இந்து டாக்கீஸ்

திரைப் பார்வை: பொம்மலாட்டம்! - தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் (இந்தி)

டோட்டோ

ஒரு பட்டத்து யானை தற்செயலாக மாலை அணிவித்த ஒருவர் மன்னர் ஆவதில் சுவாரசியமான கதைத் தன்மை உண்டு. முதல் சீக்கிய பிரதமர், காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வராதவர், நேருவிற்குப் பின்னர் இருமுறை அந்தப் பதவிக்குதேர்ந்தெடுக்கப்பட்டவர் போன்ற அடையாளங்களைக் கொண்டவர் முன்னாள் பிரதமர்  மன்மோகன் சிங்.

அவரைப் பற்றி அவரின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தைத் தழுவி, அதே தலைப்பில் சுனில் போஹ்ரா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் விஜய் ரத்னாகர் இயக்கத்தில் அனுபம் கெர் முதன்மைக் கதாபாத்தி ரத்தை ஏற்று நடித்திருக்கும் படம்.

 2004-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தான் பிரதமர் ஆகாமல் மன்மோகன் சிங்கை முன்மொழிந்தார். அவர் பிரதமர் பதவி ஏற்றபோதுபோது நடந்த சிக்கல்கள், சூழல்கள், எதிர்ப்புகள் கடந்து பதவிக்காலம் முடிந்து அடுத்த தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது வரையான நிகழ்வுகளின் தொகுப்பே இத்திரைப்படம். 

ஒரு திராபையான குறும்படம் அல்லது 15 வினாடிகள் நேரம் கொண்ட விளம்பரப் படத்துக்குக் கூட நோக்கம் என்ற ஒன்று இருக்க வேண்டும். அதுவும் நாடறிந்த ஒரு தலைமையைப் பற்றித் திரைப்படம் எடுக்கும்போது அதைச் சுவாரசியமாகவும், கூர்மையாகவும் தர வேண்டும்.

வாரிசு அரசியல், உட்கட்சி எதிர்ப்பு, எதிர்க்கட்சியின் சவால்கள், உளவியல் அழுத்தம், கட்சி விசுவாசம், செயல்பாட்டில் சுதந்திரமின்மை, மக்கள் நலன், பொருளாதாரம், ஊழல் குற்றச்சாட்டுகள் எனப் பேச எவ்வளவோ விஷயங்கள் இருந்தும் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஏதோஒரு சின்ன நிறுவனத்தில் நடைபெறும் சம்பவங்கள் நாடகம் போலவும் தட்டையானதொரு பிரச்சாரமாகவும் உருவாகி உயிரை எடுக்கிறது திரைக்கதையும் படமாக்கமும். முழுக்க முழுக்க ஒரு பகடி வகைத் திரைப்படமாகக் கொடுத்திருந்தால் கூட சுவாரசியம் கூடியிருக்கும்.

இருந்தும் இதில் பாராட்டப் பட வேண்டியவர்கள் மூவர். மன்மோகன் சிங்காக வரும் அனுபம் கெர் (நிஜத்தில் இவர் தீவிர பாஜக ஆதரவாளர்) சஞ்சய பாருவாக வரும் அக்ஷய் கன்னா, சோனியா காந்தியாக வரும் ஜெர்மானிய நடிகை சுசான் பெர்னர்ட். பொம்மை போல நளின நடை, சன்னமான பேச்சு, கனத்த மௌனம் என அனுபம் கெரின் பாத்திர வெளிப்பாடு சரியாக வந்திருந்தாலும் வெகுசில இடங்களில் அதுவே அதீதமாகவும் வறட்டுக் கேலியின் தொனியாகவும் மாறி அந்தக் கதாபாத்திரத்தை நீர்த்துப்போகச் செய்துவிடுகிறது.

அதிக தன்னம்பிக்கை கொண்ட பத்திரிகையாளராக வரும் அக் ஷய் கன்னா அவ்வப்போது பார்வையாளர்களிடம் பேசுவதும் தேவையில்லாத கவனக் கலைப்பாகிவிடுகிறது. சுமாரான நிகழ்வுகள், தெரிந்த சில நடிகர்கள், வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்பம் இதை மட்டுமே நம்பி, திரையரங்கில் எந்த இடத்திலும் கைதட்டல் சத்தத்திற்கு இடமளிக்காமல் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் இருக்கும் தேர்தல் அரசியல் நோக்கம் காட்சிகள் தோறும் தெரிகிறது. இவ்வகைப் படங்கள் நல்ல திரையனுபவமாக அமைய வேண்டுமானால் அவற்றில் துளியும் மலிவான பிரச்சார அரசியல் இல்லாமல் திரைக்கதை எழுதினால் மட்டுமே அது சாத்தியம்.

தொடர்புக்கு: tottokv@gmail.com

SCROLL FOR NEXT