இந்து டாக்கீஸ்

மலையாளக் கரையோரம்: மோதும் சேட்டன்கள்

செய்திப்பிரிவு

மோகன்லால் நடிப்பில் நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் புதிய படம் ‘லூசிஃபர்’. விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படமும் மம்மூட்டியின் ‘மதுர ராஜா’ படமும் கேரள பாக்ஸ் ஆபீஸில் ஒரேநாளில் வெளியாகி மோத இருக்கின்றன. மம்மூட்டியின் சூப்பர் ஹிட் மசாலா படமான ‘போக்கிரி ராஜா’வின் அடுத்த பாகம்தான் இந்த ‘மதுர ராஜா’. இரு படங்களும் வெளியாகும் முன்பே ட்விட்டர் வலையில் இரு படங்களுக்கான டிரெண்டிங் யுத்தம் தொடங்கிவிட்டது. ‘லூசிஃபர்’ ட்விட்டர் ட்ரெண்டிங்கில் 90 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. விடுவார்களா மம்முக்கா (மம்முட்டி) ரசிகர்கள்! ‘மதுர ராஜா’வுக்கான ட்ரெண்டிங் லட்சத்தைத் தாண்டும்படி தங்கள் கைவரிசையைக் காட்டிவிட்டார்கள். மம்மூட்டி, மோகன்லாலைத் தோற்கடித்த கதைதான் இப்போது மலையாள சினிமாவிலும் ட்ரெண்டிங்.

வைரஸ்

‘22 ஃபீமேல் கோட்டயம்’, புகழ் இயக்குநர் ஆஷிக் அபு ‘மாயாநதி’ வெற்றியைத் தொடர்ந்து அடுத்தாக ‘வைரஸ்’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். நிபா வைரஸ் கேரளத்தைத் தாக்கிக் கலங்கடித்ததுதான் கதையின் பின்னணி. ஆஷிப் அலி, ரீமா கல்லிங்கல், ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். நிபா வைரஸ் தாக்கி செவிலியர் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிஜக் கதாபாத்திரத்துக்குப் படத்தில் முக்கியப் பங்கிருக்கும் எனச் சொல்லப்படுகிறது. ‘2043 பீட்’ என்ற பெயரில் கேரள வெள்ளப் பெருக்கு பற்றிய படமும் மே மாதம் வெளியாகவுள்ளது.

தமிழுக்கு வரும் சனல்

‘எஸ் துர்கா’ மூலம் கவனம் பெற்ற மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரனின் புதிய படம் ‘சோலை’. தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளில் வெளியாகவுள்ளது. ‘தொண்டி முதலும்’ புகழ் நிமிஷா சாஜோன் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம், சமீபத்தில் சிறந்த நடிகை, சிறந்த இயக்கம், சிறப்புப் பரிசு உள்ளிட்ட கேரள மாநில அரசின் நான்கு விருதுகளை வென்றுள்ளது.

பாதிக்காத தோல்வி!

ஓமர் லுலு இயக்கத்தில் ரோஷன் அப்துல் ரஹூஃப், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஒரு அடார் லவ்'. அதில் இடம்பெற்ற 'மாணிக்க மலராய பூவி' பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகும் முன்பு ப்ரியா பிரகாஷ் வாரியரின் கண் சிமிட்டல் டீஸர் வைரல் ஆனது.

மலையாளம், தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் காதலர் தினத்தன்று வெளியாகி, மிக மோசமான விமர்சனங்களைப் பெற்று, படுதோல்வியைச் சந்தித்தது. படத்தின் நாயகி ப்ரியா பிரகாஷ் வாரியரை மட்டும், இந்தத் தோல்வி பாதிக்கவில்லை. அவருக்குத் தமிழ், இந்திப் பட உலகில் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அவற்றை அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT