கோலிவுட் கேரளக் கதாநாயகிகளின் கைப்பிடிக்குள் இருக்கும்போது ஆந்திரத்தில் இருந்து வந்திருக்கும் சானியா தாரா வந்த வேகத்தில் வசீகரித்திருக்கிறார். முன்னணி ஹீரோக்களுடன் இன்னும் ஜோடி சேராவிட்டாலும், அடுத்த வரிசையில் கவரும் ஆரி, அட்டகத்தி தினேஷ், விஜய் வசந்த் ஆகியோருடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். கதைகளை நம்பும் இயக்குநர்களின் படங்களில் இடம்பெற ஆரம்பித்திருக்கிறார். ‘தி இந்து’வுக்காக அவர் மனம் திறந்து பேசியதிலிருந்து...
எந்தப் படத்தில் அறிமுகமானீங்க?
பாலசேகரன் டைரக்ட் பண்ண ‘ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து’ படம்தான் என்னோட முதல் படம். சொந்த ஊரு ஹைதராபாத். இதுக்கு முன்னால நான் தெலுங்குப் படத்தில கூட நடிச்சது இல்ல. முதல் வாய்ப்பே தமிழில்தான் கிடைச்சது. இப்ப தமிழில் ஆறு படங்கள் கைவசம் இருக்கு. +2 படிச்சுகிட்டே மாடலிங் பண்ணினேன். அது மூலமாத்தான் சினிமாவுக்கு வந்தேன். படிப்பு அப்படியே நிக்குது. பிரைவேட்டா எக்ஸாம் எழுதனும்.
கைநிறையப் படங்கள் எப்படிச் சாத்தியமாச்சு?
டிஸ்கவுண்ட்ல வாங்கினேன் (கொஞ்சம் சிரிக்கிறார்). எல்லாத்துக்கும் நேரம்தான் காரணம்னு சொல்லனும். அப்புறம் டெடிகேஷன் நம்மகிட்ட இருந்தா, சினிமால எல்லாருக்கும் நம்மளைப் பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்டேன். ஹரிகுமார் ஜோடியா சங்கராபுரம் படம் முடிச்சிட்டேன். இன்னும் ரிலீஸ் ஆகல.
இப்போ ‘தகடு தகடு’, ‘வாராயோ வெண்ணிலாவே’, ‘மெய் மறந்தேன்’ வரப்போகுது. வாராயோ வெண்ணிலாவே படத்தில ‘அட்டகத்தி’ தினேஷ் ஹீரோ. இதில நான் லீட் கேரக்டர் பண்ணியிருக்கேன். இந்தப் படத்தைப் பார்த்துட்டு, கடை எண் 6 படத்துல மறுபடியும் வாய்ப்பு கொடுத்தார் இயக்குநர் சசிதரன். இதில் நான் அக்கா-தங்கைன்னு டபுள் ரோல் பண்ணுறேன்.
புது ஹீரோயின் நான்கைந்து படங்கள்ல நடிச்சிட்டாலே கிசுகிசுக்கள் வர ஆரம்பிச்சிடும். உங்களைப் பத்தி அப்படி எதுவும் வந்ததா தெரியலையே?
நடிக்கத்தான் வந்திருக்கேன். லவ் பண்ண இல்ல. நல்ல கதாநாயகின்னு பேரெடுக்கனும். இப்போதைக்கு அது மட்டும்தான் டார்கெட்.
உங்கள் தனித் திறமை என்ன?
டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். ‘மெய்மறந்தேன்’ படத்துல பெல்லி டான்ஸ் பண்ணியிருக்கேன். ரொம்ப நல்லா பண்ணியிருக்கேன்னு பாராட்டுறாங்க. பெல்லி டான்ஸ் கத்துக்க நான் அரேபியாவுக்கோ, மெக்ஸிகோவுக்கோ போனேன்னு நினைக்காதீங்க. இந்தப் படத்துக்காக நான் தனியா எதுவும் பயிற்சி எடுக்கல.
யுடுயூப்ல வீடியோ பார்த்துப் பார்த்து ஆடப் பழகிட்டேன். பெல்லி டான்ஸ் கத்துக்கிறது ஈஸி. ஆனா ஆபாசமா தெரியாம அதை நளினமா ஆடுறதுக்கு இடையழகு வேணும். அது உங்ககிட்ட இருக்கு; நீங்க ஆடலாம்னு இயக்குநர் சொன்னார். இப்படி எனக்கு நம்பிக்கை கொடுத்தா கம்பிமேல கூட நடப்பேன்.
சானியாவோட டிரஸ்ஸிங் சென்ஸ்?
ஜீன்ஸ், சுடிதார் ரொம்பப் பிடிக்கும். மாடர்னா ஸ்கர்ட் போட்டாகூட நல்லா இருக்கும். சினிமா ஃபங்க்ஷன்களுக்கு கவர்ச்சியா டிரெஸ் பண்ணச் சொல்றாங்க. தவிர்க்க முடியல. முடிஞ்ச வரைக்கும் வல்கரா தெரியாம இருக்கணும்னு பார்த்துக்கிறேன்.
உங்களைப் பார்க்கும் ரசிகர்கள் என்ன சொல்றாங்க?
தொடக்கத்துல குஷ்பு மாதிரி இருந்தேன்னு சொன்னாங்க. இப்போ தமன்னா, பூஜா மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க.