இந்து டாக்கீஸ்

டிஜிட்டல் மேடை 14: பெண்ணுலகம் பேசும் படைப்புகள்

எஸ்.எஸ்.லெனின்

பெண்களின் உலகம் பேசும் படைப்புகள் புதுமையும் சுவாரசியமும் சேர்ந்தவை. அவற்றை அமேசான் பிரைமின் ஓர் இணையத்தொடர், நெட்ஃபிளிக்ஸின் ஒரு திரைப்படம் ஆகிய இரு படைப்புகளில் பார்க்கலாம்.

அமேசான் பிரைம் வீடியோ வரிசையில் கடந்த வாரம் வெளியான இணையத் தொடர் ‘ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்!’

(Four More Shots Please!). பல்வேறு குணாதிசயங்கள், வாழ்க்கை முறைகள் கொண்ட நான்கு பெண்களை நட்பு ஒரு கோட்டில் நிறுத்துகிறது. தெற்கு மும்பையின் நவநாகரிகப் பெண்களாக வரும் இவர்கள் ஒரு மது விடுதியில் அடிக்கடி சந்தித்து அளவளாவுகிறார்கள். தங்களது ஆசைகள், லட்சியங்கள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள், தடுமாற்றங்கள் என சகலத்தையும் பகிர்ந்து ஆசுவாசம் அடைகிறார்கள்.

முதல் பெண் விவாகரத்துக்குக் காத்திருக்கும் வழக்கறிஞர். கணவனையும் நான்கு வயதுக் குழந்தையையும் கணவனின் புதிய காதலி கவர்வதை இயலாமையுடன் வேடிக்கைப் பார்க்கிறாள். அடுத்த பெண் ஆன்லைன் பத்திரிகையாளர். புலனாய்வுப் புலியான அவளை லாபவெறி கொண்ட பத்திரிக்கை நிறுவனம் கிசுகிசு செய்தி எழுத நிர்ப்பந்திக்கிறது.

மூன்றாவது பெண் ஜிம்மில் பணிபுரியும் உடற்பயிற்சி ஆலோசகர். தனது தனித்துவ பாலின ஈர்ப்புடன் வாழ்க்கையை அதன் போக்கிலும், சுயமரியாதையை இழக்காதும் வாழ முயல்கிறாள். கடைசிப் பெண் வெளிநாட்டு மாப்பிள்ளைக்காகத் தனது அம்மாவால் ‘சைஸ் ஸீரோ’ வடிவுக்காக நிர்பந்திக்கப்படுகிறாள்.

இந்த நால்வரும் மில்லினியம் உலகத்தின் நவயுவதிகளாக சரவெடி கட்டுடைப்புகளை நிகழ்த்துகின்றனர். பெண்ணின் மீதான புனிதம், தியாகம், கட்டுப்பெட்டி கற்பிதங்கள், விழுமியங்கள், இத்யாதிகளைக் இவர்கள் காலில் போட்டு நசுக்குகிறார்கள். மாலையானதும் பாரில் சந்தித்து தாகசாந்தியுடன் தங்களது அன்றைய தினத்தின் தடுமாற்றங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

திரையில் ஆண் அடிக்கும் கூத்துக்களை ரசிக்க முடிந்த பார்வையாளர்களுக்கு, பெண் தனது பிம்பங்களை உடைத்துக்கொண்டு ஆனந்தக் கூத்தாடுவதை பார்ப்பது மாறுபட்ட அனுபவமாக இருக்கும். திரைக்குப் பின்னாலும் கெத்தான பெண்கள் மட்டுமே அடங்கிய படைப்பாளர் குழு மெனக்கெட்டிருப்பது காட்சிக்குக் காட்சி பளிச்சிடுகிறது.

முக்கியமாய் பாலியல், பாலீர்ப்பு குறித்தெல்லாம் இந்தப் பெண்கள் பாவனையற்று கடந்து செல்வதும், சுயத்தை விட்டுத்தராது வாழ்வைக் கொண்டாடுவதுமாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். ஆண்களின் உலகத்தில் எளிதில் ஊடாடுவது, ஆணைவிட சக பெண்களே பெண்ணுக்குக் குடைச்சலாவது என சகலத்தையும் குறுக்குவெட்டில் துழாவுகிறார்கள்.

முதன்மைப் பாத்திரங்களான சயானா, கீர்த்தி, பானி, மான்வி என நான்குப் பெண்களுடன் மிலிந்த் சோமன், லிசா ரே போன்ற பாலிவுட் முன்னாள்களும் தொடரில் உண்டு. 10 அத்தியாயங்கள் அடங்கிய தொடரின் முதல் சீஸனை அனுமேனன் இயக்கி உள்ளார். (18+, கண்டிப்பாகப் பெரியவர்களுக்கு மட்டும்) குழந்தைகள் அருகில் இருக்கும்போது மறந்தும் ரிமோட்டை அழுத்திவிடாதீர்கள்.

பெண்ணைத் துரத்தும் அத்துமீறல்கள்

அமேசான் தொடர் நகைச்சுவை கலந்து பெண்ணுலகைப் பேசியதென்றால், நெட்ஃபிளிக்ஸின் ‘சோனி’ திரைப்படம் அவசியமான ஆழப் பார்வையில் அணுகியுள்ளது.

நாட்டின் தலைநகர் என்பதைவிடப் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் பிரபலமாகும் டெல்லியில் கதை நடக்கிறது. பெண்ணிடம் அத்துமீறும் ஆணைக் கண்டாலே வெகுண்டெழும் உதவி ஆய்வாளர் சோனி (கீதிகா வித்யா), அவரை கடிந்துகொள்ளும் அதேநேரம் ஆழ்ந்து நிதானத்துடன் செயல்படும் பெண் உயரதிகாரி கல்பனா (சலோனி பாத்ரா) என டெல்லி காவல்துறையில் பணியாற்றும் இரு பெண்களின் மூலம் படம் நகர்கிறது.

பெண் சந்திக்கும் சகலப் பிரச்சினைகளையும் பணி சார்ந்து எதிர்கொள்ளும் இந்தப் பெண்களுக்கு, அவர்களின் சொந்த வாழ்க்கையிலும் அதே நெருடல்கள் வேறு வடிவங்களில் வருகின்றன.

பெண் எத்தனை உயரம் சென்றாலும் அவளைப் பெண் என்பதற்காகவே தாழப் பார்க்கும் சமூகம், அதிகார வர்க்கத்தின் ஆட்டம், சக மனுஷியைத் துச்சமாகக் கருதும் ஆண், படிப்பு பதவி எத்தனையிருந்தும் தடுமாற்றத்திற்கு ஆளாகும் பெண்ணின் இருப்பு, கேள்விக்குறியாகும் பாலின சமத்துவம் என சமூகத்தின் இயலாமை மீதும் அதைக் கண்டுகொள்ளாத மனிதர்களின் போதாமை மீதும் வெளிச்சம் அடிக் கிறார்கள்.

வசனங்களைவிடக் காட்சி சட்டகத்தில் இதர அம்சங்களாலும் உரக்கப் பேசுகிறார்கள். அவ்வப் போது டெல்லி பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்கான அறிவிப்புகளுடன் பிரதமரின் வளர்ச்சி திட்டங்கள், சாதனைகளை கலந்து ஒலிக்கும் வானொலி செய்தி ஓர் உதாரணம். திரைவிழாக்கள் கண்ட ‘சோனி’ படத்தைச் சற்றே பொறுமையும் அவகாசமும் ஒதுக்கி அவசியம் பார்க்கலாம்.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

SCROLL FOR NEXT