், விநியோகஸ்தர்களின் பலம் கூடுகிறது.
படத்தை வாங்குவதா, வேண்டாமா என்ற முடிவை எடுக்கும் நிலையில் அவர்கள் இருந்தால், அவர்கள் கொடுப்பதை வாங்கும் நிலை தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுகிறது. கடுமையாக முயன்று, பலமான ஒரு படத்தைக் கொண்டுவருவதுதான், தயாரிப்பாளருக்கு விநியோகஸ்தர்களிடம் பேரம் பேசும் பலத்தைத் தரும்.
மாற்றுப் பொழுதுபோக்குகள்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நாடகங்கள், லைவ் கிரிக்கெட் போன்ற மாற்றுப் பொழுதுபோக்குகள், ஒரு திரையரங்கில் பார்வையாளர்கள் புதுப்படம் பார்க்கும் வாய்ப்புகளைத் தள்ளிப்போட வைக்கின்றன. இத்துடன் திருட்டு டிவிடி, திருட்டு கேபிள் ஒளிபரப்பு, வலைதளங்கள் போன்றவையும் சேர்ந்து பார்வையாளர்கள் கவனத்தைச் சிதறடிப்பது திரைப்படத் துறையைப் பயமுறுத்துகிறது.
வர்த்தகப் போட்டி
ஏதோ ஓட்டப் பந்தயம் நடப்பது போல் போட்டி போட்டு, ஏற்கனவே இன்னொரு நிறுவனம் அறிவித்த தேதியில் படங்களை வெளிக்கொண்டு வருவது உட்பட, பல வர்த்தகப் போட்டிகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே நிலவிவருவது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
இதே போட்டியால், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை எப்படியாவது தன் நிறுவனத்திற்கு இழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சம்பளத்தைக் கூடுதலாகக் கொடுத்து, மற்றவர்கள் படம் தயாரிக்கும் வாய்ப்பைக் கெடுப்பதும் நடந்துவருகிறது. ஒருவருக்கு ஒருவர் வெளியீட்டுத் தேதியில் விட்டுக் கொடுத்து, சம்பளங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால், அனைவருக்குமே அது பயனளிக்கும், போட்டிகளும் குறையும்.
இந்த ஐந்து சக்திகள் ஆதிக்கம் செலுத்தும் சினிமா துறையில், நீடித்து நிற்க, நான்கு பொதுவான செயல்திட்டங்கள் உள்ளன. இவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால், தயாரிப்பு நிறுவனங்கள் பிழைத்துக்கொள்ள முடியும்.
செயல்திட்டம்
ஒரு படம் எத்தகைய பார்வையாளர்களுக்கானது என்பதை முதலிலேயே தெளிவாக நிர்ணயித்து அதற்கேற்ப செயல்திட்டம் வகுப்பதே வெற்றிக்கு வழிவகுக்கும். வெகுஜனப் படமா, ஒரு குறிப்பிட்ட சாராருக்குப் பிடிக்கக்கூடிய கிளாஸ் படமா என்பதை முதலில் தீர்மானித்து, அதற்கு ஏற்றாற்போல் பட்ஜெட்டை முடிவுசெய்ய வேண்டும்.
ஒரு வெகுஜனப் படம் அனைத்து சென்டர்களிலும் ஓடும் வாய்ப்பு உள்ளது. ஆனால், ஒரு கிளாஸ் படம், குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே ஓடும். அதற்கேற்றாற்போல்தான், அப்படத்தின் வருவாயும் சாத்தியமாகும். பெரிய நடிகர் நடிப்பதாலேயே, படத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கக் கூடாது. பார்வையாளர்களின் எண்ணிக்கைதான் படத்தின் வருவாயை நிர்ணயிக்கிறது. அதுவே அப்படத்தின் பட்ஜெட்டையும் நிர்ணயிக்க வேண்டும்.
படத்தின் வகை
ஒரு படம் ஓகே, அல்லது நன்றாக இருக்கிறது என்பதுடன், தனியாகக் கவனிக்கும் வண்ணம், ஏதோ ஒது புதுமை அதில் இருக்க வேண்டும். கண்டிப்பாகப் படத்தைப் பார்க்க வேண்டும் எனும் எண்ணத்தை அப்படம் அனைவரின் மனதிலும் ஏற்படுத்த வேண்டும்.
தனித்துவமான, புதுமையான அதே சமயம், மக்களை மகிழ்விக்கும் படங்கள் அனைவரையும் சென்றடைகின்றன. தனித்துவம் இல்லாத படங்கள், உடனே மறக்கப்படுகின்றன.
வெளியிடுவதில் முதன்மை
தரமான படத்தைச் சிக்கனமாக எடுக்கும் நிறுவனங்கள் நிலைத்து நிற்கின்றன. ஏ.வி.எம்., சத்யஜோதி பிலிம்ஸ், திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் போன்ற பல நிறுவனங்கள் இந்தச் செயல்திட்டத்தில்தான் சினிமா தயாரிக்கிறார்கள்.
குறைந்த, குறிப்பிட்ட பட்ஜெட்டில் படமெடுப்பதால்தான், அவை நீடித்து நிற்கின்றன. தயாரிப்பு செலவு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவு அப்படத்தின் பொருளாதார ஆபத்தும் குறைவு.
கூட்டணி
உத்தரவாதமற்ற சினிமா தொழிலில், இயன்றவரை கூட்டணிகள் அமைத்து, செலவுகளைக் குறைத்து, வருவாயை உயர்த்தித் தொழில் செய்வது, ஆபத்தைக் குறைக்கும். நடிகர்கள் மற்றும் இயக்குநருடன் கூட்டணி அமைத்துப் படத் தயாரிப்புச் செலவைக் குறைப்பதிலிருந்து, விநியோகத்தில் மற்ற தயாரிப்பாளர்களுடனோ விநியோகஸ்தர்களுடனோ கூட்டணி அமைப்பதன் மூலம், நல்ல ஒரு வெளியீட்டைக் குறைந்த செலவில் சாதிக்கலாம். இதே போல், விளம்பரங்களிலும், கூட்டணிகளை அமைத்துச் செலவுகளைக் குறைத்தால், வியாபார ஆபத்து பெருமளவு குறையும்.
மேலே சொன்ன செயல்திட்டங்களைச் சரியாகப் பயன்படுத்தினால், செலவைக் குறைத்து, வருவாயை அதிகரித்து, இத்துறையில் நீடித்து நிற்க முடியும். பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய படங்களை அதிகமாகத் தர முடியும்.
தொடர்புக்கு: dhananjayang@gmail.com