இந்து டாக்கீஸ்

தரைக்கு வந்த தாரகை 03: அக்கம்மா என்றொரு கனவு தேவதை!

தஞ்சாவூர் கவிராயர்

அழகான பொண்ணுநான்

அதுக்கேத்த கண்ணுதான்

என்கிட்டே இருப்பதெல்லாம்

தன்மானம் ஒண்ணுதான்!

ஈடில்லா காட்டுரோஜா இதை நீங்க பாருங்க

எவரேனும் பறிக்க வந்தா குணமேதான் மாறுங்க

முள்ளேதான் குத்துங்க................

படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும்...

எங்கள் வீட்டருகே இருந்த தாத்தையாவிடம் சம்ஸ்கிருத சுலோகங்களைக் கற்றுக்கொள்ள அப்பா ஏற்பாடு செய்திருந்தார். அவர் சுலோகங்களுக்கு நடுவே “குழந்தாய்! உனக்கு போஜராஜனின் காளிதாஸன் கதைகளைச் சொல்லட்டுமா?” என்று கேட்டார். தாத்தா சொல்கிற விஷயங்கள் வேடிக்கையாக இருக்கும். நான் தலையாட்டினேன்.

போஜராஜா கதையில் ரங்காஸனி கதையும் வரும். தாத்தா கதையை எப்படியோ திருகி காளிதாஸ் ரங்காஸனியிடம் போகிறமாதிரி செய்துவிடுவார். ரங்காஸனிக்கும் காளிதாஸனுக்கும் இடையே நடக்கும் சம்பாஷணைகளைச் சொல்லும்போது தாத்தாவே காளிதாஸாக மாறிவிடுவார். அவர் சொல்லும் கதைகளை வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன்.

தாத்தா சொன்னார் “குழந்தாய்! உனக்குத் தெரியாது! ரங்காஸனி மட்டும் இல்லேன்னா காளிதாஸ் அப்பேர்ப்பட்ட கவிதைகளை எழுதியிருக்க முடியுமா? அழகை ரசிக்கணும்னா அதுக்கு ரங்காஸனிதான் வேணும்! மனைவி லாயக்குப் படாது! அதுக்காகத்தான் சொல்வாங்க. சீக்கிரமாகத் தூக்கம் வரணுமானா பக்கத்தில் மனைவியும் புஸ்தகமும் இருக்கணும்!”

இப்படிச் சொல்லிவிட்டு மனைவி சூடம்மாவைப் பார்த்து பெரிதாகக் கொட்டாவி விடுவார்! நானோ இரண்டு பேரையும் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருப்பேன்! ஆதிசங்கரரின் செளந்தர்ய லஹரியை அவர்தான் சொல்லிக் கொடுத்தார்!

ஆன்மிக அனுபவம்

சினிமா படப்பிடிப்பு இடைவேளைகளில் நான் செளந்தர்ய லஹரியின் ஸ்லோகங்களை முணுமுணுத்துக் கொண்டிருப்பேன்! தினம்தோறும் ஸ்ரீசக்கர பூஜை செய்வேன். ஒரு முறை சிருங்கேரி பீடாதிபதி சங்கராச்சாரியாரைச் தரிசித்தபோது “நீ ஸ்ரீசக்கர பூஜை செய்கிறாயா?” என்று கேட்டபோது திடுக்கிட்டேன். இது எப்படி இவருக்குத் தெரியும்? “நீ பாலமந்திரம் உபதேசம் பெற்று தீட்சை வாங்கிக்கொண்டால் நல்லது” என்றார்.

“ஆனால் இதை உன் கணவரின் அனுமதி பெற்றுத்தான் செய்ய வேண்டும்” என்றார். கணவரிடம் கேட்டதற்கு “நீ என்ன சந்நியாசினி ஆகப் போகிறாயா? அதெல்லாம் வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். ஆனால், என் மனத்தில் திரும்பத் திரும்ப குரு உபதேசம் பெற வேண்டும் என்ற எண்ணமே சுற்றிவந்தது. என் கணவர் நான் படுகிற அவஸ்தையைப் பார்த்துவிட்டு “சரி உன் விருப்பம் அதுவானால், குருவின் ஆக்ஞைப் படியே செய்” என்றார்.

ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியாரிடம் நான் பாலமந்திரம் உபதேசம் பெற்றேன். ஸ்ரீ ஜகத்குரு என்னிடம் “பலதரப்பட்ட மனிதர்கள் என்னிடம் வருகிறார்கள். தங்கள் கவலைகளையும் கஷ்டங்களையும் சொல்லி தீர்த்துவைக்கச் சொல்கிறார்கள். திரைப்படத் துறையில் இருந்தாலும் நீ மட்டும்தான் உன் நேரத்தை எல்லாம் தெய்வீக வழிபாட்டில் கழிக்க விரும்புகிறாய்!”என்றார். இதற்குப் பிறகு எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. எனக்குள் இருந்த பயமும் கூச்சமும் போய்விட்டன. அதற்குப் பதிலாகத் தன்னம்பிக்கையும் மனஉறுதியும் ஆன்மிக ஈடுபாடும் ஏற்பட்டுவிட்டது.

சூடம்மா தாத்தாவிடம் சொல்வார். “நம்மவீட்டு கொல்லைப்புற மதில் சுவர் வழியாக அக்கம்மாவை எட்டிப் பார்ப்பதை விட்டுவிட்டு குழந்தைக்கு பகவத்கீதையிலிருந்து ஏதாவது சுலோகங்களைச் சொல்லிக் கொடுத்தால் பிரயோசனம் உண்டு” என்பார்.

அக்கம்மா அடுத்த வீட்டுப்பெண். அழகில் அவளை மிஞ்ச ஊரில் எந்தப் பெண்ணும் இல்லை. புசுபுசுவென்ற கூந்தலுடன் அதில் ஒரே ஒரு பூவைச் சூடிக்கொண்டு அவள் தண்ணீர் எடுக்கத் தெருவழியே நடந்துபோவதைப் பார்க்கிறவர்கள், “கிருஹலட்சுமியில் வருகிற கண்ணாம்பா மாதிரியே இருக்கா!” என்பார்கள்.

இந்திப் பட ரசிகர்கள் “அப்படியே தேவிகாராணி மாதிரி இருக்கா!” என்று புகழ்வார்கள். மொத்தத்தில் அக்கம்மா எங்கள் ஊர் ஆண்களின் ‘கனவு தேவதை’. பெண்களுக்கோ அவள் ‘பெண் பிசாசு’ பானுமதி கூறியதைக் கேட்டு எனக்குச் சிரிப்பாக வந்தது. நான் எழுதுவதை நிறுத்தினேன். அவர் எழுந்து உள்ளே போனார்.

எழுபது வயது சபலம்

சிறிது இடைவேளை. பானுமதி மீண்டும் வந்து உட்கார்ந்தார். கண்களை மூடி தியானிப்பதுபோல் சற்று நேரம் இருந்தார். இது போன்ற சமயங்களில் அவராகப் பேசும்வரை நான் காத்திருப்பது வழக்கம். இந்தமுறை அவர் மெளனத்தை நானே கலைத்தேன்.

“அப்புறம் அக்கம்மா என்ன ஆனாள்?” எனது கேள்விக்காகக் காத்திருந்தவர்போல் பானுமதி பேசத் தொடங்கினார்.

பக்கத்து வீட்டு தாத்தா வாழை இலை கேட்கிற சாக்கில் காம்பவுண்டு சுவர் வழியாக எட்டிப் பார்த்து அக்கம்மாவிடம் பேச்சுக்கொடுத்து அவள் அழகைப் புகழ்வார்! அவள் நல்ல உயரம். பெரிய அகன்ற விழிகள், பொன்நிறம், வடிவான அழகு முகம் - இதுதான் அக்கம்மா. அவளுடைய கணவர் ஒரு தபால்காரர். அழகாகவும் இருக்க மாட்டார். குள்ளம் வேறு. அருகில் வசிக்கும் பெண்கள் அவள் அழகைப் பார்த்துப் பொறாமை காரணமாக அவளைப் பற்றி அவதூறு பேசினார்கள். சிலர் அவர் நடத்தையைப் புகழ்ந்தார்கள்.

அக்கம்மா அடக்கமே உருவானவள். கடவுள் பக்தி மிகுந்தவள். அவருடைய ஒரே பிரச்சினை அவளுடைய மாமியார்தான்! அக்கம்மா எங்கே போனாலும் அவள் பின்னாடியே போய் வேவுபார்ப்பதுதான் அவள் வேலை! அக்கம்மாவுக்குப் புத்திமதி சொல்லும்படி அவள் தாத்தாவைக் கேட்டுக்கொண்டாள். இதுதான் சாக்கு என்று தாத்தா அக்கம்மாவைக் கூப்பிட்டு அனுப்பினார்.

அக்கம்மா வந்தாள். அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டாள். சற்றே தள்ளி நின்று பவ்யமாக “ஸ்வாமி! எதற்குக் கூப்பிட்டீர்கள்?” என்று கேட்டாள்.

அக்கம்மாவைப் பார்த்ததும் தாத்தா தன் நிலை மறந்துவிட்டார். “ஏனம்மா தள்ளி நிற்கிறாய்? இப்படிவா. உன்னிடம் ஒரு ரகசியம் பேசவேணும்”

அக்கம்மாவைக் கூப்பிட்டுப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார். அவள் தொடையில் கை வைத்து அழுத்தியபடி சொன்னார். “அக்கம்மா! உனக்காக என் மனசு ரொம்பவே கஷ்டப்படுகிறது. ஏன் தெரியுமா? உன் அழகுக்கு ஏற்ற புருஷன் அமையவில்லையே! அவனோடு வாழ்ந்து என்ன சுகத்தைக் கண்டாய் பாவம்” என்றார். அக்கம்மா வெட்கத்துடன் “ஸ்வாமி உங்கள் ஆசீர்வாதத்துக்கு நன்றி. எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன்” என்றாள். “ஒருபக்கம் அவலட்சணமான புருஷன். மறுபக்கம் மாமியாரின் தொந்தரவு. பாவம் நீ படுகிற சித்திரவதை எனக்குத் தெரியும் அம்மா!” என்று மறுபடியும் அவள் தொடையை அழுத்தினார்.

அக்கம்மா இதை எதிர்பார்க்கவில்லை. “ஐயையோ! என் வீட்டுக்காரர்வரும் நேரமாச்சு! நான் போறேன்” என்று எழுந்தவளின் தோளைத்தொட்டு உட்காரவைத்து “என்னம்மா அவசரம்? நான் உன்கிட்டே எவ்வளவோ பேசவேண்டியிருக்கு” என்று கிசுகிசுத்தார்.

“மன்னிக்கணும் என் வீட்டுக் காரருக்கு சமைக்கணும்” என்று சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து ஓடியே போய்விட்டாள். நான் அம்மாவிடம் நடந்ததைச் சொன்னேன். “இந்த வயசில் கிழவருக்கு ஆசையைப் பாரு!” என்று திட்டினாள். எனக்குப் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த மர்லின் மன்றோவின் Seven year itch படம் ஞாபகம் வந்தது. இது Seventy years itch போலும்! பானுமதி
 

(தாரகை ஜொலிக்கும்)
தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT