வயது என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே. இதை நிரூபிக்கும் உற்சாகப் பாட்டிகளின் தன்னம்பிக்கைக் கதையை, நகைச்சுவையும் நடனமும் கலந்து சொல்கிறது ‘பாம்ஸ்’ திரைப்படம்.
ஐ.பி.எல். ஆட்டங்களில் வீரர்களின் மட்டை விளாசல்களுக்கு ஏற்ப ரசிகர்களின் உற்சாகத்தைக் கூட்டும் ‘சியர் கேர்ள்ஸ்’ ஆட்டத்தை ரசித்திருப்போம். கிரிக்கெட் மட்டுமன்றி ஏராளமான விளையாட்டு மைதானங்களின் உற்சாகத் துடிப்பைத் தீர்மானிப்பதில் இந்த சியர் கேர்ள்ஸ் குழுவினருக்கும் பங்குண்டு.
பருவ வயதும் துள்ளாட்டமும் இவர்களின் தனி அடையாளங்கள். மாறாக, இதே சியர் கேர்ள்ஸ் குழுவின் அங்கத்தினரான பெண்கள் அனைவரும் பாட்டி வயதினராக இருந்தால் என்னவாகும் என்பதுதான் ‘பாம்ஸ்’ படத்தின் கதை.
முதியோர் சமூக அமைப்பில் அடைக்கலமாகும் வயது முதிர்ந்த பெண்கள் சிலருக்கு இந்தத் திடீர் யோசனை பிறக்கிறது. அதன்படி பாட்டி வயதினர் மட்டுமே கொண்ட சியர் கேர்ள்ஸ் குழு கட்டமைக்கப்படுகிறது. அடிப்படை உடற்பயிற்சியில் தொடங்கி நீச்சல், நடனம் என சகலத்திலும் இவர்கள் தங்களைப் பட்டை தீட்டிக்கொள்கின்றனர்.
இடையே இளம்பெண்கள் அடங்கிய போட்டி குழுவையும் இந்த சீனியர் குழு எதிர்கொள்ள வேண்டியதாகிறது. மனதின் வேகத்துக்கு உடல் ஒத்துழைக்க வாய்ப்பின்றி பாட்டிகளில் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். அப்படியும் தங்கள் கனவுகளைத் துரத்தும் உற்சாகப் பாட்டிகளின் உத்வேகம் வெற்றி பெற்றதா என்பதை இந்தப் படம் விளக்குகிறது.
ஜாக்கி வீவர், அலிசா போ, செலிய வெஸ்டன், பாட்ரிகா பிரெஞ்ச் எனப் படத்தில் பங்கேற்கும் சீனியர் பெண்களின் குறைந்தபட்ச வயது 65. பாட்டிகள் குழுவை ஒருங்கிணைக்கும் ஆஸ்கர் நாயகியான டயான் கீட்டனின் வயது 73.
இந்தப் பாட்டிகளில் பலரும் தனி நபராகப் பல திரைப்படங்களைத் தூக்கிச் சுமந்தவர்கள் என்பதால், அவர்களின் அனுபவமும் நடிப்பு முதிர்ச்சியும் இப்படத்தில் ஒருங்கே சேர்ந்துள்ளன. ஸாரா ஹெய்ஸ் எழுதி இயக்கிய பாம்ஸ் திரைப்படம் மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
முன்னோட்டத்தைக் காண