யார் இவர்?
வங்கத்தின் முக்கிய 10 இயக்குநர்களில் அபர்ணாவும் ஒருவர். அந்த மாநிலத்தின் முதன்மையான பெண் இயக்குநரும்கூட. சினிமா, நாடக நடிகையாகவும் பரிமளித் திருக்கிறார்.
மனித உறவுகள் இடையிலான உணர்வு முடிச்சுகள்தான் அவருடைய படங்களின் வேர். மதவெறி அரசியலின் முகமூடியை விலக்கி, அது நிகழ்த்தும் கொடூரங்களை வெள்ளித்திரையில் பதித்தி ருக்கிறார்.
பின்னணி
இந்தியச் சினிமாவுக்கான தோற்றக்களம் வங்கச் சினிமாவின் புதல்வி. அது 100 சதவீதம் நிஜம். திரை மேதை சத்யஜித் ராயின் நீண்ட நாள் நண்பரும், திரை விமர்சகர், திரைப்பட வரலாற்றாசிரியர், இயக்குநருமான சித்தானந்த தாஸ் குப்தாவின் மகள்தான் அபர்ணா.
சத்யஜித் ராயின் தீன் கன்யா (1961) என்ற படத்தில் கூச்சம் மிகுந்த பள்ளிச் சிறுமியாகத் திரையில் கால்பதித்தார். 60'கள் தொடங்கி 90'கள் வரை தொடர்ச்சியாகவும், பிறகு விட்டுவிட்டும் இப்போதுவரை நடித்துக் கொண்டிருக்கிறார்.
முதல் அரும்பு
அவருடைய இயக்கத்தில் உருவான முதல் படம், ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட ‘36, சௌரிங்கி லேன்' (1981), அது வெளியான காலத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தேசிய அளவில் சிறந்த இயக்குநர் விருதையும் அப்படத்துக்குப் பெற்றார்.
தனிமையில் தள்ளப்பட்ட ஓர் ஆங்கிலோ இந்திய ஆசிரியை, இளமையின் துள்ளலில் இருக்கும் அவருடைய முன்னாள் மாணவன்-மாணவி இடையிலான காதல் ஆகியோருக்கு இடையிலான உறவே படத்தின் மையம்.
முக்கியப் படைப்புகள்
அவர் எடுத்த இரண்டாவது இந்திய ஆங்கிலப் படம் ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர்'. நாட்டில் மதவெறி அரசியல் தலைதூக்கிய காலத்தின் பின்னணியில், சமூகத்தில் எப்படிப்பட்ட கொடும் வடிவங்களை அது எடுக்கும் என்பதைக் கலாபூர்வமாகச் சொன்ன படம். 2002 குஜராத் கலவரத்துக்கு முன்பே எடுக்கப் பட்டுவிட்டாலும், அடுத்த சில மாதங்களில் வெளியானது.
வன்முறை கொப்பளிக்கும் நிலத்தின் ஊடே பயணிக்கும் இருவர் இடையே, சமூகம் முடிச்சு போட்டு வைத்திருக்கும் அத்தனை கட்டுகளையும் தாண்டி இயல்பாக முகிழ்க்கும் அன்பை-காதலை கௌரவமாகவும் கம்பீரமாகவும் சொன்னது இப்படம். சிறந்த இயக்கம், சிறந்த தேசிய ஒற்றுமைப் படம், சிறந்த நடிகை - அபர்ணாவின் மகள் கொங்கனா சென் நடித்த முதல் படம் - என 3 தேசிய விருது களைப் பெற்றது.
மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையிலான உறவு தொடர்பான ‘பரோமிதர் ஏக் தின்’ (1999), அபர்ணாவுக்கு பிரபலம் தேடித் தந்ததுடன், சிறந்த வங்கப் படமாகத் தேர்வு செய்யப்பட்டது. சதி, பரமா, யுகந்தா போன்ற படங்களும் குறிப்பிடத்தக்கவை.
தனிச் சிறப்பு
மீரா நாயர், தீபா மேத்தா போன்ற பெண் இயக்குநர்கள் மேற்கத்தியப் பாணியிலான திரை உத்திகளை இந்திய சினிமாவுக்குக் கொண்டு வந்த நிலையில், நம் நாட்டில் கிளைவிட்ட திரை உத்திகளுக்குச் சொந்தக்காரர் என்று அபர்ணாவைச் சொல்லலாம்.
தெரியுமா?
ரினாதி என்பது அவருடைய செல்லப் பெயர். சிறு நாடகக் குழுக்களிலும் வணிக நாடகக் குழுக்களிலும் சேர்ந்து நடித் துள்ளார். வங்கத்தில் பிரபலமான ஆனந்த பஜார் பத்திரிகா குழுமத்தின் வங்கப் பெண்கள் மாத இதழான சனந்தாவுக்கு 20 ஆண்டுகள் (1986-2005) ஆசிரியையாக இருந்துள்ளார்.