இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: சேட்டை சூப்பர் ஹீரோ

எஸ்.சுமன்

‘நம் அனைவருக்குள்ளும் ஒரு சூப்பர் ஹீரோ ஒளிந்திருக்கிறான். சிறு மேஜிக் நிகழும்போது அவன் நிச்சயம் வெளிப்பட்டு அற்புதங்களை நிகழ்த்துவான்’ என்கிறது டி.சி குழுமத்திலிருந்து வெளியாகவிருக்கும் ’ஷாசம்!’ (SHAZAM!) என்ற புதிய சூப்பர் ஹீரோ திரைப்படம்.

காப்பகம் ஒன்றில் வளரும் ஒரு பதின்ம வயதுச் சிறுவன், தனக்கான நியாயங்களுடன் செயல்பட்டுப் பலரது கவனத்தையும் ஈர்க்கிறான். தனது தனித்துவப் போக்கால் சாகச உலகத்துக்கும் அறிமுகமாகிறான். அங்கே அவனது ஆர்வமும் இதர தகுதிகளும் பரிசீலிக்கப்பட்டுப் புதிய சூப்பர் ஹீரோவாக அங்கீகாரம் பெறுகிறான்.

‘ஷாசம்!’ என்ற மந்திரச் சொல்லை உச்சரித்ததும் ஒரு வளர்ந்த மனிதனின் தேகத்துடன் சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறான். ஆனால், உள்ளுக்குள் குழந்தைமையின் நெகிழ்வும் அந்த உலகுக்கான விளையாட்டும் வேடிக்கையும் மாறாதிருக்கிறான்.

இப்படித்தான் கோமாளித்தனமும் சாகசமும் கலந்த புதுமையானதொரு சூப்பர் ஹீரோவின் சாகசங்கள் தொடங்குகின்றன. புதிய சூப்பர் ஹீரோவுக்கான சக்திகளில் சாலமன், ஹெர்குலஸ், அட்லஸ் உட்பட 6 சக்தியாளர்களின் சிறப்புகளும் அடங்கும் என்பதால், அப்பெயர்களின் முதலெழுத்துகளில் இருந்து புதிய ஹீரோவுக்குப் பெயர் காரணம் சொல்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தில் பிளாக் ஆடம் என்னும் சூப்பர் வில்லனை எதிர்ந்து ஷாசம் மோதுவதாக நகைச்சுவையும் ஆக்‌ஷனும் கலந்து படம் உருவாகியுள்ளது.

சிறுவனாக ஏஷர் ஏஞ்சல் நடிக்க அவனது சூப்பர் ஹீரோ உருவில் சாகரி லெவி நடித்துள்ளார். மார்க் ஸ்ட்ராங், ஜாக் கிரேசர் உள்ளிட்டோர் உடன் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை டேவிட் சாண்ட்பெர்க் இயக்கி உள்ளார். ஐமேக்ஸ் 3டி பதிப்பாகவும் தயாராகியுள்ள ‘ஷாசம்’ திரைப்படம் இந்தியாவில் ஏப்ரல் 5 அன்று வெளியாக உள்ளது.ஹாலிவுட் ஜன்னல்முன்னோட்டத்தைக் காண

SCROLL FOR NEXT