இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: வேகமாய் வளரும் வினோத்!

செய்திப்பிரிவு

‘ராட்சசன்’ படத்தில் பார்வையாலேயே மிரட்டி, அத்துமீறும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டவர் வினோத் சாகர். இவர், ‘நான்’, ‘ஹரிதாஸ்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘உறுமீன்’ உட்பட ஒரு டஜன் படங்களில் நடித்திருந்தாலும் “ ‘பிச்சைக்காரன்’ படம் எனக்கு அடையாளம் கொடுத்தது. ஆனால் ‘ராட்சசன்’ என்னை பிஸியான நடிகனாக்கியிருக்கிறது” என்கிறார்.

தற்போது ‘குருதி ஆட்டம்’, ‘சாம்பியன்’, ‘சைரன்’, எனத் தமிழிலும் மலையாளம், தெலுங்கில் தலா இரண்டு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறாராம். துபாயில் தமிழ் வானொலி ஒன்றில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்த அனுபவத்துடன் சென்னை திரும்பியவருக்கு டப்பிங் வேலைகள் கிடைக்க, அதிலிருந்து நடிப்புக்குத் தாவியிருக்கிறார்.

மீண்டும் வேதிகா

பாலாவின் ‘பரதேசி’, வசந்த பாலனின் ‘காவியத் தலைவன்’ ஆகிய படங்களில் சிறந்த நடிப்பைக் கொடுத்தும் தமிழில் வலம் வரமுடியாமல் போனார் வேதிகா. தற்போது ராகவா லாரன்ஸின் ‘முனி 4 காஞ்சனா 3’ படத்தின் மூலம் திரும்பவும் வந்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் வழங்க, கோடை விடுமுறை முன்னிட்டு ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் தன்னால் நகைச்சுவை நடிப்பையும் வழங்க முடியும் என்று காட்டியிருக்கிறாராம்.

கைகொடுக்கும் படம்!

தனக்கான இடத்தைப் பிடிக்கப் போராடிவரும் பிருத்வி பாண்டியராஜனுக்கு கைகொடுக்கும் காதல் நகைச்சுவை படமாக வெளியாக இருக்கிறதாம் ‘கணேசா மீண்டும் சந்திப்போம்’ திரைப்படம். ரத்தீஷ் எரட்டே என்ற புதுமுக இயக்குநர் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இதில் பிருத்விக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் ஓவியா. படத்தின் டீஸர் வெளியாகி பத்து லட்சம் பார்வையாளர்களை ஈர்த்திருந்தாலும் ‘வியா வியா ஓவியா, நீ கிளியோபட்ரா ஆவியா..நீ மனச திறக்கும் சாவியா’என்ற தொடக்க வரிகளைக் கொண்ட பாடல் வெளியாகி இணையத்தில் பிரபலமாகி வருகிறது. ஓவியாவைத் தனது அழகாலும் நடிப்பாலும் இந்தப் படத்தில் ஓவர்டேக் செய்திருக்கிறாராம் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் தேவிகா நம்பியார்.

இயக்குநரின் செல்லம்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘என்.ஜி.கே’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சாய் பல்லவி. படத்தில் மற்றொரு கதாநாயகி ரகுல் ப்ரீத் சிங். ஆனால் சாய் பல்லவியின் நடிப்பைப் பார்த்த இயக்குநர் செல்வராகவன், ‘நீ இயக்குநரின் நாயகி’ என்று படப்பிடிப்பில் பாராட்டியிருக்கிறார்.  சாய் பல்லவிக்காக சில காட்சிகளையும் கூட்டியிருக்கிறார் என்கிறது படக்குழு.

கன்னட ‘பரியன்’

அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ கன்னடத்தில் மறு ஆக்கம் செய்யப்படுகிறது. காந்தி மணிவாசகம் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ‘பரியன்’ கதாபாத்திரத்தில் நடித்து திரைக்கு அறிமுகமாக இருக்கிறார் ஏவி.எம். குடும்பத்திலிருந்து வந்திருக்கும் மைத்ரேயா.

SCROLL FOR NEXT