இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: புதிய அனுஷ்கா

செய்திப்பிரிவு

சில படங்களில் நடிப்பதற்காக கூட்டிய உடல் எடையைக் குறைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார் அனுஷ்கா. தற்போது உணவு, உடற்பயிற்சி ஆலோசகர் லூக் கூடினோவிடம் பயிற்சிபெற்று முற்றிலும் புதிய தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். எடையை அதிரடியாகக் குறைத்த தனது புதிய ஒளிப்படங்களை வெளியிட்டிருக்கும் அனுஷ்கா, ‘பாகமதி’ படத்துக்குப் பின் எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை.

தமிழ் மற்றும் ஆங்கிலம்!

தமிழ் தவிர தெலுங்கு அல்லது இந்தியில் ஒரு படத்தை இயக்கித் தயாரிப்பது தொடக்கம் முதலே இருக்கும் வழக்கம். இதைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறார் ‘மாயன்’ படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் ராஜேஷ் கண்ணன். இவர் நடிகர் அஜித்தின் தொழில்நுட்ப ஆலோசகர். கோடம்பாக்கத்தில் ‘ஸ்கிரிப்ட் டாக்டர்’ என்று பெயரெடுத்திருக்கிறார்.

எதற்காக ‘மாயன்’ படத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரேநேரத்தில் தயாரிக்கிறீர்கள் என்றபோது, “எல்லா நிலப்பரப்புக்கும் பொருந்தக்கூடிய யுனிவர்செல் ஸ்டோரி இது. எந்த கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இந்தக் கதையுடன் எளிதாகத் தொடர்புபடுத்திக்கொள்ளமுடியும். சின்ன வயதில், தப்பு செய்தால் ‘சாமி கண்ணைக் குத்தும்’ என்று சொல்லி வளர்த்தார்கள். அது உண்மையா, பொய்யா என்பதைச் சுவராசியமாகக் கூறும் கதை.

என்னளவில் மாயன் என்றால் சிவன். ஒருவன் தனக்குள் இருக்கும் சிவனைக் கண்டறியும் பயணம் இது. ஆங்கிலத்திலும் எடுப்பதால் சில ஆங்கிலப் படங்களில் நடித்த அனுபவம் கொண்ட மலேசியத் தமிழரான வினோத்தை கதாநாயகனாகத் தேர்வு செய்திருக்கிறோம். விஷுவல் எஃபெக்டிலும் படம் உலகத் தரத்துடன் இருக்கும்” என்கிறார்.

கூட்டணி

ஜானுவாக ‘96' படத்தில் கலங்கடித்த த்ரிஷா, அடுத்த ஆக்‌ஷன் கதாநாயகி அவதாரம் எடுத்திருக்கிறார். சாகசங்கள் நிறைந்த ஒரு முழுநீள ஆக் ஷன் கதையில் நடிக்கும் த்ரிஷாவுடன் கூட்டணி அமைத்திருக்கும் மற்றொருவர் சிம்ரன். ‘சதுரம் 2’ என்ற திரில்லர் படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணனின் புதிய படம் இது. இதுதவிர ‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குநர் சரவணன் இயக்கத்திலும் நடிக்கிறார் த்ரிஷா.

மறுப்பு

சமூக அக்கறை கொண்ட நாயக நடிகரான ஆரி, தற்போது ‘அலேகா' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவரது பிறந்த நாளைக் கொண்டாட, ஐந்து கிலோ எடையுள்ள கேக்கை படக்குழுவினர் கொண்டுவர, “கேக் இயற்கை உணவு கிடையாது” என்று கூறி கேக் வெட்ட மறுத்துவிட்டார் ஆரி. அதற்கு மாற்றாக, அங்கிருந்த அனைவருக்கும் இளநீர் கொடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார்.

சங்கம்

திரையிடல் மற்றும் சினிமா பைனான்ஸ் துறையில் அடிக்கடிப் பேசப்படும் நபர் திருப்பூர் சுப்ரமணியன். அவரைத் தலைவராக கொண்டு தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதுவரை எந்த அமைப்புக்குள்ளும் வராத சினிமா பைனான்சியர்கள், தங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட சங்கம் ஒன்றை உருவாக்கியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.

SCROLL FOR NEXT