இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: துப்பறியும் போகிமான்

எஸ்.சுமன்

ஹாலிவுட்டில் திரைப்படமாகும் வீடியோ கேம்ஸ் வரிசையில் மற்றுமொரு போகிமான் திரைப்படமாக வெளியாகவுள்ளது ‘போகிமான் டிடெக்டிவ் பிகாச்சு’.

சில ஆண்டுகளுக்கு முன்னர் உலகமெங்கும் சர்ச்சைக்குள்ளான பிரபல மொபைல் விளையாட்டு ‘போகிமான் கோ’. வெர்ச்சுவல் ரியாலிட்டியின் அடுத்த நிலையான ஆக்மெண்டட் ரியாலிட்டி மூலமாக, நம் சுற்றுப்புறத்தில் மறைந்திருக்கும் குட்டி போகிமான்களைத் தன் வசப்படுத்திக்கொள்ளும் மொபைல் கேமாகத் தனது பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்றிருந்தது. இதில் பிரசித்தி பெற்ற ‘பிகாச்சு’ என்ற போகிமானை மையமாகக் கொண்டு ‘போகிமான் டிடெக்டிவ் பிகாச்சு’ வெளியாகிறது.

போகிமான் உலகத்தின் பிரபல டிடெக்டிவ் ஒருவர் திடீரெனக் காணாமல்போக, அவருடைய மகன் தந்தையைத் தேடி அவர் பாணியில் துப்புத்துலக்கி முன்னேறுகிறான். அவனுக்கு உதவியாகத் தந்தையின் போகிமான் தோழரான ‘டிடெக்டிவ் பிகாச்சு’ கைகோத்ததும் தேடுதல் சூடு பிடிக்கிறது.

இந்தத் தேடலின் வழியே போகிமான்களும் மனிதர்களும் இசைவாக வாழும் ரைம் நகரின் பல மர்மங்கள் அவிழ்கின்றன. வெளிப்படும் அதிர்ச்சிகள் பலவும் போகிமான் – மனிதர் நல்லுறவுக்கு வேட்டு வைப்பதுடன், போகிமான் உலகத்துக்கும் சவாலாக உருவெடுக்கின்றன. டிடெக்டிவ் தந்தை மீட்கப்பட்டாரா, இளம் டிடெக்டிவ்-பிகாச்சு கூட்டணி வெற்றி பெற்றதா என்பதுவே மிச்சக் கதை.

வீடியோ கேமுக்கு அப்பால், கார்டூன்கள், திரைப்படங்கள் எனப் பல வடிவமெடுத்தாலும், லைவ்-ஆக்‌ஷன்/அனிமேஷன் சினிமாவாக போகிமான் எடுக்கும் புதிய அவதாரம் ‘போகிமான் டிடெக்டிவ் பிகாச்சு’.

போகிமானுக்குக் குரல் கொடுத்ததுடன் மோஷன் கேப்சரிங் நுட்பங்களுக்கான முகபாவனைகளையும் ரியான் ரெனால்ட்ஸ் வழங்கியுள்ளார். ஜஸ்டிஸ் ஸ்மித், கேத்ரின் நியூட்டன் உள்ளிட்ட பலர் உடன் நடித்திருக்கும் திரைப்படத்தை ராப் லெட்டர்மேன் இயக்கி உள்ளார். போகிமான் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க - ஜப்பான் தயாரிப்பாக வளர்ந்துள்ள ‘போகிமான் டிடெக்டிவ் பிகாச்சு’ திரைப்படம், மே 10 அன்று அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளிலும், மே 3 அன்று ஜப்பானிலும் வெளியாகிறது.

SCROLL FOR NEXT