இந்து டாக்கீஸ்

திரைப் பார்வை: இது குழந்தைகளுக்கான படமல்ல! - பேரன்பு

திரை பாரதி

50 ஆண்டுகளுக்கு முன்பே, திரைக்கதையை அதன் வடிவம், உத்திகள் சார்ந்து பரிசோதனை செய்து பார்த்ததில் பெரும் கலகம் விளைவித்த சினிமா சாமுராய் என்று அகிரா குரசோவாவுக்குப் புகழாரம் சூட்டலாம்.

இன்று திரைக்கதை அதன் எல்லாக் கட்டுமானங்களையும் கோட்பாடுகளையும் உதறித் தள்ளிவிட்டு முன்னேறுவது உலக அளவில் படைக்கப்படும் சுயாதீனத் திரைப்படங்களில் மட்டும்தான். முதலீடு சார்ந்த தொழிலாக இருக்கும் வெகுஜனத் திரைப்படத் தயாரிப்பில் பங்கெடுக்கும் பெரும்பாலான படைப்பாளிகள் திரைக்கதையில் கூட ரிஸ்க் எடுக்க முடியாத மனநிலையில்தான் இயங்குகிறார்கள்.

‘பேரன்பு’ படத்தை இயக்கியிருக்கும் ராம், வெகுஜன சினிமாவுக்குள் இயங்கினாலும் மரபார்ந்த திரைக்கதையின் சட்டகத்துக்கு வெளியே தனது படங்களுக்கான திரைக்கதையை உருவாக்குபவராக இருக்கிறார். ‘பேரன்பு’ம் இதற்கு விதிவிலக்கு அல்ல.

பாப்பாவின் அப்பாவாகிய அமுதவன், பார்வையாளர்களை நோக்கி, “நீங்க எவ்வளவு நல்ல ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கீங்கனு புரிஞ்சுகிறதுக்காக, என் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களைத் தேர்ந்தெடுத்து இந்தக் கதையை நான் எழுதுகிறேன்” என்று தன் கதையைக் கூறத் தொடங்குகிறார். அவரது வாழ்க்கை தனித் தனி அத்தியாயங்களாக எவ்விதப் பரபரப்பும் இன்றிக் காட்சி பூர்வ திரை நாவலாக விரிகிறது.

மம்மூட்டி எனும் பெரு நடிகரையும் அஞ்சலி எனும் திறமையான நடிகையையும் ராமின் முந்தைய படமான ‘தரமணி’ தந்த ஊக்கத்தையும் நம்பி, பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கக்கூடும் என உள்ளே வருபவர்களுக்கு ‘பேரன்பு’ பெருத்த ஏமாற்றம் தரக்கூடியது. முதல் அத்தியாயம் முடியும்போதே பெரும் தொந்தரவாக மாறிவிடுகிறது படம்.

அமுதவனின் வாழ்க்கைப் பயணம் தமிழ் சினிமா இதற்குமுன் கண்டிராத ஒன்று. அதிக எண்ணிக்கையில் சிறப்புக் குழந்தைகள் இருந்தபோதும் அவர்கள் நம் கண்களில் அபூர்வமாகத் தட்டுப்படுவது ஏன் என்பதுபற்றி யாருமே சிந்திப்பதில்லை. அபூர்வமாகத் தட்டுப்படுகிறவர்களையும் பரிதாபத்துக்கு உரிய அல்லது சபிக்கப்பட்ட ஜீவன்களாக மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட பொதுமனநிலை நம்முடையது. அதிலிருந்து நம்மை வெளியே இழுத்துப்போடுகிறது ‘பேரன்பு’.

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகள் பதின் பருவத்தை எட்டும்போது அவர்களுக்கும் இயற்கையின் பாலியல் உந்துதல் உண்டு என்பதை ஒளிக்காமல் நம் முன்னால் வைக்கிறார் இயக்குநர். சிறப்புக் குழந்தையே ஒரு பெண் எனில் அங்கே ஒரு தாயின் அவசியம் எத்தகையது என்பதை ஒரு தந்தையின் தவிப்புகள் வழியே உணர்த்திவிடுகிறார்.

பதின் பருவத்தில் இருக்கும் சிறப்புக் குழந்தையின் உலகை மிக அண்மையில் நமக்குக் காட்டும் இயக்குநர், அதைவிட அதிகமாக, அக்குழந்தையைப் பராமரிக்கும் ஒரு நடுத்தரவயதுத் தந்தையின் தவிப்புகளை, போராட்டங்களைப் பாசாங்கு ஏதுமில்லாமல் நமக்கும் கடத்துவதில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

வாழ்க்கை நிர்பந்தித்துவிடும் கொடூரங்களைக் காட்ட ஆவணப்படங்கள் இருக்கின்றன. அவை நேரடிச் சாட்சியங்கள். ஆனால், ஒரு திரைப்படம் வழியே, சகிக்க இயலாத, புறக்கணிப்புகள் மலிந்த, இத்தகைய கொடூரங்களைப் பார்வையாளர்கள் உணர வேண்டுமானால், திணிக்கப்படாத அழகியலைத் திரைக்கதையிலும் காட்சிமொழியிலும் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அதை இயக்குநர் ராம், ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஆகிய மூவருமே சாத்தியப்படுத்தியிருப்பதன் மூலம்தான் ‘பேரன்பு’ பெருந் தொந்தரவாக மாறிவிடுகிறது.

கொடூரம், பேரன்பு என இரு எதிரெதிர் குணங்கள் ஊடாடும் இயற்கையிடமும் அதன் சாயலாக இருக்கும் மனிதர்களிடமும் இருக்கும் இம்முரணின் முகத்தை அமுதவனும் பாப்பாவும் விஜியும் அவர்களது வாழ்க்கையில் வந்துபோகும் சக மனிதர்களும் நமக்குக் காட்டிச் செல்கிறார்கள். அந்த சக மனிதக் கூட்டத்தில் நாமும் இருக்கிறோம் என்பதை மறைமுகமாகக் கூறும் மகத்தான படைப்பே ‘பேரன்பு’.

SCROLL FOR NEXT