இந்து டாக்கீஸ்

மும்பை கேட்: சாய்னாவாக மாறும் பரிணீத்தி

கனி

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கைக்கதை திரைப்படமாகிறது. சாய்னாவாக நடிகை பரிணீத்தி சோப்ரா நடிக்கவிருக்கிறார். இதற்காகத் தினமும் இரண்டு மணி நேரம் சாய்னாவின் ஆட்டங்களைப் பார்த்து தயாராகிவருவதாக இன்ஸ்டாகிராமில் பரிணீத்தி தெரித்திருக்கிறார். இயக்குநர் அமோல் குப்தா இயக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

“நான் காட்சிகளின் வழியே கற்றுகொள்வேன். அதனால், சாய்னாவின் பேட்மிண்டன் ஆட்டங்களைப் பார்த்து, அவர் எப்படி விளையாடுகிறாரோ, அப்படியே விளையாடுவதற்குத் தயாராகிவருகிறேன். இதுவரையில் இவ்வளவு பேட்மிண்டன் ஆட்டங்களை நான் பார்த்ததில்லை. சாய்னாவின் உடல்மொழியைத் திரையில் கொண்டு வருவதற்காகத் தீவிரமாகப் பயிற்சிசெய்து வருகிறேன்” என்று சொல்கிறார் பரிணீத்தி.

‘தபங் 3’  சோனாக்ஷி

சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடிக்கும்  ‘தபங் 3’  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இந்தூரில் தொடங்கியிருக்கிறது. படத்தின் முதல் நாள் படப்பிடிப்புத் தொடங்கியதை மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார் சோனாக்ஷி. 2010-ல் வெளியான ‘தபங்’ படத்தில்தான் சோனாக்ஷி அறிமுகமானார்.

 “மீண்டும் ரஜ்ஜோ! ‘தபங்’ –லிருந்து ‘தபங் 3’.. என் வீட்டுக்குத் திரும்பிவருவதுபோல் உணர்கிறேன். என்னை வாழ்த்துங்கள்” என்று பகிர்ந்திருக்கிறார் அவர். ‘தபங் 3’ திரைப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார். சோனாக்ஷி நடிப்பில் ‘களங்’ திரைப்படம் ஏப்ரல் 17 அன்று வெளியாக விருக்கிறது.

SCROLL FOR NEXT