“அஞ்சலி, ‘பசங்க’ ‘பூவரசம் பீப்பீ’ ‘காக்கா முட்டை’ என எப்போதாவதுதான் நாம் குழந்தைகள் சினிமா எடுக்கிறோம். குழந்தைகளின் உலகை நாம் மதிக்காமல் இருக்கப் பழகியிருப்பதுதான் குழந்தைகள் சினிமா எடுக்காமல் இருப்பதற்கும் காரணம்” என்று எடுத்ததுமே திடுக்கிட வைக்கும்படி பேசத் தொடங்கினார் ‘வானரப்படை’ படத்தின் இயக்குநர் எம்.ஜெயபிரகாஷ்...
குழந்தைகளின் குறும்புகளைச் சுட்டிக்காட்ட, அவர்களை ‘வானரப்படை’ எனப் பெரியவர்கள் வர்ணிப்பதுண்டு. இது எந்த மாதிரியான படம்?
இதுவொரு முழுமையான குழந்தைகள் திரைப்படம். குழந்தைகள் அதிகமுள்ள ஒரு நாட்டில் குழந்தைகளின் உலகைப் பேசுகிற திரைப்படங்கள் கணிசமான எண்ணிக்கையில் வெளிவர வேண்டும். ஈரான் படங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் பெரும்பாலும் குழந்தைகளின் உலகம் வழியாகத்தான் பெரியவர்களின் உலகை அணுகியிருப்பார்கள். ஆனால், நாம் குழந்தைகள் சினிமா எடுக்க யோசிக்கிறோம்.
குழந்தைக் கதாபாத்திரங்களைப் பெரியவர்களின் குணங்களோடு சினிமாவில் சித்தரிக்கும் அநீதியையும் நாம் தொடர்ந்து இழைத்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகளின் குறும்புகளை ரசிக்கவோ அவர்களது குறும்புகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வதோ இல்லை. ‘வானரப்படை’ இந்த எல்லாக் குறைகளையும் தவிர்த்துவிட்டு ஒரு முழுமையான குழந்தைகள் சினிமாவாக உருவாகியிருக்கிறது.
என்ன கதை?
பதின்வயதில் அடிவைக்கும் இன்றைய பள்ளிப் பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்குமான உறவு இங்கே எப்படி இருக்கிறது, பிள்ளைகள் பெற்றோர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள், பெற்றோர் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதைக் கதைக் கருவாக எடுத்துக்கொண்டிருக்கிறேன். பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறி, அவர்களது நிகழ்காலத்தைப் பெற்றோர் எப்படித் திருடிக்கொண்டுவிடுகிறார்கள் என்பது கதையின் மையமாக இருக்கும். ஒரு உயர் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்பு.
அங்கே வசிக்கும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை. அப்பா, அம்மா இருவருமே வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள். பள்ளிக்குச் சென்று திரும்பும் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பிரச்சினைகள் எந்தெந்த விதத்தில் முளைக்கின்றன.
ஒரு கட்டத்தில் அந்தக் குடியிருப்பின் குழந்தைகள் நீதிமன்றப் படியேறித் தங்கள் தரப்பின் குரலைப் பதிவுசெய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது எனக் கதை செல்கிறது. குழந்தைகளின் குறும்புகளுக்கு மத்தியில் அவர்களது இன்றைய பிரச்சினைகளைச் சிரிக்கச் சிரிக்கச் சில துளிக் கண்ணீரோடு கூறியிருக்கிறேன்.
குழந்தைகள்தாம் முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறார்களா?
ஆமாம்! 8 வயது முதல் 13 வயது கொண்ட அவந்திகா, நிகில் கௌசிக், ஜீவா அனிருத், நிதின், அனிகா ஆகிய ஆறு குழந்தைகள் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள். ஜோதிகாவுடன் பல விளம்பரப் படங்களில் நடித்திருக்கும் 13 வயது அவந்திகாதான் இந்தக் குறும்புச் சிறுவர் கூட்டத்துக்குத் தலைவி.
அவந்திகாவின் அப்பாவாக முத்தையா கண்ணதாசன் நடித்திருக்கிறார். மோகன் ஷர்மா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு நமோ நாராயணன் உட்பட ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளம் படத்தில் இருக்கிறது. குழந்தைகள் படமென்றாலும் இதில் இசைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் கமலக் கண்ணன் என்பவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
உங்களைப் பற்றிக் கூறுங்கள்..
எனக்குச் சொந்த ஊர் காஞ்சிபுரம். கடந்த 20 ஆண்டுகளாக சினிமாதான் எனக்குக் காதலி, மனைவி எல்லாம். ‘வனஜா கிரிஜா’ படத்தில் தொடங்கி தயாரிப்பாளர், இயக்குநர் கேயாரிடம் 14 படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். அடுத்து ஜீவா நடித்து என் நண்பன் சாய் ரமணி இயக்கிய ‘சிங்கம்புலி’ படத்துக்கு இணை இயக்குநராகப் பணிபுரிந்தேன்.
பின்னர் அதே பட நிறுவனத்துக்கு ‘நேர் எதிர்’ என்ற முதல் படத்தை இயக்கினேன். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு கலைப்புலி தாணு சார் தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டார். முதல் படம் லாபமாக அமைந்தபோதும் இரண்டாவது படத்துக்காக நிறையவே போராட வேண்டி வந்துவிட்டது. ‘வானரப்படை’ எனக்கு நிரந்தர முகவரி கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.