மதுரையிலிருந்து சென்னைக்கு சேர்ந்தே வந்து சினிமாவில் ஜெயித்தவர்கள் தயாரிப்பாளர் அ.செ. இப்ராஹிம் ராவுத்தரும் அவரது நண்பரான நடிகர் விஜயகாந்தும். இருவரும் இணைந்தும் தனித் தனியாகவும் பல வெற்றிப் படங்களைத் தயாரித்திருக்கிறார்கள். இப்ராஹிம் ராவுத்தரின் மறைவுக்குப்பின் படங்கள் எதையும் தயாரிக்காமல் இருந்தது ராவுத்தர் பிலிம்ஸ். தற்போது அ.செ. இப்ராஹிம் ராவுத்தரின் மகனான
அ. முஹம்மது அபுபக்கர் அப்பாவின் வழியில் திரைப்படத் தயாரிப்பில் முழு மூச்சுடன் இறங்கியிருக்கிறார். அதன் புதிய தொடக்கமாக, ஆரி நாயகனாகவும் சாஷ்வி பாலா நாயகியாகவும் நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ என்ற படத்தைத் தயாரிக்கிறார். கவிராஜ்.யு என்ற அறிமுக இயக்குநரின் உருவாக்கத்தில் தயாராகும் அறிவியல் புனைவு திரைப்படம் இது.
‘சூப்பர் டீலக்ஸ்’ எதிர்பார்ப்பு!
‘ஆரண்ய காண்டம்’ படத்தை தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் பஹத் பாசில், சமந்தா, மிஷ்கின் எனப் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் திரையரங்க விநியோக உரிமையை ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களைத் தயாரித்திருக்கும் ‘ஒய்நாட்எக்ஸ்’ சசிகாந்த் கைப்பற்றியிருக்கிறார். இதனால் படத்துக்கான எதிர்பார்ப்பு மேலும் கூடி வருகிறது.
நடிப்பிலிருந்து இயக்கம்
முக்கியத்துவம் அதிகமோ குறைவோ எவ்வகைக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன் திறமையை தனித்துவத்துடன் வெளிப்படுத்தும் நடிகர் போஸ் வெங்கட். அவர் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். “இது ஒரு நீண்ட கால கனவு, இறுதியாக அது நிறைவேறி இருக்கிறது. என் திரைக்கதை மீது நம்பிக்கையை வைத்து முழு ஆதரவையும் வழங்கிய தயாரிப்பாளர் ஹஷீருக்கு என் நன்றி” எனும் போஸ் வெங்கட், இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், ‘ஆடுகளம்’ முருகதாஸ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்க இருப்பதையும் உறுதிப்படுத்துகிறார்.