இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தி லேயே மெக்சிகன் திரையுலகம் தன்னை அடையாளம் காட்டியது. ஆனால், அதன் பொற்காலம் என்பது இரண்டாம் உலகப் போரின் காலமாக விமர்சகர் களால் மதிப்பிடப்படுகிறது. யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அநேக நாடுகள் போர் குறித்த திரைப்படங்களையே எடுத்துக்கொண்டிருந்தன.
அப்போது காதல், நகைச்சுவை, இசை வகையறா படங்களைப் படைக்கத் தொடங்கியது மெக்சிகோ. இதன் மூலம் லத்தீன் அமெரிக்க நாடுகள்வரை அதன் புகழ் பரவியது. ‘லத்தின் அமெரிக்க சினிமா’ எனும் அடையாளம் கிடைக்க மெக்சிகன் படங்கள் ஆதாரமாக அமைந்தன.
60-களில் தொலைக்காட்சித் துறையின் வருகையால் மெக்சிகோ திரைத் துறை துவண்டுபோனது. அது உருவாக்கிய உலகப் புகழ்பெற்ற சில திரைக் கலைஞர்கள் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு மெக்சிகோவைக் கொண்டுசென்றனர்.
‘ஹாரி பாட்டர் அண்டு தி பிரசனர் ஆஃப் அஜ்காபன்’ (2004), ‘பேர்ட்மேன்’ (2015), ‘தி ஷேப் ஆஃப் வாட்டர்’ (2017) உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் படங்களை இயக்கிய ஆஸ்கார் மன்னர்களான அல்ஃபோன்சோ கியூரன் ஒரஸ்கோ, எலெஜாண்ட்ரோ கான்ஸலஸ், கிலெர்மோ டெல் தோரோ ஆகியோர் மெக்சிகோ மண்ணின் மைந்தர்களே.
இப்படியான உலகப் புகழ்பெற்ற மெக்சிகன் கலைஞர்கள் ஹாலிவுட்டின் மசாலா வண்ணத்தை மாற்றிக்காட்ட முயன்றனர். இவர்களைப் போல உலகப் புகழ் பெறாவிட்டா லும் உலகப் படவிழாக்களில் கொண்டாடப்பட்ட எண்ணற்ற படங்களை எடுத்த கலைஞர்களின் படைப்புகள் சிலவற்றைத் திரையிட இருக்கிறது ‘மெக்சிகன் பட விழா’.
இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம், புது டெல்லி, சென்னையில் உள்ள மெக்சிகோ தூதரகங்களுடன் இணைந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சேஸ் மையத்தில் மார்ச் 18 முதல் 20வரை மூன்று நாள்களின் மாலைப் பொழுதுகளில் ‘மெக்சிகன் பட விழா’வை நடத்த விருக்கிறது. அப்படவிழாவில் திரையிடப்படவிருக்கும் சில படங்களின் முன்னோட்டம் இங்கே.
நட்பையும் மொழியையும் மீட்க
அழிவில் இருக்கும் மொழிகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள மெக்சிகோவில் உள்ள ஒரு குக்கிராமத்துக்கு மார்டின் வருகிறார். அந்தக் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசத் தெரிந்தவர்கள் இரண்டு முதியவர் கள் மட்டுமே. ஆனால், 50 ஆண்டு காலப் பகை காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை.
இவர்களுடைய மெளனத்துக்குப் பின்னால் இருக்கும் முக்கோணக் காதல் கதையைக் கண்டறிந்து அவர்கள் நட்பையும் மொழியையும் மீட்டெடுக்கும் முயற்சிதான், ‘ஐ ட்ரீம் இன் அனதர் லேங்க்வேஜ்’.
தன்னுடைய காதலியோடு வாழ, யுத்தக் களத் தில் இருந்து தப்பித்து 1940-ல் மெக்சிகோவுக்கு ஓடிவருகிறார் ழாக் மோர்னார்ட். அவர் அப்பாவிக் காதலன் அல்ல, ரஷ்யப் புரட்சியாளரான லியோன் ட்ராட்ஸ்கியைக் கொல்ல சோவியத் ரகசியப் படையால் அனுப்பப்பட்ட உளவாளி என்பதை ‘தி சோசன்’ திரையில் விரிக்கிறது.
சோஃபியாவிடம் பாலியல் தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த உலிசஸ் காதல் வயப்படு கிறான். எப்பாடுபட்டாவது சோஃபியை அவன் காப்பாற்றும் போராட்டமே, ‘தி சோசன் ஒன்ஸ்’.
திருநங்கை என்பதாலேயே அனுதினம் பல இன்னல்களைக் கடந்துவருகிறார் மேபல். அவருக்குத் துணைநிற்கும் தோழியும் எதிர்பாராத விதமாக மரணமடைய, அவருடைய வாழ்க்கை மீண்டும் தடம்புரளுவதைத் திகிலூட்டும் விதமாகக் காட்சிப்படுத்துகிறது, ‘கார்மின் ட்ராப்பிக்கல்’.