தானோஸ் அக்கிரமத்தால் உலகின் பாதியும், சூப்பர் ஹீரோக்களில் பலரும் அழிந்த நிலையில் மிச்சமிருக்கும் உலகைக் காக்க வேண்டிய தேவை உருவாகிறது. இதற்காக எஞ்சியிருக்கும் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்கள் தங்களது பழைய நண்பர்களுடன் ஒன்று சேர்கிறார்கள். இழப்பதற்கு இனி ஏதுமில்லை என்ற துணிவுடன் அவர்கள் இறுதி யுத்தத்தைத் தொடங்குவதே ‘அவெஞ்சர்ஸ்: என்ட் கேம்’ படத்தின் கதை.
கடந்த வருடம் வெளியான ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ படத்தின் தொடர்ச்சியாகவும், அவெஞ்சர்ஸ் வரிசையில் கடைசி பாகமாகவும் ’அவெஞ்சர்ஸ்: என்ட் கேம்’ வெளியாகிறது. ‘இன்ஃபினிட்டி வார்’ படத்துடன் ஒருசேரத் தயாரான ’எண்ட் கேம்’ படத்தையும் அந்தோணி ருஸோ-ஜோ ருஸோ சகோதரர்களே இயக்கி உள்ளனர்.
இதில் ‘அயர்ன் மேன்’, ‘கேப்டன் அமெரிக்கா’, ‘ஹல்க்’, ‘தோர்’, ‘பிளாக் விடோ’ முதலிய சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களுடன் ‘ஆன்ட் மேன்’, ‘கேப்டன் மார்வெல்’ உள்ளிட்ட பலரும் ஒன்று சேர்கின்றனர்.
இந்த அவெஞ்சர்ஸ் படத்தின் இந்திய மொழி பதிப்புகளுக்கென பிரத்யேகமாக ‘மார்வெல் கீதம்’ ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி வெளியிடுகிறார். தமிழ்ப் பதிப்புக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதி உள்ளார்.
இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏப்ரல் 26 -அன்று வெளியாகிறது. முன்னதாக ரஹ்மானின் மார்வெல் கீதம் இசைத் தொகுப்பு ஏப்ரல் 1 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.