தென்னிந்தியத் திரைப்படத் துறையில் தயாரிப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எனப் பழுத்த அனுபவம் கொண்டவர் கேயார். சங்க நடவடிக்கைகளிலிருந்து விலகியிருந்த இவர், ‘பாகுபலி’ ’மெர்சல்’ தொடங்கி, சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘கே.ஜி.எஃப்’ வரை, வரவேற்புப் பெறும் என்று அவர் உறுதியாக நம்பும் படங்களை வாங்கி விநியோகம் செய்து வந்தார்.
அந்த வரிசையில் ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற புதிய தமிழ்ப் படத்தை வாங்கித் தமிழகமெங்கும் வெளியிடுகிறார். தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய புதையல் கிடைக்கிறது. அதைக் கண்டெடுத்தவர் மறைத்துத் தான் மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கும்போது, அந்தக் கிராமத்தில் இருக்கும் ஆயிரம் பேருக்கும் புதையல் விவகாரம் கசிந்துவிடுகிறது. இது முழுநீளக் கிராமத்து நகைச்சுவைப் படம். இயக்குநர் பூபதி பாண்டியனின் உதவியாளர் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த் நாயகனாக நடித்திருக்கும் படம்.
பாங்காக் பாம்பு!
‘உறியடி 2’ படத்தைப் போலவே முதல் பாகக் கதையுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு புதிய பழிவாங்கும் பாம்புக் கதையை ‘நீயா2’ என்ற தலைப்பில் படமாக இயக்கி யிருக்கிறார் பாலுமகேந்திராவின் உதவியாளர் சுரேஷ். ஜெய், ராய் லட்சுமி இணைந்திருக்கும் இந்தப் படத்தில், மிருகவதை அமைப்பின் கெடுபிடிகளைத் தாண்டி ஒரு நிஜ ராஜநாகத்தையே நடிக்கவைத்திருக்கிறேன் என்கிறார் இயக்குநர். பாம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கும் முன்பு, பாங்காக் சென்று, அங்கு ராஜநாகத்தைச் செல்லப்பிராணியாக வளர்க்கும் சில வீடுகளுக்குப் போய் ஆலோசனைகள் பெற்றுவந்து பாம்புக் காட்சிகளைப் படமாக்கி யதாகக் கூறுகிறார்
சூர்யாவுக்குப் பிடித்த கதை!
சிறிய முதலீட்டில் தயாராகி 2016-ல் வெளியான ‘உறியடி’, விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற படம். ஆனால், அதை எழுதி, இயக்கி, தயாரித்து நடித்த விஜயகுமார் என்ற இளைஞருக்கு நஷ்டம்தான் மிஞ்சியது. தற்போது ‘உறியடி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை விஜயகுமாரிடம் கேட்ட நடிகர் சூர்யா, அதைத் தானே தயாரித்திருக்கிறார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் சாதி அரசியலையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் கேள்வி கேட்டு அதற்கான தீர்வைச் சொல்லும் விதமாக ‘உறியடி 2’ படத்தை உருவாக்கியிருக்கிறாராம் விஜயகுமார்.
காதலும் பிரிவும்
கடந்த ஆண்டு வெளியான ‘களரி’ படத்தில் கிருஷ்ணா ஜோடியாக அறிமுகமாகிக் கவனிக்க வைத்தார் சம்யுக்தா மேனன். தற்போது ‘ஜூலைக் காற்றில்’ படத்தின் மூலம் அவர் திரும்ப வந்திருக்கிறார். மறைந்த இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஜீவாவின் உதவியாளர்
கே.சி.சுந்தரம் இயக்கியிருக்கும் படம். “ காதலையும் பிரிவையும் பேசும் அற்புதமான கதையில் மீண்டும் தமிழ் ரசிகர்களைக் கவர வந்திருக்கிறேன். ‘பிரேமம்’ படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆனந்த் நாக்தான் கதாநாயகன். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையும் கோவா, கொடைக்கானல் எனச் சில்லென்ற இடங்களில் படமாக்கியிருப்பதும் கூட உங்களுக்குப் பிடிக்கும் ” என்று தனது படத்தைப் பரிந்துரைக்கிறார் சம்யுக்தா.
சண்டைக்காக சீனா!
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரித்துவரும் ‘எங் மங் சங்’ படத்தில் பிரபுதேவா கராத்தே மற்றும் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனனும் பிரபுதேவாவின் அப்பாவாக தங்கர்பச்சானும் நடித்துவருகிறார்கள். 1980-களில் நடக்கும் மார்ஷியல் ஆர்ட்டைப் பின்னணியாகக் கொண்ட தமிழ்ப் படமாம் இது.
இதற்கான கராத்தே மற்றும் குங்பூ சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் ஸ்டண்ட் இயக்குநர் சில்வா. சமீபத்தில் சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் அரங்குகள் அமைத்துச் சண்டைக்காட்சிகளைப் படமாக்கித் திரும்பியிருக்கிறார்கள். அர்ஜுன் எம்.எஸ் இயக்கிவரும் படம் இது.
பேராசிரியர் சமுத்திரக்கனி!
‘சாட்டை’ படத்தில் மாணவர்கள் கொண்டாடும் ஆசிரியராக நடித்தார் சமுத்திரக்கனி. அந்தப் படத்தின் வெற்றியால் தற்போது ‘அடுத்த சாட்டை’ என்ற தலைப்பில் அதன் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து வருகிறார் முன்னாள் தமிழகக் காவல் துறைத் தலைவர், எழுத்தாளர் திலகவதி ஐ.பிஎஸ்ஸின் மகன், மருத்துவர் பிரபு திலக். கதாநாயகியைத் தவிர, ‘சாட்டை’ படத்தின் மொத்த டீமும் இதில் உண்டு.
தற்போது கூடுதல் ஈர்ப்பாக சசிகுமார் இந்தப் படத்தில் நட்புக்காக இணைந்திருக்கிறார். பள்ளி ஆசிரியர் என்ற நிலையிலிருந்து இந்தப் படத்தில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார் சமுத்திரக்கனி. கல்லூரியையும் மாணவர் சக்தியையும் வைத்து எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுத்த முடியும் என்பதைப் பேசுகிறதாம் ‘அடுத்த சாட்டை’.