கிருத்திகா உதயநிதியின் ‘காளி’, ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படங்களின் மூலம் ரசிகர்களைத் தன்பக்கம் ஈர்த்தவர் ஷில்பா மஞ்சுநாத். தற்போது அவர் நடித்துவரும் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’. “மூன்றாவது படமே கதாநாயகியை முன்னிறுத்தும் கதையாக அமையும் என்று நான் நினைக்கவில்லை. இதில் எனக்கு இரட்டை வேடம்.
படத்தின் இயக்குநர் விஜயன் கதையைக் கூற ஒவ்வொரு காட்சியையும் கேட்டு விழுந்து விழுந்து சிரித்ததில் வயிற்று வலியே வந்துவிட்டது. இதுவோர் அறிவியல் புனைவு ஹியூமர் திரில்லர். படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களைக் கொண்டு ஒரு மருந்தைக் கண்டுபிடிக்கிறார்.
பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவக் குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கையில் மாட்டுகிறது. எனது பாட்டியாக வரும் குமாரி சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளுகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். நான்தான் அந்த ரோலைச் செய்திருக்கிறேன். பாட்டி, பேத்தியாக மாறிய பிறகு நடக்கும் குழப்பங்கள்தான் கதையே. இந்தப் படத்தில் எனக்கு இரட்டைச் சவால்” என்று மொத்தக் கதையையும் கூறிவிட்டு “ஸ்டோரி எப்படி?” என்கிறார் ஷில்பா.
70 புதுமுகங்கள்
கே.எல்.புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வைகறை பாலன் என்ற அறிமுக இயக்குநரின் உருவாக்கத்தில் முழுவதும் மேற்குத் தொடர்ச்சி மலையில் படமாகியிருக்கிறது ‘சியான்கள்’ என்ற படம். இதுவும் அப்பகுதி மக்களின் வாழ்க்கையைப் பேசும் படம். “தேனி மாவட்டத்தில் வயதானவர்களை அழைக்க வழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தைதான் ‘சியான்’. இதில்70 புதிய முகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். 5 பிரபலமான முகங்களும் இருக்கிறார்கள். இயற்கையுடன் இயைந்து வாழும் இப்பகுதி மக்களின் மகிழ்ச்சி, வலியும் மிக்க உணர்வுகளைப் பதிந்து வந்திருக்கிறோம்” என்கிறார் இயக்குநர்.
இணையும் இருவர்!
இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் அனுராக் காஷ்யப், பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் பா.இரஞ்சித்தைத் தனது அலுவலகத்துக்கு அழைத்து விருந்தளித்துப் பேசியிருக்கிறார். இரஞ்சித்தின் ‘காலா’, ‘பரியேறும் பெருமாள்’ படங்களைப் பாராட்டிய அனுராக், “இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். இந்தச் சந்திப்பு பற்றித் தெரிவித்த இயக்குநர் இரஞ்சித், “உண்மையிலேயே அவரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. கூடிய விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம்” என்று கூறியிருக்கிறார்.
என்னால்தான் ‘கொலைகாரன்’
இந்திய - ஆஸ்திரேலியா அழகியாகத் தேர்வான ஆஷிமா ‘கொலைகாரன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒளிப்படக் கலைஞர்களைக் கண்டதும் விதவிதமாக ‘போஸ்’ கொடுத்து அசத்திய ஆஷிமா, “‘கொலைகாரன்’ படத்தில் என்னை வைத்துத்தான் கதையே நகர்கிறது. என்னால்தான் விஜய் ஆண்டனி கொலைகாரன் ஆகிறார். விஜய் ஆண்டனியுடன் டூயட் பாடல் காட்சியில் நடித்த தருணங்களை மறக்கவே முடியாது” என்றார். தற்போது ஆரவ் ஜோடியாக ‘ராஜபீமா’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் இவர், ஏற்கெனவே ‘ஜெஸ்ஸி’ என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் கால்பதித்துவிட்டார்.
நளின காந்தி
‘ஆடுகளம்’ படத்தில் பேட்டைக்காரனாக நடித்து தேசிய விருது பெற்றவர் ஈழக்கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன். ஒரு இடைவெளிக்குப்பின், இவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நளினகாந்தி’. கஸ்தூரி மற்றொரு முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். பொன் சுகிர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மனநோய்க்கு ஆளாகும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறாராம் ஜெயபாலன்.
பொன் சுகிர் அமெரிக்காவின் பிரபலப் பல்கலைக்கழகத்தில் திரைப்படக் கலையை முறைப்படி பயின்றவர். மனநோய்க்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இசைராகம் என ‘நளினகாந்தி’ நம்பப்படுவதால் அதையே படத்துக்குத் தலைப்பாக வைத்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் ஜூட் ஆரோகணம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இரண்டு பாகங்கள்
‘பொன்னியின் செல்வன்’ படத்தை இரண்டு பாகங்களாகக் கொடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார் மணிரத்னம். தற்போது நாவலின் முக்கியக்கதாபாத்திரங்களுக்குப் பிரபல நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர், கீர்த்தி சுரேஷுக்குப் பூங்குழலி கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். மீனவப் பெண்ணாக, ரவிக்கை இல்லாமல் நடிக்க இருக்கும் கீர்த்தி சுரேஷ் வரும் பகுதி முழுவதும் முதல் பாகத்துடன் முடிவடைந்துவிடும் என்கிறது இயக்குநர் வட்டாரம்.