குடும்பக் கதைகள் மட்டுமே மக்களுக்குப் பிடிக்கும் என்ற நிலைமையைத் தனது காதல் படங்களால் மாற்றிக் காட்டினார் இயக்குநர் ஸ்ரீதர். இவரது எவர்கிரீன் காதல் கதைகளை, விலா நோகச் செய்யும் தனது தூய நகைச்சுவை எழுத்தால் கௌரப்படுத்தியவர் எழுத்தாளர், இயக்குநர் கோபு.
சித்ராலயா நிறுவனத்தைத் தொடங்கிய பெருமை ஸ்ரீதரைச் சேர்ந்தாலும் ‘சித்ராலயா’ எனும் அடையாளத்தைத் தனது பெயருக்கு முன்னால் பெற்றுக்கொண்ட கோபுவின் திரைப்பயணத்தைக் கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் விவரித்துச் செல்லும் சினிமா பொக்கிஷம் இந்தப் புத்தகம்.
‘சித்ராலயா’ கோபுவின் திரையுலக அனுபவங்களை, அவர் கூறக் கூற, அதைக் கேட்டு நகைச்சுவை நடனமாடும் மொழியில் ‘சிரித்ராலயா’ என்ற தலைப்பில் இந்து நாளிதழின் இந்து டாக்கீஸ் இணைப்பிதழில் தொடராக எழுதினார் அவருடைய புதல்வர், எழுத்தாளர், பத்திரிகையாளர் டி.ஏ.நரசிம்மன். 50 வராங்கள் வெளியாகி வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற அந்தத் தொடர், ‘கிரேசி’மோகன் முன்னுரையுடன் ‘தமிழ் திசை’ பதிப்பகத்தின் வெளியீடாகப் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது.
சிறுவயதிலேயே நண்பர்களாகிவிட்ட ஸ்ரீதர் – கோபுவின் பள்ளி நாட்கள் நாட்கள், பின்னர் அவர்களது வாலிப பருவம், நாடகம் வழியே சினிமாவுக்குள் நுழைந்ததில் தொடங்கி சித்ராலயாவின் பொற்காலத்தில் அவர்கள் இருவரும் இணைந்து படைத்த சாதனைகளின் ஒவ்வொரு தருணைத்தையும் பசுமையுடன் நகைச்சுவை தவழ நினைவு கூர்ந்திருக்கிறார் ‘சித்ராலயா’ கோபு.
சித்ராலயா என்றால், ஸ்ரீதர் – கோபு ஆகியோருடன் பால் வின்சென்டின் கேமரா, ஆனாரூனா என்கிற திருச்சி அருணாசலத்தின் கறுப்புவெள்ளை ஒளிப்படங்கள், ஸ்ரீதரின் உதவியாளர்களில் ஒருவராக இருந்து பின்னர் இயக்குநராக உயர்ந்த சி.வி.ராஜேந்திரன் என சித்ராலயாவுடன் தொடர்புடைய அத்தனை மனிதர்களும் புத்தகத்தில் உயிருடன் நடமாடுகிறார்கள்.
தேனிலவு’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘உத்தரவின்றி உள்ளே வா’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ சித்ராலயாவின் சாதனைப் படங்கள் ஒவ்வொன்றும் உருவான பின்னணியில் நிறைந்திருக்கும் உண்மைச் சம்பவங்கள் நம்மை அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்கின்றன.
தென்னகம் தாண்டி பாலிவுட்டிலும் கொடிகட்டிப் பறந்தது சித்ராலயா. சாதனைகளை நகைச்சுவை பொங்கப் பகிர்ந்திருக்கிறார் சித்ராலயா கோபு.
‘கல்யாணப் பரிசு’ காலத்தின் அதே நகைச்சுவை உணர்வு அணுவளவும் குறையாமல், கேமராவுக்கு முன்பாகவும், பின்பாகவும் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை, குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நிகழ்வுகளை சித்ராலயா கோபுவின் குரலாகவே பதிவு செய்திருக்கிறார் டி.ஏ.நரசிம்மன்.
உங்கள் வீட்டின் நூலகத்தில் இருக்க வேண்டிய தரமான, கலகலப்பான திரை வரலாற்று நூல் இந்த ‘சிரித்ராலயா’