திரை மொழியின் பொதுவான தன்மைகள் பலருக்குப் புரியும்போதும், அதன் அடிப்படைச் சரட்டின் சூட்சுமம் புலன்படாத ஒன்றாகவே பெரும்பாலோருக்கு உள்ளது. அந்தச் சூட்சுமத்தை அறிந்தவர்கள் வெகுசிலரே. இயக்குநர் ம. மணிகண்டன் வெகுசிலரில் ஒருவர்.
உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். தலைமைக் காவலரான தந்தையின் பணி நிமித்தம் பல ஊர்களுக்கு இடம்பெயரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இடப்பெயர்வு அளித்த அனுபவமே மணிகண்டனின் திரைமொழி ஆளுமைக்கான விதையெனச் சொல்லலாம்.
தடை செய்த குறும்படம்
தொடக்கத்தில், திருமண ஒளிப்படக் கலைஞராக அவர் பணியாற்றினார். திரைப்படத்தில் முயற்சி செய்யலாமென சென்னைக்கு வந்தார். அவரது ஒளிப்படங்களைப் பார்த்த ஒருவர், ‘ஸ்டில் ஃபோட்டோகிராபியில் படைப்பாற்றலுக்குப் பெரிய இடமிருக்காது, எனவே, ஒளிப்பதிவுக்கு முயற்சி செய்யுங்கள்’ என ஆலோசனை வழங்கினார். ஒளிப்பதிவாளராக மாற முயற்சி செய்யத் தொடங்கினார். ‘பார்த்திபன் கனவு; ‘சதுரங்கம்’ போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். 2008-ல் ‘பூ’ படத்தில் இணை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவதற்காக, ‘மைண்ட் ஸ்கிரீன்ஸ்’ திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஒத்த ரசனையுடைய நண்பர்களின் வட்டம் உருவானது. ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி போன்றவர்களின் குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். சில குறும்படங்களுக்கு ஒளிப்பதிவுடன் வசனத்தையும் திரைக்கதையையும் எழுதிக்கொடுத்தார். அப்போது படிப்பின் ஒரு பகுதியாக Wind எனும் குறும்படத்தை இயக்கினார்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விண்ட்’ படத்தில், மரணத்தின் வழியாக வாழ்க்கையைச் சொல்ல முயன்றிருந்தார். பெயரையும் புகழையும் பெற்றுதந்த அந்தக் குறும்படம், திரைப்பட வாய்ப்புகள் எதுவும் அவரை அண்டவிடாமல் செய்தது!
பீட்சா தந்த படம்
அடிப்படை அம்சங்களில் சமரசமற்றவர் என்றபோதும், படத்துக்குத் தேவையான சமரசத்துக்கு அவர் தயங்கியதில்லை. குடிசைப் பகுதியில் நிகழும் ‘காக்கா முட்டை’ படத்தில் மேற்கத்தியப் பின்னணி இசை ஒலிப்பது, பின்னால் அவர் விரும்பி ஏற்ற ஒரு சமரசமே.
கையில் போதிய காசு இல்லாத ஒரு நாளில், அவருடைய மகன் பீட்சா கேட்டிருக்கிறான். அந்த நொடியில்தான் ‘காக்கா முட்டை’ படத்தின் கதைக்கரு உதயமானது. அந்தப் படத்தை எழுதிய பின், அதற்குத் தயாரிப்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என நினைத்தார். அந்தச் சூழ்நிலையில்தான் இயக்குநர் வெற்றிமாறனிடமிருந்து அழைப்பு வந்தது. வெற்றிமாறனைச் சந்தித்தார், கதையைச் சொல்லி, திரைப்படமும் எடுத்தார்.
இது மணிகண்டன் பாணி
மணிகண்டனின் திரைமொழி அலாதியானது. அந்த மொழியில் மனிதமும் நெகிழ்ச்சியும் வருங்காலம் குறித்த நம்பிக்கையும் ஒருங்கே இழையோடியிருக்கும். ‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ என மூன்று படங்களை இதுவரை அவர் இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களின் கதைகளும் எளிமையான பின்னணியைக் கொண்டவை. அந்த எளிமையான கதைகளுக்குள் கொஞ்சம் சிக்கல்களைப் புகுத்தி, பின் அந்தச் சிக்கல்களைப் படிப்படியாகக் கலைத்து, மீண்டும் எளிமைக்குத் திரும்புவதே இந்தப் படங்களின் தன்மை.
‘காக்கா முட்டை’ படத்தின் சிறுவர்களுக்கு பீட்சா சாப்பிட ஆசை, ‘குற்றமே தண்டனை’ படத்தில் நாயகனுக்குக் கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள ஆசை, ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் நாயகனுக்கு வெளிநாடு செல்ல ஆசை. பாட்டி சுட்ட பீட்சாவே பரவாயில்லை என்று கடைசியில் உணரும் அந்தச் சிறுவர்கள், தொடக்கத்திலேயே அதை உணர்ந்திருந்தாலோ, கண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று உண்மையைச் சொல்லும் மருத்துவர் தொடக்கத்திலேயே அதைச் சொல்லியிருந்தாலோ, பாஸ்போர்ட் அலுவலுகத்தில் மேலதிகாரியைச் சந்திக்கும் நாயகன் தயங்காமல் முதலிலேயே அவரைச் சந்தித்திருந்தாலோ இந்த மூன்று படங்களும் அங்கேயே முடிந்திருக்கும். ஆனால், அப்படி முடிக்காமல், வாழ்க்கையின் முரண்களை மனத்தின் முரண்கள்மூலம் யதார்த்தமாக அவர் விளக்குவார். இதுவே மணிகண்டனின் பாணி.
அடிப்படையில் மணிகண்டன் ஒரு சமூக அக்கறையுள்ள மனிதர். அவருடைய திரைமொழி முழுவதும் சமூக அக்கறை நிறைந்து வழியும். பீட்சா சாப்பிட ஆசைப்படும் ஏழைச் சிறுவர்களின் முயற்சியின் வாயிலாக, சமூகத்தில் நிலவும் வர்க்க பேதங்களையும் ஊடகங்களால் குழந்தைகளின் மீது திணிக்கப்படும் பேராசைகளையும், அழகு - அழகின்மை குறித்த மதிப்பீடுகளையும் நெகிழ்ச்சியுடன் அதேநேரம் எவ்வித உறுத்தலுமின்றி காட்சிப்படுத்தியது அதற்குச் சிறு சான்று.
தேர்ந்த கதைசொல்லி
லத்தீன்-அமெரிக்கப் படங்களின் மீது மணிகண்டனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. வானம் பூத்த பூமியில், வானத்தைப் பார்த்துக்கொண்டே ஏக்கத்துடன் வாழ்ந்து மடியும் மனிதர்களைப் பற்றிய ‘கடைசி விவசாயி’ எனும் திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
தன்னை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக்கொள்ளாமல், தன் எல்லைகளை விரிவுபடுத்த முயல்வதையே தன் திரைப் பயணத்தின் பாதையாகக் கொண்டுள்ளார். விரைவில் ஒரு முழுநீள ஆக்ஷன் படத்தையோ நகைச்சுவை படத்தையோ இயக்கவிருப்பதாகச் சொல்கிறார். இயல்பிலேயே ஒரு தேர்ந்த கதை சொல்லியாக மணிகண்டன் இருக்கிறார்.
ஒளிப்பட கலைஞர் என்பதாலோ என்னவோ, கதையைக் காட்சிகளாக மட்டுமே கற்பனை செய்கிறார். அதை அந்தக் காட்சிகளின் மூலமாகவே நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறார். மணிகண்டனின் தனித்தன்மை இது. இந்தத் தன்மையே அயல்நாட்டுத் திரைப்படங்களில் தேடாமல், தன்னைச் சுற்றியிருக்கும் சமூகத்தில் இருந்தே கதையைக் கண்டறியும் இயல்பை அவருக்கு அளித்துள்ளது.
தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in