இந்து டாக்கீஸ்

‘பேரன்பு’ தரப்போகும் வாழ்க்கை! - இயக்குநர் ராம் நேர்காணல்

கா.இசக்கி முத்து

“கதை என்ன கேட்குதோ, அதன் கதாபாத்திரங்களின் மனநிலை எப்படி இருக்கிறதோ அதுக்கு ஒரு வெப்பம் இருக்கு. அப்படி ‘பேரன்பு’ படத்தில் மனிதர்கள் இல்லாத இடமா, குருவிகள் சாகாத இடமா ஒரு இடம் வேண்டும் என்று நினைக்கிற கதாபாத்திரம்தான் பிரதானம். ஆகையால் ரொம்ப அமைதியான இடமா இருக்கிற இடத்தில் ஷூட்டிங் பண்ணியிருக்கேன்.

பார்ப்பவர்கள் கண்ணுக்கு அவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும்” என்று கையில் சூடான தேநீர் கோப்பையுடன் பேச்சைத் தொடங்கினார் இயக்குநர் ராம். டீஸர், ட்ரெய்லர், போஸ்டர்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவரும் ‘பேரன்பு’ குறித்து ராமிடம் பேசியதிலிருந்து..

இயற்கை சார்ந்த இடங்கள்தான் உங்களுக்குப் பிடிக்குமா?

சிறுவயதிலிருந்தே ஊர் சுற்றிக்கொண்டே இருக்கும் ஆள் நான். இயற்கை சார்ந்த படங்கள் ரொம்பவே பிடிக்கும். பிடிச்ச இயக்குநர் டேவிட் லீன். இயற்கை சார்ந்த படங்கள் எடுக்க அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். அழகாக இருக்கும் என்பதற்காக மலை உச்சியில் எடுப்பதில்லை. இன்னும் முழுமையாக இயற்கை சார்ந்த படங்கள் பண்ண முடியவில்லை. ஆனால், கதையின் தேவை கருதி பண்ணிட்டு இருக்கேன்.

‘பேரன்பு' மம்மூட்டிக்காக எழுதப்பட்ட கதையா?

‘கற்றது தமிழ்' படத்துக்கு முன்பாகவே யோசித்த கதை. அப்போது மம்மூட்டியைத் தெரியாது. அக்கதையை 2015-ல் மறுபடியும் எழுதத் தொடங்கினேன். ‘தங்கமீன்கள்' படத்தில் பத்மப்ரியா சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் மம்மூட்டியுடன் நடித்திருந்தார். அவரிடம் “எப்போதாவது மம்மூட்டி சாரைப் பார்த்தீர்கள் என்றால், ராம் என்ற இயக்குநர் உங்களுக்காக ஒரு கதை வைச்சிருக்கார். அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்படுகிறார்” என்று சொல்லுங்கள் என்றேன்.

அவர் வழியே மம்மூட்டிக்குத் தகவல் போயுள்ளது. அவரும் சரி வரச் சொல்லுங்கள் கேட்கிறேன் என்றவுடன் போய் சொன்னேன். ‘பண்ணலாம்’ என்றார்.

அப்போது ‘தரமணி' படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அது முடிந்தவுடன் பண்ணலாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அவ்வப்போது போன் செய்து ஆர்வமாகக் கேட்பார். இறுதியில் தேனப்பன் சாரிடம் அவரே சொல்லி, தயாரித்தார். இந்தப் படம் தொடங்கும்போதே, திரைப்பட விழாக்களுக்கு எடுத்துப் போக வேண்டும் என்ற ஆசையிருந்தது. அது நிறைவேறி கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது மக்களின் வரவேற்புக்காகக் காத்திருக்கிறேன்.

‘பேரன்பு' என்ன தரும்?

நீங்கள் வாழக்கூடிய வாழ்க்கை ரொம்ப சந்தோஷமானது என்று உணர்வீர்கள். எவ்விதமான பிரச்சினைகள், சிக்கல்கள், சங்கடங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி சந்தோஷமாக வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கை வரும். குரோதம், எரிச்சல், வருத்தம், இயலாமை ஆகியவற்றைத் தாண்டி நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும் என்று நிறைவை இந்தப் படம் கொடுக்கும். அதனால்தான் ‘பேரன்பு' என்ற தலைப்பையே வைத்தேன்.

இந்தப் படம் சோகமான படம் என்று எண்ணிவிடாதீர்கள். ஒரு மனிதர் அவருடைய வாழ்க்கையில் சந்திக்கிற நிகழ்ச்சிகள் மூலமாக நம் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமானது, பேரன்பானது என்று கண்டெடுப்பதுதான் இப்படமே. படம் முடிந்தவுடன் அன்பும் கனிவும்  நிறைந்த ஒரு மனநிறைவும் மகிழ்ச்சியும் சொற்ப நேரத்துக்காவது கிடைக்கும்.

இந்தப் படத்துக்காக கிடைத்த பாராட்டுகளில் உங்கள் மனதுக்குப் பிடித்தது யாருடையது?

மொழி தெரியாத மக்கள் அவர்களுடைய வீட்டுக்குச் சாப்பிட கூப்பிட்டதையும், கட்டிப் பிடித்ததையும் மறக்க முடியாது. இன்னும் அவர்கள் என்னோடு தொடர்பில் இருப்பது, சீனாவில் இப்படத்தை வெளியிட அவர்கள் முயற்சி எடுப்பது என நிறைய விஷயங்கள் நடந்தன. தமிழ்ப் படங்கள் குறித்து ஆங்கிலத்தில் விமர்சனம் எழுதும் ஓலஃப் முல்லர் என்ற ஜெர்மன் விமர்சகர் இருக்கிறார்.

திரைப்படம் குறித்து நிறைய படித்துள்ளார். அவர் ‘கற்றது தமிழ்' பார்த்துவிட்டு எழுதிய கட்டுரையை நானே நீண்ட நாட்கள் கழித்துத் தான் படித்தேன். அவர் ‘பேரன்பு' பார்த்துவிட்டு, இதுதான் உன் சிறந்த படம் என்றார். அவரைத் தாண்டி பாரதிராஜா சார் தொடங்கி பல நண்பர்கள் பாராட்டினார்கள். என்னைவிட, படத்தை ரொம்ப பாராட்டினார்கள்.

peranbu-4jpgright

திரைப்பட விழாக்களில் பாராட்டு பெற்றிருக்கும் ஒரு படத்துக்கு வித்தியாசமான போஸ்டர்கள், டீஸர்கள் என மிகவும் மெனக்கெடுகிறீர்களே?

இந்தியாவில் இருக்கக்கூடிய முக்கியமான 10 நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி. அவர் நடித்துள்ள படம். கேரளாவில் இப்படத்தின் ட்ரெய்லரை கைதட்டி ரசித்து, விளம்பரப் பலகைகள் எல்லாம் வெச்சுட்டு இருக்காங்க. தமிழில் இப்படத்தைப் மிகப்பெரிதாக விளம்பரப்படுத்த வேண்டியதுள்ளது. படம் வெளியாகிறது என்றவுடன், யாருமே நாளைக் காலையில் படத்துக்கு வந்துவிட மாட்டார்கள். ஒவ்வொரு படத்தையும் விளம்பரப்படுத்த, ஏதாவது ஒன்று புதிதாக பண்ண வேண்டியதுள்ளது. இணையத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை புதிதாக ஏதாவது தகவல் வந்து கொண்டே இருக்கிறது.

இதற்கு இடையில் நமது விளம்பரத்தையும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். பட வெளியீட்டுக்காக உதவி இயக்குநர்களோடு உட்கார்ந்து புதிதாகச் சிந்திக்க வேண்டிய காலமிது. மக்களைத் திரையரங்குக்கு அழைத்துவர வேண்டிய வேலையும் ‘பேரன்பு' மாதிரியான படங்களுக்கு இயக்குநருடைய வேலைதான். நமது படத்தை நாமளே விளம்பரப்படுத்துவது ஒரு சாபம்தான் என்றாலும், செய்துதானே ஆக வேண்டும். எதைச் சொன்னால் பார்க்கக் கூட்டம் வருகிறது என்பதை எல்லாம் இதன்மூலம் கற்றுக்கொள்ள முடிகிறது.

SCROLL FOR NEXT