இந்து டாக்கீஸ்

டிஜிட்டல் மேடை 19: திரிசங்கு திருமணங்கள்!

எஸ்.எஸ்.லெனின்

இணையத் தொடர் என்பதன் கட்டமைப்பை முழுவதுமாகத் தகவமைத்துக்கொண்டு உருவாகும் படைப்புகள் சோடை போவதில்லை. அமேசான் பிரைம் ஒரிஜினல் வீடியோ வரிசையில் மகளிர் தினத்தன்று வெளியான ’மேட் இன் ஹெவன்’ வெப் சீரிஸ் அந்த வகையில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

தாரா-கரண் என்ற துடிப்பான நண்பர்கள் திருமண விழா ஏற்பாடுகளுக்கான சேவைகளை வழங்கும் ‘மேட் இன் ஹெவன்’ நிறுவனத்தை டெல்லியில் நடத்துகின்றனர். செல்வத்தில் புரளும் மேல்தட்டுக் குடும்பங்களின் திருமணங்களுக்கான சவாலான சகல ஏற்பாடுகளையும் சாதித்துப் பெயர் பெறுகிறார்கள்.

இப்படி 9 அத்தியாயங்களும் தலா ஒரு திருமண வைபவமும் அதையொட்டி சிறிதும் பெரிதுமான கல்யாண கலாட்டாக்களுடன் வருகின்றன. திடீரெனத் திரிசங்கில் சிக்கும் திருமணங்களின் சவால்களைத் தீர்ப்பதுடன், தாராவும் கரணும் தத்தம் தனிப்பட்ட வாழ்க்கையின் தடுமாற்றங்களுக்கு ஈடுகொடுக்க வேண்டியதாகிறது.

திருமண ஏற்பாடுகளின் விழா விமரிசைகளுக்கு அப்பால், தலையெடுக்கும் வினோதமான பிரச்சினைகளையும் தாரா-கரண் ஜோடி சமயோசிதமாகத் தீர்க்கிறார்கள். ‘கற்பின் பெயரால் எதிர்கால மாமியார் தரும் நெருக்கடிகளைச் சமாளிக்க மணமகளுக்கு உதவுவது, இளம்வயதில் கணவனை இழந்த சீமாட்டி தனது அறுபதுகளில் மேற்கொள்ளும் மறுமண வைபவத்தில் அவரது ஆசைக்குரிய வாரிசுகளைப் பங்கேற்கச் செய்வது, மெத்தப் படித்த மேலிடத்துத் திருமணத்தில் கோரமுகம் காட்டும் நவீன வரதட்சிணை கொடுமைக்குப் பதிலடி தருவது, ராஜகுடும்பம் ஒன்றில் சிறு பெண்ணிடம் அத்துமீறும் தடித்தனத்தை அம்பலப்படுத்துவது, அரசியல் சதுரங்கத்தில் திருமணத்தின் பெயரால் தன்னைப் பலிகொடுக்க முயலும் பெற்றோரைப் பழிவாங்கும் இளம்பெண்ணுக்கு உதவுவது’ என அத்தியாயம் தோறும் ரகம்ரகமான பிரச்சினைகளை தாரா-கரண் ஜோடி எதிர்கொண்டு தீர்வுகாண்கிறார்கள்.

அனைத்து எபிசோடுகளையும் இணைக்கும் கண்ணிகளாக, தாரா, கரணின் தனிப்பட்ட பிரச்சினைகள் விரிகின்றன. பிறரின் திருமணப் பிரச்சினைகளை ஊதித்தள்ளும் தாரா தனது சொந்தத் திருமண வாழ்க்கை கேள்விக்குள்ளாவதை வெறும் சாட்சியாகக் கடக்க வேண்டியதாகிறது. இத்துடன் தனது தன்பாலீர்ப்பைச் சமூகத்தில் மூடி மறைக்காது துணிச்சலுடன் வலம்வரும் கரண் அதற்குக் கொடுக்கும் விலையும் சந்திக்கும் பிரச்சினைகளும் எல்லா அத்தியாயங்களிலும் இடம்பெறுகின்றன.

மத்தியத் தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்து செழிப்பான குடும்பத்தில் மருமகளாகும் தாராவின் கல்யாணக் கனவு பிற்பாடு பல்லிளிக்கிறது. திருமணத்துக்கு வெளியே தாவும் கணவனின் கயமை, துரோகமிழைக்கும் உயிர்த்தோழியின் வஞ்சகம் ஆகியவற்றுக்கிடையே இழந்துபோன சராசரி வாழ்க்கைக்கு தாரா ஏங்குகிறாள். பள்ளிப்பருவம் தொட்டு கரணுக்குள் அலையடிக்கும் தன்பாலீர்ப்பு உணர்வுகள் முதிர்ச்சியற்ற சமூகத்தால் அவமானத்தையே பெற்றுத் தருகின்றன.

ஒருகட்டத்தில் பொங்கியெழுந்து ஒட்டுமொத்தப் பாலினச் சிறுபான்மையினருக்கான நீதிப் போராட்டத்தில் குதிக்கிறான். இந்த இருவரின் கதையுடன் நிறுவனத்தில் பணியாற்றும் 4 பணியாளர்களின் நெகிழ்ச்சியான பின்னணியும் அவ்வப்போது வருகின்றன. தாரா, கரணின் தனிப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள் அத்தியாயம் தோறும் தோன்றி விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.

எபிசோடுக்கு ஒன்றாகத் திரளும் திருமண விழாக்களின் வழியே வடக்கத்திய வண்ணமயமான கலாச்சாரங்கள் காட்சிகளுக்குக் குளுமை சேர்க்கின்றன. தங்கள் பகட்டைப் பறைசாற்றிக்கொள்ளக் கடன்பட்டாவது கோடிகளைக் கரைக்கும் பணக்கார வீம்பும் அந்தத் திருமண ஏற்பாடுகளின் அக வாழ்வில் கவிந்துகிடக்கும் இருண்மையுமாகத் தொடரின் போக்கில் வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்.

இவற்றின் ஊடே உண்மையான மகிழ்ச்சியும் நிறைவும் தாண்டவமாடும் எளிய குடும்பத்துத் திருமணம் ஒன்றையும் தனியாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். இந்தித் தொடர்களைத் தமிழ்ப்படுத்தும்போது வழக்கமாக நிகழும் ‘ஜூனூன்’ விபத்து இதில் இல்லை. தொடரின் தனித்துவ வசனங்கள் இயல்பு கெடாது தமிழில் ஒலிக்கின்றன.

கறுப்பு வெள்ளையென உருமாறும் முதன்மைக் கதாபாத்திரங்களின் வழியே நீதி விளக்கம் எதையும் திணிப்பதில்லை. சூழலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுமாக அவரவர் தமக்கான நியாயங்களில் உச்சம் தொடவும், அடியற்று விழவும் செய்கிறார்கள்.

மகளிர் தினத்தன்று வெளியான இத்தொடரின் முதல் சீஸன் உருவாக்கத்திலும் இயக்கத்திலும் இணைந்திருக்கும் ஸோயா அக்தருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தாராவாக ஷோபிதா துலிபாலா, கரணாக அர்ஜுன் மாதுர் உட்படப் பலர் நடித்துள்ளனர். 9 அத்தியாயங்களையும் ஒரே மூச்சில் பார்க்கத் தகுந்த சுவாரசியமான இணையத்தொடர் ‘மேட் இன் ஹெவன்’.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

SCROLL FOR NEXT